Monday, 3 December 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

குறைஷியர் தூது ( தொடர்… )

தமது வினாக்களுக்கு எவ்வித பதிலையும் உத்பா கொண்டு வராது விட்டதனால், “ நாங்கள் முஹம்மதை இங்கு வரவழைத்து அவருடன் பேசி வாதாடிப் பார்ப்போம். அதன் மூலம் நாம் எல்லா வழிகளையும் பிரயோகிக்கவில்லை என்ற பழிக்கு ஆளாகாமலிருக்கலாம் ” என்றார் ஒருவர். ‘ உமது மக்களில் உயர்வானோரெல்லாம் உம்முடன் கதைக்கவெனக் கூடியிருக்கிறார்கள் ’ என அன்னாருக்குச் செய்தி அனுப்பினர் குறைஷியர். அவர்களது போக்கில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் மிக விரைவாகச் சென்றனர் நபிகளார். குறைஷியரைச் சத்தியத்தின் பால் வழிகாட்டும் ஆவல் மிகுந்திருந்தது. எனினும், ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட பிரேரணைகளே மீண்டும் வைக்கப்பட்டபோது, அன்னாரின் நம்பிக்கையெல்லாம் தகர்ந்து போவதாயிற்று. அவர்கள் பேசி முடிந்ததும் நபிகளார் கூறினார்கள் : 

“ நான் எந்தவோர் ஆவியினாலும் பீடிக்கப்பட்டவனல்ல; உங்களிடையே கெளரவத்தை வேண்டி நிற்பவனுமல்ல; அரச பாரத்தை விரும்பியவனுமல்ல, அல்லாஹ் என்னை உங்களுக்கு அவனுடைய தூதராக அனுப்பியுள்ளான். எனக்கு ஒரு வேதத்தையும் அருளி, உங்களுக்கு நன்மாராயங் கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் இருக்கும்படி எனக்குக் கட்டளையிட்டுள்ளான். அல்லாஹ்வின் தூதினை உங்களுக்கு நான் அறிவித்துள்ளேன். நல்ல ஆலோசனைகளையும் கூறியுள்ளேன். நான் உங்களுக்குக் கொண்டு வந்திருப்பவற்றை நீங்கள் ஏற்றுக் கொண்டால், அது உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மை பயக்கும். அவற்றை நீங்கள் நிராகரித்தாலோ, உங்களுக்கும் எனக்கும் இடையில் அல்லாஹ்வின் நியாயத் தீர்ப்பை எதிர் நோக்கி அமைதியுடன் இருப்பேன் ”. - ( இ.இ.188 )
விட்ட இடத்துக்கே மீண்டும் திரும்பிச் சென்றார்கள் குறைஷியர். தாம் அளிக்கத் தயாராக இருப்பனவற்றை ஏற்க அவர் மறுப்பாராயின், அவர் இறைவனின் தூதர்தான் என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏதுமொரு சான்றினைக் காட்ட வேண்டும். அதுவே குறைஷியரது வாழ்வின் சிரமங்களைக் குறைக்கவும் வேண்டும். 

“ எம்மைச் சுற்றியுள்ள இம்மலைகள் அனைத்தையும் தரைமட்டமாக்கிச் சமப்படுத்தி, ஸிரியாவிலும் ஈராக்கிலும் போன்று அதில் நதிகளை ஓடவிடச் செய்யும்படி உமது இறைவனிடம் கேளும். எங்களது முன்னோர்களில் சிலரை, சிறப்பாக குஸையை மீண்டும் உயிர்ப்பிக்கச் சொல்லும்; நீர் சொல்வது அனைத்தும் உண்மையோ பொய்யோ என நாம் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இவற்றை நீர் எமக்கு செய்து தர முடியாது விடின், உமக்காகவாவது சில உபகாரங்களைக் கேட்டுப் பாரும். உம்மிடம் ஒரு வானவரை அனுப்பி நீர் கூறுபவற்றை உறுதிப்படுத்தும்படியும், நாம் கூறுவன பிழையெனக் காட்டும்படியும் உம் இறைவனிடம் கேளும். தோட்டங்கள், மாளிகைகள், தங்கம், வெள்ளி முதலான செல்வங்களைத் தரும்படி கேளும். அதன் மூலம் உமது இறைவனிடம் உமது நிலை எவ்வாறானது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும் ” என்றார்கள் குறைஷித் தலைவர்கள்.

