Sunday, 2 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


அவ்ஸ்களும்
கஸ்ரஜ்களும்

அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தார்கள், யத்ரிபில் தம்மோடு வாழ்ந்து வந்த யூத கோத்திரத்தார்களுடன் பலவித உடன்படிக்கைகள் செய்திருந்தனர். எனினும் இவர்களிடையிலான உறவுகள் எப்போதும் சுமுகமானவையாக இருக்கவில்லை. பிரச்சினைகள் பல உருவாகி, உறவுகள் பிரச்சினைக்குறியனவாயின. இறவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகத்தவராக, ஏக தெய்வ வணக்கம் செய்து வந்த யூதர்கள், பல தெய்வ வணக்கஸ்த்தரான அறபிகளை வெறுத்து வந்தனர். என்றாலும் தொகையில் மிகைத்தவர்களென்ற காரணத்தால் அறபிகளை கெளரவித்து வாழ வேண்டிய நிலையுமிருந்தது. உறவுகள் கசந்து விரக்தியுற்ற சந்தர்ப்பங்களில் யூதர்கள் கூறுவார்கள் :

“ இறைதூதர் ஒருவர் அனுப்பப்பட வேண்டிய காலம் சமீபத்திலிருக்கின்றது. அவரோடு இணைந்து உங்களை நாம் அழித்து விடுவோம் - ஆத், இராம் ( தமக்கனுப்பப்பட்ட இறைதூதர்களுக்கு பணிய மறுத்ததனால் திடீரென அழிவுக்குள்ளாக்கப்பட்ட ஆதி அறபு கோத்திரங்கள் ) கோத்திரத்தாரை அழித்தது போல ”.
இறைதூதர் எங்கிருந்து வருவார் என வினவப்பட்ட சந்தர்ப்பங்களில் யூத ரப்பிகளும், குறி சொல்வோரும் யெமன் பிரதேசத்தையே சுட்டிக் காட்டினர். யெமனின் திசையிலேயே மக்காவும் இருந்தது. தற்போது மக்காவில் ஒருவர் தன்னை இறைதூதராகப் பிரகடனம் செய்திருப்பதனைக் கேள்விப்பட்ட யத்ரிபின் அறபிகள் தம் செவிகளைத் திறந்து கொண்டனர். அன்னாரது போதனைகள் குறித்த செய்திகள் அவர்களது ஆர்வத்தைக் கிளறுவனவாயின. பழமைப்பேண் மதக் கருத்துக்கள் குறித்து ஏற்கெனவே அறபிகள் சிறிது அறிவுடையராகவே இருந்தனர். சுமுகமாக பழகி வந்த காலங்களின் போது, யூதர்கள் இறைவனின் ஏகத்துவம் குறித்தும், மனிதனின் இறுதி நிலைமைகள் குறித்தும் அறபியருக்குக் கூறுவதுண்டு. இறந்த பின்னர் உயிர்ப்பிக்கப்படுவோமென்ற கருத்தைப் பல் தெய்வ வணக்கஸ்த்தரான அறபிகளால் புரிந்து கொள்ள முடிய வில்லை. இதனை அவதானித்த ஒரு ரப்பி தென் புறத்தைக் காட்டிக் கூறினார் :

“ அங்கிருந்து ஓர் இறைதூதர் வருங்காலம் அண்மித்து விட்டது ; அவர் மீள உயிப்பிக்கப்படுவதன் உண்மையை உறுதிப்படுத்துவார் ”.


மக்காவிலிருந்து வரும் செய்திகள் மீது அறபிகள் ஆழ்ந்த கவனம் செலுத்துவதற்கான தூண்டுதல் மறைமுகமாக ஒரு யூதரிடமிருந்தே வந்தது. ஸிரியாவிலிருந்து வந்து யத்ரிபில் குடியேறியிருந்த இப்ன்-அல்-ஹய்யபான் என்ற பெயரினரான அவர், பல்வேறு சந்தர்ப்பங்களில் மழையை வேண்டிய தனது பிரார்த்தனைகள் மூலம் அப்பாலை நிலச் சோலையை வரட்சியினின்றும் காப்பாற்றியிருந்தார். நபிகளார் ஆரம்ப இறைவசனங்களைப் பெற்ற காலத்தின்போதே காலமாகி விட்ட அவர், தன் மரணம் சமீபித்து விட்டதென உணர்ந்திருந்த நிலையில், தன் அருகிலிருந்தவர்களை அழைத்து, “ ஓ யூதர்களே! உணவும் பழரசமும் நிறைந்த ஒரு தேசத்தினின்றும் கடுமையும் பசியும் நிறைந்த ஒரு பிரதேசத்துக்கு நான் வந்து சேர்ந்த காரணத்தைச் சிந்திப்பீர்களாக! ” என்றார். “ நீரே நன்கறிவீர் ” என்றனர் சூழவிருந்தோர். “ சமீபத்தில் தோற்றம் பெற வேண்டிய இறைதூதரை எதிர் பார்த்தே நான் இங்கு வந்தேன். இந்த நாட்டிலேயே அவர் குடியேறுவார். அவரை நானும் பின்பற்றுவதற்கு ஏதுவாக அவர் தோற்றம் பெற்று விடுவார் என நான் நம்பியிருந்தேன். அவரது காலம் உங்களைச் சமீபித்துவிட்டது” - ( இ.இ.136 )என்றார் அவர். அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தார் இவ்வாறே பின்னர் அறிவிக்கப்பட்டனர்.

இப்ன்-அல்-ஹய்யபானின் வார்த்தைகளை யூத இளைஞர்கள் சிலர் தம் மனத்தில் நன்கு பதித்துக் கொண்டவர்களாயினர். இதனால், வேளை வந்த போது, நபிகளார் யூதரல்லாதிருந்தபோதும் கூட, அன்னாரைத் தாம் ஏற்கவும், ஏனைய பலரை ஏற்கச் செய்யவும் அவ்விளைஞர்களால் முடிந்தது.

எவ்வாறாயினும் பொதுவாக நோக்குமிடத்து, அறபிகள், இறைத்தூதராய் வந்த மனிதரை ஏற்றாலும் அவரது போதனைகளை ஏற்கத் தயாராக இல்லை. யூதர்களோ அவரின் போதனைகளை ஏற்றாலும் அவரை ஏற்கத் தயாராக இல்லை. தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட சமூகத்தவரல்லாத- யூதரல்லாத- ஒருவரை எவ்வாறு இறைவன் தனது தூதராக அனுப்பலாம்? என்றாலும் யாத்திரிகர்கள், நபிகளார் குறித்த செய்திகளை யத்ரிபுக்குக் கொண்டு வந்தப் போது யூதர்கள் அதில் ஆர்வம் கொண்டு மேலும் மேலும் விளக்கங்களை கேட்டறியலாயினர். யூதர்களின் இவ்வாறான ஆர்வத்தையும், ஏகதெய்வக் கோட்பாடு பற்றிய கருத்துகள் ரப்பிகளின் ஆர்வத்தைப் பன்மடங்கு பெருகி நின்றமையையும் கண்ட யத்ரிப் அறபிகள், செய்திகளைக் கொண்டு வந்த யாத்திரிகர்களைப் போலவே தாமும் அவற்றில் கூடிய ஈடுபாடு கொள்ளத் தொடங்கினர். ஈடுபாடுகளும், மதீப்பீடுகளும் ஒரு புறம் இருக்க, கஸ்ரஜ் கோத்திரத்தார், தன்னை இப்போது ஓர் இறைதூதராகப் பிரகடனப் படுத்திக் கொண்டுள்ளவருடன் தாம் கொண்டிருக்கும் உறவுகளை மீட்டத் தொடங்கினர். இளஞ் சிறுவனாக அவர் தன் தாயாருடன் யத்ரிபுக்கு வருகை தந்திருந்தமை, ஸிரியாவுக்கான வழியில் பலமுறை தம்முடன் தங்கிச் சென்றிருந்தமை என்பனவெல்லாம் அவர்களது நினைவில் நிறைந்திருந்தன.
மறு கோத்திரத்தார் அவ்ஸ்கள். அவர்களது தலைவர்களுள் ஒருவரான அபூகைஸ் மக்காவில் மணஞ்செய்திருந்தார். அவரது மனைவி, வரகாஹ்வின் மாமியாராவார். ஆக. கதீஜாவினதும் மாமியாராக இருந்தார். பல சந்தர்ப்பங்களில் மக்கா சென்று தனது மனைவியின் குடும்பத்தாருடன் தங்கியிருந்த அபூகைஸ், இறைதூதர் பற்றிய வரகாஹ்வின் அபிப்பிராயங்களை நன்கு மதித்து வந்தார்.
இக்காரணிகளோடு, யாத்திரிகர்களும் ஏனைய பிரயாணிகளும் மக்காவிலிருந்து கொண்டுவந்த செய்திகளும் சேர்ந்து, யத்ரிபின் மக்கள் மனதில் நன்கு செயல்படலாயின. எனினும் அப்போதைய நிலையில் தமக்கிடையிலான பிரச்சினைகளின் மீதே அவர்களது முழுக்கவனமும் ஈர்க்கப்பட்டிருந்தது. அவ்ஸ்-கஸ்ரஜ் கோத்திரங்களின் இருவர்க்கிடையிலான ஒரு சிறு பிரச்சினை, பாரியதொரு விவகாரமாகி இரத்தம் சிந்துமளவுக்கு முற்றிச் சென்றிருந்தது. பின்னர் படிப்படியாகப் பல்வேறு கோத்திரத்தாரையும் ஈர்த்து நின்ற பூதாகாரமானதொரு பிரச்சினையாக அது உருமாற்றம் பெற்றது. யூதர்களும் கூட இரு கோத்திரத்தாரையும் சார்ந்து பிரிந்திருந்தனர். இதன் தொடர்பாக ஏற்கெனவே மூன்று யுத்தங்கள் இடம் பெற்றிருந்தன. எனினும் தீர்க்கமான முடிவேதும் காணபடாததன் காரணமாக அவை மென்மேலும் குரோதத்தையே வளர்ப்பனவாகவும், பழி வாங்குவதன் தேவையை அதிகரிப்பனவாகவுமே இருந்தன. முன்னைய யுத்தங்களை விடப்பெரிய அளவிலான நான்காவதொரு யுத்தம் தவிர்க்க முடியாததாயது. இதன் பின்னணியிலேயே அவ்ஸ் கோத்திரத்துத் தலைவர்கள், கஸ்ரஜ்களுக்கு எதிராகத் தமக்கு உதவும்படி குறைஷிகளை வேண்டிக்கொள்ளவென மக்காவுக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பத் தயாராகி வந்தனர்.


தமது வேண்டுகோளுக்கான குறைஷியரின் பதிலை எதிர்ப்பார்த்தவர்களாக அவ்ஸ் தூதுக்குழுவினர் இருந்த நிலையில், நபிகளார் அவர்கள் எதற்காக வந்தார்களோ அதைவிடச் சிறந்ததொன்றனை விரும்புவார்களா? எனக் கேட்டார்கள். அது என்னவாயிருக்கும் என வினவினர் தூதுவர்கள். நபிகளார் தனது தூது குறித்தும் தாம் பிரச்சாரம் செய்யவெனக் கட்டளைப் பிறப்பிக்கப்பட்டிருக்கும் மதம் குறித்தும் கூறினார்கள். பின்னர் குர்ஆனின் சில வாசகங்களையும் ஓதிக் காட்டினார்கள். அப்போது முஆத்தின் மகனும், தூதுக்குழுவினருள் இளைஞருமாயிருந்த இயாஸ் உரத்த தொனியில் கூற்னார் :

“ மக்களே! நீங்கள் நாடி வந்த கருமத்தை விட இது மேலானது ”. எனினும் குழுவின் தலைவராயிருந்தவர் சிறிது மண்ணை எடுத்து இளைஞரின் முகத்தில் எறிந்து, “ இதுவே உமக்குப் போதுமானதாக இருக்கட்டும்! எனது வாழ்வின் பேரால் நிச்சயமாக இதை விட வேறொரு காரியத்துக்காகவே நாம் வந்துள்ளோம் ” என்றார். இயாஸ் அமைதிப்படுத்தப்பட்டார். நபிகளாரும் அவ்விடத்தைவிட்டும் அகன்று சென்றார்கள். அவ்ஸ்கள் வேண்டி நின்ற உதவியைச் செய்யக் குறைஷிகள் மறுத்து விடவே, தூதுவர்கள் யத்ரிபுக்குத் திரும்பி விட்டார்கள். சிறிது காலஞ் செல்ல இயாஸ் காலமானார். இறுதி வரை அவர் ஏக இறையோனை ஏற்றுச் சாட்சி கூறியவராக, அல்லாஹ்வையே போற்றிப் புகழ்ந்து துதி செய்தவராக இருந்தார் என அவரது மரண வேளையின்போது அருகிலிருந்தவர்கள் கூறினார்கள்.

ஆக, இயாஸே இஸ்லாத்தில் இணைந்து கொண்ட யத்ரிப்வாசிகளுள் முதல்வராகக் கருதப்படுகிறார்.



இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,
 

மூலாதார நூல்களின் அடிப்படையில்

♡❁☼✭☆★♡❁☼✭☆★♡❁☼✭☆★♡

மு ஹ ம் ம த்


இறைவனின் இறுதித் தூதர்

♡❁☼✭☆★♡❁☼✭☆★♡❁☼✭☆★♡

அவர்களது வாழ்வு
@
மார்டின் லிங்ஸ் 1 9 8 3
( ஸெய்யித் அபூபக்ர் ஸிராஜுத்தீன் )
தமிழில்: அப்த்-அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர் 

No comments:

Post a Comment