Thursday, 20 September 2018

உங்கள் காது பேசுகிறேன்! - ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

நாங்களும் பிற உயிரினங்களும்
முதுகெலும்பு உள்ள எல்லா விலங்குகளுக்கும் கேட்கும் தன்மை உண்டு. ஆனால், மீன்களுக்கு உங்களைப்போல வெளிச்செவி கிடையாது. உடல் முழுவதுமே உணர் செல்கள் உள்ளன.
இவற்றின் மூலம் அவை நீரில் ஏற்படும் அதிர்வலைகளையும் எதிரில் உள்ள பொருள்களையும் உணர்ந்து கொள்ளமுடிகிறது. தவளை, ஊர்வன, பறப்பன போன்றவற்றுக்கும் வெளிச்செவி இல்லை. நடுச்செவியும் உட்செவியும் உண்டு.
பெரும்பாலான பூச்சிகளின் செவிகள் உணர் கொம்புகளின் நுனியில் உள்ளன. கொசுக்களுக்கு அவற்றின் உணர்கொம்பிலும் ஈக்களுக்கு அவற்றின் கால்களிலும் பட்டாம்பூச்சி மற்றும் மூட்டைப்பூச்சிகளுக்கு மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளிலும் செவிப்புலன் உள்ளது.
பறக்கும் பாலூட்டிகளான வௌவால்கள் நீங்கள் கேட்க முடியாத ஒலிகளையும் கேட்கும் திறன் கொண்ட செவிகளைப் பெற்றுள்ளன. பொருள் களின் மீது மோதி எதிர்வரும் ஒலியலைகளை வைத்தே எதிரிலுள்ள பொருள்களின் தன்மையை வௌவால்கள் அறிந்துகொள்கின்றன.
இதேபோல, நீர்வாழ் பாலூட்டிகளான திமிங்கலம் மற்றும் டால்பின்களும் நீரில் ஏற்படும் ஒலியலை களை வைத்து, பல்வேறு பொருள்களை அறிந்து கொள்கின்றன.
● பௌதீக ரீதியாக பேணவேண்டியவை :
கண்கள் பாதுகாப்பை விட எங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது, அவசியமானதும் கூட. அந்த வகையில் எங்களைப் பௌதீக ரீதியாக பேண வேண்டிய சில அம்சங்களை இப்போது பார்ப்போம்.
🔈எண்ணெய் ஊற்றாதீர்கள்!
சிலர் குளிக்கும் போது எங்களுக்குள் எண்ணெய் விட்டுக் கொள்கின்றனர்.பாம்புப் புற்றுக்குள் பால் ஊற்றுவதால் பாம்பு பால் குடிப்பதில்லை. அது போலத்தான் எங்களுக்குள் ஊற்றும் எண்ணெய் நிலையும். இதனால் ஒரு பயனுமில்லை. மாறாக, அதன்மூலம் எங்களுக்கு பாதிப்புதான் ஏற்படும். எங்களுக்குள் நீர் புகுந்தாலோ, வலித்தாலோ உடனே மருத்துவரை அணுகுங்கள். நீங்களே மருத்துவராகி மருத்துவம்செய்து எங்களைச் சிக்கலில் மாட்டிவிடாதீர்கள்.
🔈குச்சியால் குடையாதீர்கள்!
எங்களில் அழுக்கு உள்ளது என்று ஹேர்பின், குச்சி, கம்பி, கோழி றகு என கையில் அகப்பட்டதை வைத்து தயவுசெய்து சுத்தம்செய்யும் வேலையில் இறங்கிவிடாதீர்கள். பஞ்சு சுற்றிய குச்சிகளைக் கூட (Buds) பயன்படுத்தக்கூடாது.
சாலையோரங்களில் எங்களைச் சுத்தம்செய்வதே ஒரு தொழிலாக நடக்கிறது. அடுத்தவர்கள் குடைந்துவிட்டால் உங்களுக்குச் சுகமாக இருக்கும். ஆனால், அது எங்களுக்கு நல்லதல்ல. இப்படி நீங்கள் செய்வதால் செவிப்பறை கிழிந்துவிடும். லேசாக கிழிந்தால்கூட அப்புறம் நாங்கள் பேசுறது மட்டுமல்ல; யார் பேசுவதையும் உங்களால் கேட்கமுடியாது.
நாங்கள் மென்மையாக இருக்கிறோம் என்று இயற்கையே எங்களை எவ்வளவோ பாதுகாப்பில் வைத்திருக்கிறது. அதிகப்படியான மெழுகு இருந்தால், நாங்களே வெளியேற்றிவிடுவோம். எனவே, தயவுசெய்து நீங்கள் சுத்தம் செய்ய வேண்டாம். குளிக்கும்போது எங்களுக்குள் பஞ்சு வைத்துவிட்டுக் குளித்தால் தண்ணீர் உள்ளே சென்று தேங்கி, கிருமிகள் உருவாவதைத் தடுத்து விடலாம்.
🔈அதிகச் சத்தம் போடாதீர்கள்!
சத்தம் எங்களுக்குப் பிடிக்காது. உங்கள் நண்பருடன் ஓர் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தால் அவர் பேசும் சத்தம் முப்பது டெசிபல். இதுதான் ரொம்பப் பிடித்தமான அளவு. எப்போதும் இரைச்சலில் இருந்தால், அதிர வைக்கும் இசையைக் கேட்டால் எங்களது கேட்கும் திறன் பாதிக்கும்.
ஜப்பானியர் அதிகஉழைப்பு,வேலைசெய்வார்கள். ஓய்வுக்காக Silence Room அமைத்துக்கொள்வார் கள். அவர்கள் சைலன்ஸ் ரூம் அமைத்துக் கொள்கிற நிலையில், நாம் ரூமில் Silence please என்று எழுதி அறிவிப்புப்பலகை மாற்றிவைத்துக் கொண்டிருக்கிறோம்.
140 டெசிபலுக்கு மேலுள்ள ஒலியை நீங்கள் தொடர்ந்து கேட்கநேர்ந்தால், நாங்கள் கேட்கும் தன்மையை இழப்பது உறுதி. அதிகச் சத்தத்தில் பணிசெய்பவர்கள் எங்களுக்குள் பஞ்சை வைத்துக்கொள்வது நல்லது.
அன்று எங்களுக்கு அதிகபட்ச சவாலே இடியோசைதான். ஆனால், தற்போது இசை, பேச்சு என்று எதை எடுத்தாலும் சத்தச் சவால்கள்தான். முடிந்தவரை அதிகச்சத்தத்தை எங்களுக்குத் தராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
🔈கிருமிகளை அண்டவிடாதீர்கள்!
எங்களது நடுப்பகுதியில் இருந்து தொண்டைக்கு யூஸ்டசியன் (Eustachian) என்ற குழாய் செல்கிறது. இதுதான் எங்களது எதிரி. நிறைய கிருமிகள் உள்ள பகுதி. இங்கிருந்து எளிதாக எங்களது நடுப்பகுதிக்கு அவை வந்து விடுகின்றன. எனவே, மூக்கில் சளி இருந்தால், கைகளால் அதைத் துடைக்காதீர்கள். கைகளைக் கழுவாமல் எங்களின் மேல் வைத்தால், எங்களையும் கிருமிகள் தொற்றிவிடும்.
🔈மருத்துவரைச் சந்திக்க மறக்காதீர்கள்!
வருடம் ஒருமுறை கண்மருத்துவரிடம் சென்று கண்ணைப் பரிசோதிப்பது போல, எங்களது சிறப்பு மருத்துவரிடமும் சென்று எங்கள் கேட்கும் திறன் குறித்தும் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
- இன்னும் கேட்போம், இன்ஷா அல்லாஹ்!

No comments:

Post a Comment