“ இவ்வாறான விடயங்களை என் இறைவனிடம் கேட்கக் கூடியவனல்ல நான். நான் அதற்காக அனுப்பப்பட்டவனுமல்ல. அல்லாஹ் என்னை எச்சரிக்கை செய்யவும் நன்மாராயம் கூறவுமே அனுப்பியுள்ளான் ” என நபிகளார் கூறியதைக் கேட்க மறுத்தவர்களாய், “ அப்படியானால் வானம் துண்டு துண்டாகி எம் தலை மீது விழச் செய்வீராக ” என்றனர் அவர்கள். இது ஏற்கெனவே அருளப்பட்டிருந்த இறைவசனம் ஒன்றனைப் பரிகசிக்கும் வார்த்தையாக அமைந்தது. 

“நாம் விரும்பினால் அவர்களைப் பூமிக்குள் சொருகி விடுவோம் ; அல்லது வானத்திலிருந்து ஒரு துண்டை அவர்கள் மேல் எறிந்து ( அவர்களை ) அழித்து விடுவோம். ”

அல் குர்ஆன்: 34:9

நபிகளார் கூறினார்கள் : “ அதனை அல்லாஹ்வே முடிவு செய்ய வேண்டுபவன். அவன் விரும்பினால் அதைச் செய்வான். ”


பதிலேதும் கூறாமல் குறைஷியர் ஒருவரையொருவர் பரிகாசமாக நோக்கியோராய் வேறொரு விஷயத்துக்குச் சென்றார்கள். அவர்களை மிகவும் திகைப்புக்குள்ளாக்கியிருந்ததோர் அம்சமே இறைவசனங்களில் அடிக்கடி வரும் ‘ ரஹ்மான் ’ எனும் புதுமையான நாமம். இது ஒரு வகையில் நபிகளாரின் நபித்துவத்தினது மூலமாகவும் இருக்கலாம் என்றெண்ணினர். ஓர் இறைவசனம் 

‘ அளவிறந்த அருளாளன் ( ரஹ்மான் ) தான் இந்தக் குர்ஆனை(உமக்கு)க் கற்றுக் கொடுத்தான் ’ குர்ஆன் : 55:1 என ஆரம்பமாகியது.

அத்துடன் முஹம்மதுக்கு இவ்வாசகங்களைக் கற்றுக் கொடுத்தவர் யமாமாவில் வாழ்ந்து வரும் ஒருவரே என்ற வதந்தியினாலும் அவர்கள் மகிழ்வுற்றிருந்தனர். இப்போது அவர்களுள் ஒருவர் கூறினார்:
“ இவையனைத்தையும் உமக்குக் கற்றுக் கொடுத்தவர் யமாமாவில் வாழும் ரஹ்மான் என்பவரே என நாம் கேள்விப்பட்டுள்ளோம். அந்த ரஹ்மானில் நாம் ஒரு போதும் நம்பிக்கை கொள்ளப்போவதில்லை ”. நபிகளார் பதிலேதும் கூறாது அமைதியாக இருந்தார்கள். குறைஷியரோ தொடர்ந்தும், “ எமது நிலையை நாம் உம்மிடம் நியாயப்படுத்தி விட்டோம் ஓ முஹம்மதே! இறைவன் மீது ஆணையாக, நாம் உம்மை அமைதியாக இருக்க விடமாட்டோம். உம்மை நாம் இப்போது நடாத்தி வரும் முறையிலிருந்தும் தளரமாட்டோம். உம்மை நாம் அழிக்கும் வரை, அல்லது நீர் எம்மை அழிக்கும் வரை இது தொடர்ந்து நடக்கும் ” என அச்சுறுத்தினார்கள்.

“ இறைவனையும் வானவர்களையும் நீர் எம்மிடம் கூட்டிவரும் வரை உம்மை நாம் நம்பமாட்டோம் ” என்றார் ஒருவர். அத்துடன் அவ்விடத்தை விட்டு நீங்கவென நபிகளார் எழுந்தார்கள். 
பிரியும் போது மக்ஸும் கோத்திரத்து அபூ உமையாவின் மகன் அப்த்-அல்லாஹ்வும் கூடவே எழுந்து

“ நீர் ஓர் ஏணியை எடுத்து சுவர்க்கம் வரை செல்வதனை நான் காணும் வரை, நான்கு வானவர்களை உமது பிரகடனங்களெல்லாம் உண்மையானவை எனச் சாட்சி கூற நீர் கொண்டுவரும் வரை நான் உம்மை நம்பப்போவதில்லை. அவ்வாறே நிகழ்ந்து விட்டாலும் கூட உம்மை நம்புவேனென நான் நினைக்கவில்லை ” என்றார். 

இந்த அப்த்-அல்லாஹ் தன் தந்தை வழியில் அபூ ஜஹ்லின் உடன் பிறவா சகோதரர். அவரது தாயார், அப்த்-அல்-முத்தலிபின் மகள் ஆதிகா. தனது சகோதரனின், அதாவது நபிகளாரின் தந்தையாரின் பெயரையே தன் மகனுக்கும் வைத்திருந்தார். நபிகளார் மிகவும் கவலை தோய்ந்தவர்களாக வீடு திரும்பினார்கள். அத்துணை நெருங்கிய பந்தம் கொண்டதோர் உறவினரிடமிருந்து இவ்வாறான வார்த்தைகளை கேட்க வேண்டியிருந்தது ஒரு புறம். தனக்கும் குறைஷித் தலைவர்களுக்கும் இடையில் அகன்று வந்த இடைவெளி பற்றிய கவலை மறு புறம்.


என்றாலும் வெறுப்புணர்வு இத்துணை மிகைத்திருந்த மக்ஸும் கோத்திரத்தாரிடையிலிருந்தும் தமது மாமியார் பர்ராவின் மகன் அபூஸலாமாவின் உத்தம அன்பினைப் பெற்றிருந்தனர் நபிகளார். அத்திக்கிலிருந்து புதிய மதத்துக்கு எதிர்பாராத விதமாகப் புதியதொரு சக்தியும், உதவியும் கிட்டலாயது. அபூஸலாமா தனது தந்தை வழியில் ஒன்றுவிட்ட சகோதரரும், பெருஞ்செல்வந்தருமான அர்கம் என்பாரை நெருங்கியிருந்தார். மக்ஸுமிகளான இவர்களது பாட்டனார் இருவரும் சகோதரர்களாயிருந்தனர்.

அர்கம் ஒரு நாள் நபிகளாரிடம் வந்து, ‘லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸுலுல்லாஹ்’ எனப் பகர்ந்து இஸ்லாத்தினுள் இணைந்து கொண்டார். அத்தோடு ஸபா குன்றுக்கு அருகிலிருந்த தனது பெரிய வீடொன்றை இஸ்லாத்தின் சேவைக்கென அர்ப்பணம் செய்தார். அதன் மூலம் மக்காவின் மத்தியிலேயே விசுவாசிகளுக்கு ஒரு முகாம் கிடைத்தது. 

பிறர் கண்டு விடுவார்களோ, தடையேதும் செய்வார்களோ என்ற அச்சமேதும் இன்றி, ஒன்று கூடவும், கூட்டாகத் தொழவும் முஸ்லிம்களுக்கு வசதியளிப்பதாக இது அமைந்தது.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment