Tuesday, 4 September 2018

வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு: டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் பதற்றம், நாட்டின் பொருளாதார பிரச்சினை குறித்த அச்சம் ஆகியவற்றால், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 71.58 காசுகளாக  இன்று வீழ்ச்சி அடைந்தது.
சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, நேற்றைய டாலருக்கு எதிரான மதிப்பான ரூ.71.21 காசுகளுடன் ஆரம்பமானது. ஆனால், வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு உயர்ந்து ரூ.71.09 காசுகளுக்கு வந்தது. ஆனால், நண்பகலுக்குப் பின் மீண்டும் ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டு வர்த்தகம் முடியும் போது நேற்றைய மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக 37 காசுகள் சரிந்து ரூ.71.58 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது.
டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 5-வது நாளாகச் சரிந்து வருகிறது. அதேசமயம், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையும் விண்ணை முட்டும் அளவுக்குத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.41, டீசல் விலை ரூ.75.39. காசுகளாக அதிகரித்தது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, சீனா அமெரிக்கா,கனடா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்தத்கப்போர குறித்த அச்சம், அர்ஜென்டினா, துருக்கி வர்த்தக சூழல் ஆகிய காரணங்களால் டாலர் மதிப்பு உயர்ந்து வந்தது.
அதுமட்டுமல்லாமல், உள்நாட்டில் வேலையின்மை, விலை வாசி உயர்வு, நடப்பு கணக்குப் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை, உள்நாட்டுப் பொருளாதார சிக்கல்கள் ஆகியவற்றாலும் ரூபாயின் மதிப்பு உள்நாட்டிலேயே அதிக நெருக்கடிக்கு ஆளாகி வந்தது. இந்தச் சூழலில் இன்று பிரண்ட் கச்சா எண்ணெய் இன்று பேரல் ஒன்று 79.26 டாலர்களாக ஆக உயர்ந்தது, இதனால், அடுத்துவரும் நாட்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குச் சாதகமான வாய்ப்புகள் இருப்பதையே காட்டுகிறது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவடைவதற்கு முக்கியக் காரணமே சீனா, அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர் ஏற்படும் என்ற பதற்றமும், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை ஏற்றமும்தான். இதை மத்திய அரசால் கட்டுப்படுத்த இயலாது, என்ன முடியுமோ அதைச் செய்து ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்கலாம். ஆனால், ஒரு கட்டத்துக்கு பின் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு தனக்குத்தானே நிலைப்படுத்திக்கொள்ளும் உள்நாட்டுக் காரணிகள் இதில் ரூபாய் மதிப்பைப் பாதிக்காது எனத் தெரிவித்தார்.
என்ன காரணம்?
அமெரிக்கா, சீனா, கனடா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பனிப்போர்தான் வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு பணத்துக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு உயரக் காரணமாகும். அர்ஜென்டினாவின் பெசோ, துருக்கி லிரா, தென் ஆப்பிரிக்கா ராண்ட், பிரேசிலின் ரியல், இந்தோனேசியாவின் ருப்பியா, இந்தியாவின் ரூபாய் ஆகியவற்றின் மதிப்பு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஏற்றுமதியை நம்பி அதிகம் இருக்கும் பொருளாதாரங்கள் வர்த்தகப் போர் பதற்றம் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனபொருட்களின் மீது மேலும் புதிய வரிகளை விதிக்கலாம் என்ற அச்சம் காரணமாக டாலரின் தேவை அதிகரித்து மதிப்பு உயர்ந்து வருகிறது.

No comments:

Post a Comment