Sunday, 2 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


அபூஜஹ்லும்
ஹம்ஸாவும்


மக்காவில் விசுவாசிகளின் தொகை பெருகிச் சென்றது போலவே, விசுவாசிகளுக்கு எதிரான சக்திகளும் பெருகிச் சென்றன. குறைஷியரின் தலைவர்கள் சிலர் ஒரு நாள் ஹிஜ்ரின் மீது கூடியிருந்தனர். நபிகளார் மீதான ஒவ்வொருவரது கோபமும் கிளரப்பட்டு வந்தது. இவ்வேளை நபிகளாரும் புண்ணியத்தலத்தினுள் நுழைந்து கஃபாவின் கிழக்கு மூலைக்குச் சென்று, கரும்பாறையை முத்தமிட்டு வழக்கம் போலவே கஃபாவை வலம் வரத்தொடங்கினார்கள். ஹிஜ்ரை அண்மியபோது குறைஷியர்கள் தம் குரலை உயர்த்தி அன்னார் மீது அபவாதம் கூறி நிந்தனை செய்யத் தொடங்கினர். கூறியன அனைத்தும் நபிகளாரின் செவிகளுள் வீழ்ந்தமையை அன்னாரின் முகம் தெளிவுறக் காட்டியது. இரண்டாம் முறை அவர்களைத் தாண்டிச் சென்ற போதும் இது தொடர்ந்தது. மூன்றாம் முறை அவ்விடத்தைக் கடக்கும் போதும் நிந்தனை தொடரவே, நபிகளார் அவ்விடத்தில் நின்று, “ ஓ குறைஷியரே! நான் சொல்வதை நீங்கள் கேட்பீர்களா? நிச்சயமாக எனது உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவனின் மீது ஆணையாக, நான் உங்களுக்கு அழிவையே கொண்டு வந்துள்ளேன் ” - (இ.இ. 183 ) எனக் கூறினார்கள். கூறப்பட்டவையும், அன்னார் அவற்றைக் கூறிய முறையும் அவர்கள் அனைவரையும் மந்திரவயப்படுத்தியது போலாயிற்று. ஒருவரும் அசையவில்லை : எவரும் எதனையும் கூறவுமில்லை. அமைதி தொடர்ந்தது. அவர்களுள் ஒருவர் எழுந்து அமைதியாக, 




“ அபுல் காஸிமே! உமது வழியில் செல்வீராக! இறைவன் பெயரால் நிச்சயமாக நீர் ஏதும் அறியாத மடையனல்லவே! ” என்றார். என்றாலும் இவ்வமைதி தொடரவில்லை. தாம் அனைவரும் திடீரென மதிப்பும் வியப்பும் கலந்ததொரு நிலைக்கு ஆளானமை குறித்துக் குறைஷித் தலைவர்கள் ஒவ்வொருவரும் தம்மைத் தாம் குறை கூறிக் கொள்ளலாயினர். எனினும் இவ்வாறேற்பட்ட சடுதியான பலவீனத்துக்குத் தக்க பிரதியீடுகளைப் பின்னர் மேற்கொள்வதென சபதம் செய்து கொண்டனர் அவர்கள்.
இஸ்லாத்தின் பரம விரோதிகளில் ஒருவரான மக்ஸும் கோத்திரத்து அம்ர், தன் உறவினராலும் நண்பர்களாலும் அபுல்-ஹகம் என வழங்கப்பட்டார். முஸ்லிம்கள் வெகு சீக்கிரமாகவே, அபூஜஹ்ல் - அறிவீனத்தின் தந்தை - என அவரை நாம மாற்றம் செய்திருந்தனர். அபூ-ஜஹ்ல் முகீராவின் பேரன். தற்போது வயது முதிர்ந்த கோத்திரத் தலைவராகவிருந்த வலீதின் மருகர். வலீதின் பின்னர் கோத்திரத் தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொள்ளும் நம்பிக்கை அவரிடமிருந்தது. செல்வத்தாலும் ஆடம்பரமான விருந்துபசாரங்களாலும் மக்காவில் தனக்கென ஒரு தனி ஸ்தானத்தை நிறுவியிருந்தார். கொடூரமான தன்மைகளினால் தன்னைப் பிறர் அஞ்சச் செய்திருந்தார். தன்னை எதிர்த்தோர் எவரையும் பழிவாங்குதலிலும் அவர் பின்னடைந்தவரல்லர். அண்மையில் நடந்து முடிந்த புனித யாத்திரைக் காலத்தின்போது மக்காவின் பாதைகளில் நின்று நபிகளாருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தோரில் சோர்வே அடையாத ஒருவராகவும், நபிகளாரை ஒரு பயங்கரமான மந்திரவாதியென இழித்துரைப்பதில் முன்னணியில் நின்றவராகவும் விளங்கினார். தனது சொந்தக் கோத்திரத்தில் பாதுகாப்பின்றியிருந்த விசுவாசிகளைத் துயருறுத்தி வந்ததோடு பிற கோத்திரத்தாரும் அவ்வாறே செய்ய வேண்டுமென வற்புறுத்தினார் அவர். இதே அபூஜஹ்ல்தான் இப்புதிய மதத்துக்கு மாபெரும் தொண்டொன்றனை மறைமுகமாக ஆற்றினார்.


நபிகளார் பள்ளிவாசலுக்கு வெளியே ஸபா வாயிலின் அருகே அமர்ந்திருந்தார்கள். இந்த வாயிலின் வழியாகவே அண்மையிலுள்ள ஸபா குன்றுக்கும் சுமார் நானூற்றைம்பது யார்களுக்கு அப்பாலுள்ள மர்வா குன்றுக்கும் இடையில் ஏழு முறைகள் ஓடுவது யாத்திரிக வழக்கம். ஸபா குன்றின் அடியிலிருந்த ஒரு பாறையிலிருந்தே இந்த ஓட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. அத்தலத்தில்தான் நபிகளார் தனியே அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கு வந்தார் அபூஜஹ்ல். அந்த மக்ஸுமிக்குத் தான் நபிகளார் குறித்து வியப்போ அச்சமோ கொண்டவனல்ல என்பதைக் காட்டிக் கொள்ளத் தக்கதொரு சந்தர்ப்பமாக இது அமைந்தது. நினைவில் எழுந்த அத்தனை விஷயங்களையும் ஒன்று திரட்டி நபிகளாரைத் தூஷிக்கலானார் அவர். நபிகளார் வெறுமனே அபூஜஹ்லைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்கள் : ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. தொடர்ந்து மிகவும் கீழ்த்தரமான முறையில் நபிகளாரை இகழ்ந்துரைத்து விட்டு, அபூஜஹ்ல், ஹிஜ்ரில் கூடியிருந்த ஏனைய குறைஷியரைச் சேர்ந்து கொள்ளவெனப் பள்ளிவாசலினுள் நுழைந்தார். நபிகளார் மிகுந்த சோகத்துடன் எழுந்து வீடு சென்றார்கள்.


நபிகளார் சென்ற சிறிது நேரத்தில் எதிர்ப்புறத்திலிருந்து ஹம்ஸா வந்து கொண்டிருந்தார். தோளில் வில் தொங்கிக் கொண்டிருந்தது. வேட்டையிலிருந்து திரும்பும் வழியில் வீடு சேர முன்னர், புனித இல்லத்தைத் தரிசித்துச் செல்வது அவர் வழக்கம். ஸபா வாயிலின் அருகிலிருந்த ஒரு வீட்டிலிருந்து அவர் வருவதைக் கண்ணுற்ற ஒரு பெண் ஹம்ஸாவுடன் உரையாடவென வெளியே வந்தார். தையிம் கோத்திரத்தைச் சேர்ந்தவரும், காலஞ் சென்றவருமான அப்த்-அல்லாஹ்-இப்ன்-ஜுத்ஆன் என்பாரின் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண் அவர். இருபது வருடங்களுக்கு முன்னர் தீரமிக்கதோர் உடன்படிக்கையாயமைந்த ஹில்ப்-அல்-புதூல் எனும் ஒப்பந்தத்தை உருவாக்கியோருள் ஒருவர் இந்த ஜூத்-ஆன். ஜுத்ஆன் குடும்பத்தார் அபூபக்ரின் ஒன்றுவிட்ட உறவினர்கள். நபிகளார் மீதும், அன்னாரின் போதனைகள் மீதும் மிக்க அபிமானம் கொண்டிருந்த அப்பெண், அபூஜஹ்ல் மேற்கொண்ட இழித்துரைப்பின் ஒவ்வொரு சொல்லையும் கேட்டு மிக்க ஆவேசம் கொண்டிருந்தார். ஹம்ஸாவை நோக்கி,

“ அபூ உமாரா ( ஹம்ஸாவின் மகள் உமாரா. அறபிகளிடையே ஆடவரை ‘இன்னாரின் தந்தை -அபூ-’என்றும் பெண்டிரை ‘இன்னாரின் தாய் - உம்ம் - ’ என்றும் விளிப்பது கெளரவமாக இருந்து வருகின்றது ) உமது சகோதரனின் மகன் முஹம்மத், ஹிஷாமின் மகன் அபுல் ஹகமினால் இழிவு படுத்தப்பட்டதை நீர் கண்டிருக்க வேண்டும். அவர் இங்கு அமர்ந்திருப்பதைக் கண்டு மிகவும் மோசமான வார்த்தைகளால் அவரை இழித்துரைத்துவிட்டுச் சென்றான் ”

என அபூஜஹ்ல் சென்ற திக்கைக் காட்டுமுகமாகப் பள்ளிவாசலைச் சுட்டிக்காட்டி “ முஹம்மத் ஒரு வார்த்தையும் பேசவில்லை ” என்றார் அப்பெண்.
ஹம்ஸா இயல்பாகவே எவருடனும் நட்புப் பாராட்டுபவராகவும், நல்ல மனவொழுங்குகள் கொண்டவராகவும் விளங்கினார். குறைஷியரிடையே அதி தீரமுள்ள ஒருவராக மதிக்கப்பட்ட அவர், சினமூட்டப்பட்டால் மிக்க மூர்க்கமும், எவ்வித இணக்கத்துக்கும் உட்படாத பிடிவாத மனப்பாங்கும் கொள்பவராயிருந்தார். முன்னெப்போதுமில்லாத வகையில் அவரது பெரிய உருவம் சினத்தினால் குலுங்கியது. ஆன்மாவில் ஒரு விடுதலையை அச்சினம் ஏற்படுத்தியது. ஏற்கெனவே அரைத் தீர்மானத்துக்குள்ளாகியிருந்த ஒன்றனை அது முழுமைப்படுத்தி வைத்தது. பள்ளிவாசலின் உள்ளே நுழைந்த ஹம்ஸா, நேரே அபூ ஜஹ்லிடம் சென்றார். அபூ ஜஹ்லுக்கு மேலாக நின்று, வில்லை உயர்த்திப் பலம் கொண்ட மட்டும் வேகமாக அவரது முதுகில் தாக்கி

“ அவரை இனிமேலும் இழிவு படுத்துவாயா? இப்போது முதல் நான் அவருடைய மதத்தவன். அவர் உறுதி கூறுபவற்றை நானும் உறுதி கூறுகின்றேன். உன்னால் முடியுமானால் என் அடிக்குப் பதிலாக என்னை அடி! ” என்றார் ஹம்ஸா.

அபூஜஹ்ல் தைரியத்தில் குறைந்தவரல்ல, என்றாலும் அச்சந்தர்ப்பத்தில் அப்பிரச்சினை அத்துடன் முடிவடைந்து விடுவதே நல்லதென அவர் கருதியிருக்கக் கூடும். சூழவிருந்த சில மக்ஸுமிகள் அபூஜஹ்லுக்கு உதவுமுகமாக எழுந்து நின்றனர். அவர்களை அமர்ந்து கொள்ளும்படி சைகை செய்த அபூஜஹ்ல் கூறினார் :

“ அபூ உமாரா இருக்கட்டும். இறைவன் பெயரால் அவரது சகோதரன் மகனை மிகவும் கீழ்த்தரமான முறையில்தான் நான் இகழ்ந்து பேசினேன் ”.



இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,
 

No comments:

Post a Comment