Wednesday, 5 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


குடும்பப் பிரிவினைகள்


அபூதாலிபின் மக்களான தாலிபும் அகீலும் தமது இளைய சகோதரர்களான ஜஅபர், அலீ ஆகியோரின் முன்மாதிரியைப் பின்பற்றாது விட்டனர். தந்தையாரைப் போல அவர்களும் புதிய மதத்தைச் சாராதவர்களாகவே இருந்தனர். என்றாலும் அவர்கள் பொறைமையுடையோராய் விளங்கினர். அபூலஹ்பின் போக்கு முற்றும் மாறானதாக இருந்தது. குறைஷித் தலைவர்கள் அண்மையில் நபிகளாருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் வெளிப்படையாகவே தன் பகைமையைக் காட்டி வந்தார் இவர். அவரது மனைவி, ஷம்ஸிய கோத்திரத்துத் தலைவர் அபூஸுப்யானின் சகோதரி, உம்ம் ஜமீலும் நபிகளார் மீது ஆழ்ந்த வெறுப்பினைக் கொண்டிருந்தார்.

உம்ம் ஜமீலும், கணவர் அபூலஹப்பும் இணைந்து, தமது இரு புதல்வர்களையும் வற்புறுத்தி, ருகையாவுடனும் உம்ம் குல்தூமுடனுமான அவர்களது திருமண ஒப்பந்தங்களை முறித்து விடச் செய்தனர். இத்திருமணங்கள் ஏற்கெனவே நிகழ்ந்திருந்தனவோ அன்றி முடிவு முடிவு செய்யப்பட்ட நிலையில் தான் இருந்தனவோ என்பது குறித்துத் தெளிவில்லை. மணமுறிவுகளின் காரணமாக உம்ம் ஜமீல் மிக்க மகிழ்வுற்றாலும் அம்மகிழ்ச்சி நீடிக்க முடியவில்லை. ஏனெனில் அவரது ஒன்று விட்ட சகோதரரும், பெரும் செல்வந்தரும், உமையாக் கோத்திரத்தவருமான உத்மான்-இப்ன்-அப்பான், ருகையாவைத் திருமணம் செய்துக் கொள்ளக் கேட்டு மணஞ்செய்து கொண்டார். இத்திருமணம் நபிகளாருக்கும் கதீஜாவுக்கும் மன நிறைவையளித்தது. ருகையா மகிழ்ந்தார். மருமகனும் மிக்க விசுவாசத்துடன் நடந்து கொண்டார்.
உத்மான் மீது நன்றி பாராட்ட மேலும் ஒரு முக்கியமான காரணமும் இருந்தது. ருகையாவே நபிகளாரின் புதல்வியருள் மிக்க அழகானவராகவும், அவரது தலைமுறையின் அழகிற்சிறந்த மாதர்களுள் ஒருவராகவும் விளங்கினார். அத்தோடு உத்மானும் அழகு நிரம்பியதோர் ஆண்மகனாயிருந்தார். அவர்கள் இருவரையும் ஒன்றுபடக் காண்பதே மனமகிழ்ச்சியை ஊட்டுவதாயிருந்தது.

“ இறைவன் அழகானவன் ; அவன் அழகை விரும்புபவன் ”
- நபிகளார் வாக்கு ஹ. 4 : 133-4

அவர்களது திருமணம் நடந்து சில காலஞ் செல்ல, மக்காவினின்றும் அவர்கள் வெளிச்சென்றிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் நபிகளார் செய்தியொன்றனை அவர்களுக்கு அனுப்பினார்கள். செய்தி கொண்டு சென்ற தூதுவர் திரும்பி வர வழமையிலும் கூடிய நேரம் எடுத்திருந்தார். கால தாமதத்துக்கான காரணங்களை விளக்க தூதுவர் முனைந்த போது அவரை இடைமறித்து நபிகளார் கூறினார்கள் :

“ உமது காலதாமததுக்கான காரணத்தை நீர் விரும்பக்கூடுமாயின் நான் கூறுகின்றேன் ; நீர் அங்கு நின்று உத்மானையும் ருகையாவையும் பார்த்துப் போய் அவர்களது அழகை வியந்து கொண்டிருந்தீர் ” - ஸுஹைவி.205



நபிகளாரின் மாமியார் அர்வாவின் மனதில் ஏற்பட்ட மாற்றம் அவரையும் இஸ்லாத்தினுள் இணைந்து கொள்ளச் செய்தது. இம்மத மாற்றத்துக்கு உடனடிக் காரணமாக அமைந்தது, அவரது மகன் துலைபின் தூண்டுதலாகும். பதினைந்து வயதே ஆன இளைஞராயிருந்த துலைப் அண்மையில்தான் அர்கமின் இல்லத்தில் வைத்து தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தனது தாயாரிடம் கூறியபோது அர்வா கூறினார் : “ ஆண்கள் செய்யக் கூடியனவற்றை நாம் செய்யக் கூடுமாயின் எமது சகோதரனின் மகனை நாம் பாதுகாக்கலாம் ”. துலைப் இதனை ஏற்க மறுத்தவராக, “ இஸ்லாத்தினுள் நுழைந்து அவரைப் பின்பற்றுவதற்கு உங்களுக்கு இருக்கும் தடையென்ன? உங்கள் சகோதரர் ஹம்ஸா அப்படிச் செய்திருக்கின்றாரே! ” என்றார். வழக்கம் போல தனது சகோதரியர் என்ன செய்கிறார்களெனப் பார்ப்போம் என அவர் கூறவே, மகன் அவரை இடைநிறுத்தி, “ இறைவன் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கின்றேன். அவரிடம் சென்று, அவருக்குச் சோபனம் கூறி அவரை நீங்கள் விசுவாசிப்பதாகவும், வணக்கத்துக்குறிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லையென்றும் உறுதி கூறுங்கள் ” என்றார். தாயாரும் அவ்வாறே செய்தார். பின்னர் உறுதிவாய்ந்தவராகத் தன் சகோதரன் மகன் முஹம்மதுக்கு இழைத்த கொடுமைகட்காகச் சகோதரன் அபூலஹப்பைக் கண்டிக்கலானார் அர்வா.


கதீஜாவின் உறவினரைப் பொறுத்தளவில், அவருடைய அரைச் சோதரர் நவ்பல், இஸ்லாத்தின் பயங்கரமானதோர் எதிரியாக மாறிவிட்டிருந்தார். என்றாலும் அவருடைய மகன் அஸ்வத் இஸ்லாத்தினுள் நுழைந்து கொள்ள அது தடையாக இருக்கவில்லை. நவ்பலின் பகைமையை ஓரளவு ஈடு செய்வதாக அமைந்தது மகனுடைய மதமாற்றம். கதீஜாவின் சகோதரர் மகனும், ஏற்கெனவே பல வருடங்கள் மருமகனாக இருந்து வருபவருமான, ஷம்ஸிய கோத்திரத்து அபுல்-ஆஸ் இஸ்லாத்தைத் தழுவாமை கதீஜாவுக்குப் பெரும் ஏமாற்றத்தையளித்தது. அவர் மனைவி ஸைனப் இஸ்லாத்தை ஏற்றிருந்தார். அபுல் ஆஸின் கோத்திரத் தலைவர்களும் பிறரும் ஸைனபை விவாகரத்து செய்து விடும்படி அவரை பலவாறு வற்புறுத்தலானார்கள். அதற்கீடாக, மக்காவிலேயே மிக்க செல்வமும், கீர்த்தியும், அழகும், சிறந்த குடும்பத் தொடர்புகளும் கொண்டதொரு பெண்ணைப் பார்க்கும்படியும் , அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எவ்வாறாயினும் அத்திருமணத்தை நிறைவேற்றி வைப்பதாகவும் உறுதி கூறினர். இதற்கான ஒரே நியதி அவர் ஸைனபை மணவிலக்கு செய்ய வேண்டுமென்பதாகும். என்றாலும் ஸைனபும் அபுல்-ஆஸும் நெருங்கிய அன்புடையவர்களாக வாழ்ந்து வந்தார்கள். தனது துணைவர் இஸ்லாத்தினுள் நுழைந்து கொள்ள வேண்டுமென எப்போதும் பிரார்த்தனை செய்து வந்தார் ஸைனப் ; அபுல்-ஆஸோ மிக்க உறுதியுடன், தனக்கு வேண்டிய துணைவியாரே தன்னிடம் இருப்பதாகவும் வேறெவரும் தனக்கு வேண்டியிருக்க வில்லையென்றும் தன் கோத்திரத்தாரிடம் கூறி நின்றார்.

கதீஜாவின் மற்றுமொரு சகோதரர் ஹிஷாமின் மகனான ஹகீம் - இவர்தான் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் ஸைதை அன்பளிப்பாகக் கொடுத்தவர் - அபுல் ஆஸைப் போலவே தனது மாமியார் மீதும், உறவினர் மீதும் அளவிறந்த பற்றுதல் கொண்டிருந்தாலும் குறைஷியக் கடவுளரை கைவிடாது வழிபட்டு வரலாயினர். எனினும் ஹகீமின் சகோதரர் காலித் இஸ்லாத்தில் சேர்ந்து கொண்டார்.


“ நபியே! நீர் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்திவிட நிச்சயமாக உம்மால் முடியாது. எனினும், அல்லாஹ், தான் விரும்பியவர்களை நேர்வழியில் செலுத்துகின்றான் ” - அல்குர்ஆன் : 28:56

இவ்வாசகத்தின் மூலமான உண்மை குர்ஆனில் அடிக்கடி மீட்டப்பட்டு வருகின்றது.

நபிகளாரது பொறுப்புணர்ச்சியின் பளுவை இவ்வாறான வாசகங்கள் சிறிது இலேசாக்கி வைத்தாலும் கூட, தமது மக்ஸுமிய ஒன்று விட்ட சகோதரர் அப்த்-அல்லாஹ்வின் துயர வார்த்தைகளின் தாக்கத்தைத் தணிப்பதாக அவை அமையவில்லை. இதிலும் கூடிய வருத்தத்தைத் தருவதாக அமைந்தது, நபிகளாரின் பெரிய தந்தையார் ஹாரிதுடைய மகன் அபூஸுப்யானுடைய போக்காகும். அபூஸுப்யான் நபிகளாரின் உடன் பிறவாச் சகோதரர்; வளர்ப்புச் சகோதரர்: முன்னைய நாள் நண்பர். தமது போதனைகளுக்கு அபூஸுப்யான் செவி சாய்ப்பாரென எதிர்ப்பார்த்திருந்தனர் நபிகளார். ஆனால் இப்போதனைகள் அவர்களிடையே பெரும் பிளவுகளையே ஏற்படுத்தின.

அபூஸுப்யானின் காழ்ப்புணர்வு காலஞ்செல்லச் செல்ல அதிகரித்துச் சென்றது. அவருடைய சிறிய தந்தையார் அபூலஹப்பின் செல்வாக்கும் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். மேற்கண்ட வாசகங்களின் உண்மையை உணரச் செய்வோராக மேலும் பலர் இருந்தனர்:



அபூ-பக்ரைப் பின்பற்றி அவரது மனைவி உம்ம்-ரூமான் இஸ்லாத்தினுள் சேர்ந்தார். அபூ-பக்ரின் மகன் அப்த்-அல்லாஹ், மகள் அஸ்மா ஆகியோரும் தந்தையாரைப் பின்பற்றினர். இவர்களிருவரும் இறந்து போயிருக்கக் கூடிய முன்னைய ஒரு மனைவி மூலம் கிட்டியவர்கள். உம்ம்-ரூமான் இப்போது அபூ-பக்ருக்கு மற்றுமொரு மகளைப் பெற்றுக் கொடுத்திருந்தார். மகளை ஆயிஷா எனப் பெயரிட்டழைத்தனர்.

ஸைதின் மகன் உஸாமாவைப் போலவே ஆயிஷாவும் இஸ்லாத்தினுள் பிறந்த முதல் குழந்தைகளுள் ஒருவர்.



இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment