Monday, 3 September 2018

"ஒரே சிவில் சிவில் சட்டம் (Uniform Civil Code) தேவையற்றது" - வரவேற்கத் தக்கது. Marx Anthonisamy



"ஒரே அரசின் கீழ் பலரும் ஒன்றாக வாழ்கிற ஒரு நாடு (A unified country) எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாக (uniform) இருக்க வேண்டிய அவசியமில்லை"
அதாவது ஒரே நாட்டில் வசிக்கும் பல நம்பிக்கைகள் கொண்ட மக்களுக்கும் எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாகச் சட்டம் இருக்க வேண்டும் என்பதல்ல என நீதியரசர் பி.எஸ்.சவ்ஹான் தலைமையிலான சட்ட ஆணையம் கூறியுள்ளது வரவேற்கத் தக்க ஒன்று.
எந்த அம்சத்திலும் தங்களை வித்தியாசமாக வெளிப்படுத்திக் கொள்ளும் உறுதியை மக்களுக்கு அளிக்கும்போதே 'மதச்சார்பின்மை' என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் எனவும் ஆணையம் கூறியுள்ளது.
மதம் மற்றும் பிராந்திய (மாநில) அடிப்படைகளில் நிலவும் பன்மைத் தன்மைகள் என்பன பெரும்பான்மை வாதத்தின் உரத்த குரலால் அமுக்கப்பட்டுவிடும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது எனவும் சட்ட ஆணையம் கூறியுள்ளது.
எல்லாவற்றிலும் ஒரே சீர்மை (Uniformity) இருக்க வேண்டும் என்கிற ரீதியில் கொடுக்கப்படும் அழுத்தம் பண்பாட்டுப் பன்மைத்தன்மைகளுக்கு எதிராகப் போய் அதுவே ஒரே நாடு என்கிற தேச ஒற்றுமையின் (territorial integrity) சிதைவுக்குக் காரணமாகி விடக் கூடாது - என்றும் சட்ட ஆணையம் அறிக்கை முன்வைக்கும் கருத்துக்கள் கவனத்துக்கு உரியன.
_________________________________________________
சீர்மையை நோக்கிய முன்னோக்கிய பயணத்திற்கான ஒரே வழி எலோருக்கும் ஒரே சிவில் சட்டம் கொண்டு வருவதுதான் என்பதல்ல எனவும் சட்ட ஆணையம் கூறியுள்ளது. அதற்குப் பதிலாக எல்லாத் தனி நபர் சட்டங்களையும் தொகுத்து முன்வைப்போம் (codification). அப்போது எல்லாவற்றிலும் உள்ள பிரச்சினைகள் ஒப்பீட்டு ரீதியில் வெளிச்சத்திற்கு வரும். நமது அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளின் வெளிச்சத்தில் அவை சோதனைக்குள்ளாகும்.
ஒரே சிவில் சட்டம் என்பதை எல்லோர் மேலும் கட்டாயமாகத் திணிப்பதற்குப் பதிலாகச் சமத்துவத்திற்கு முதன்மை அளிக்கும் உலகளாவிய சில கோட்பாடுகளை நோக்கி யாரும் செல்ல இதுவே வாய்ப்பாக அமையும்.
இப்படியான கருத்துக்களை முன்வைத்துள்ள சட்ட ஆணயம், இவற்றோடு தனிநபர்ச் சட்டங்களில் சில பொதுத் திருத்தங்களையும் பரிந்துரைத்துள்ளது, அவை:
குறைந்த பட்சத் திருமண வயது இரு பாலருக்கும் 18 ஆக இருக்க வேண்டும்;
தமது துணைவர் அல்லது துணைவியின் திருமணத்திற்கு அப்பாலான தொடர்பை இரு பாலருக்கும் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக்குதல்;
பொதுவில் விவாகரத்தை எளிதாக்குதல் - முதலியன.
ஒரு தார மணமே சரியானது பலதார மணத்தை ஏற்க இயலாது என்றெல்லாம் தாங்கள் கூறாவிட்டாலும் பலதார மணத்தை ஒரு பாலருக்கு மட்டுமே அனுமதிப்பது என்கிற அடிப்படையில் பலதார மணத்தை ஏற்க இயலாது எனவும் ஆணையம் கூறிஉள்ளது.
_______________________________________________
பல்வேறு பண்பாடுகளும் நம்பிக்கைகளும் நடைமுறையில் உள்ள ஒரு ஜனநாயக / மதச்சர்பற்ற அரசமைவில் கட்டாயப் பொது சிவில் சட்டத்திற்கு இடமில்லை என்கிற கருத்தை வலிமையாக முன்வைத்துள்ள வகையில் சட்ட ஆணையத்தின் இந்த முன்வைப்புகள் ஏற்கத்தக்கவை.
அதே நேரத்தில் இன்று பல்வேறு மதங்களின் தனி நபர்ச் சட்டங்களிலும் உள்ள பொருத்தமும் நியாயமும் அற்ற சில குறிப்பான பிரிவுகளில் ( எ.கா: ஆண்களுக்கு மட்டும் பலதார மண உரிமை, பால்ய மணம் முதலியன) திருத்தங்கள் தேவை என்பதையும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
இன்றைய மத்திய அரசும் ஆளும் கட்சியான பா.ஜ.கவும் முஸ்லிம் பெண்களின் மேல் கொண்ட பாசத்தால் "எல்லோருக்கும் ஒரே சிவில் சட்டம்" என்கிற கருத்தை முன்வைக்கவில்லை என்பதை சிறு பிள்ளைகளும் அறியும். அவர்களின் நோக்கம்
(1) இதன் மூலம் "மதச்சார்பின்மை" என்கிற அரசியல் சட்ட அடிப்படையைக் கேள்விகுள்ளாக்குவதும்,
(2) சிறுபான்மை மக்களின் மதக் கடமைகளை அவர்களின் அடிப்படை உரிமைகள் என்பதிலிருந்து அகற்றுவதன் மூலம் அவர்களுக்குத் தாங்கள் இரண்டாம்தரக் குடிமக்கள்தான் என்பதை உணர்த்துவதும் மட்டும்தான்.
இந்த நிலையில் ஒரே சிவில் சட்டம் என்பது வெவ்வேறு நம்பிக்கைகளுடன் வாழும் பல்வகை மக்களும் வாழும் ஒரு சமூகத்திற்குப் பொருத்தமானதல்ல என்பதை அழுத்தமாகச் சொல்லும் வகையில் இந்த அறிக்கை முக்கியமான ஒன்று. அதேநேரத்தில் திருமணம், பெண்ணுரிமை முதலான அம்சங்களில் மதங்களின் கருத்துக்களில் பல இன்றைய நவீன ஜனநாயகக் கருத்தியலுக்கும் மதிப்பீடுகளுக்கும், நமது அரசியல் சட்ட அடிப்படைகளுக்கும் பொருந்தாமல் உள்ளதை இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
மொத்ததில் மாற்றங்கள் தேவை. அவை காலப்போக்கில் வரவேண்டும் என்பது மட்டுமல்ல, அவை வந்து கொண்டும் உள்ளன என்பதையும் நாம் க்க்கில் கொள்ள வேண்டும்.
__________________________________________________
இத்தோடு பொது சிவில் சட்டம் குறித்து நான் இரண்டாண்டுகளுக்கு முன் எழுதிய நூலில் பல்வேறு தீர்ப்புகளின் அடியாகச் சுட்டிக் காட்டும் ஒன்றையும் இங்கு நினைவூட்டிக் கொள்வது அவசியம்.
சட்ட நடைமுறைகள் இரு வகைகளில் இங்கு செயல்படுகின்றன. இறுக்கமான சட்டங்களை இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்துவது என்பது ஒரு வழி; இன்னொன்று நீதிமன்றத் தீர்ப்புகளின் வழி நடைமுறையில் உருவாகிச் சட்டங்களாகவே நிலைபெறுவது. இதற்கு எடுத்துக்காட்டு "அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்க முடியும்" என்பது. இது சட்டமல்ல. ஆனால் நடைமுறையில் உள்ளது.
அதே போலத்தான் இன்று எந்த முஸ்லிம் ஆணும் தன் மனைவியை ஒரே தருணத்தில் நேரடியாகவோ இல்லை தபால் அல்லது, தொலைபேசி மூலமாகவோ முத்தலாக் சொல்லி ரத்து செய்வதை எந்த நீதிமன்றமும் ஏற்பதில்லை. இழப்பீடுகள் அளிக்காமல் மனைவியை ரத்து செய்வதையும் நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை. தங்கள் மீதான கணவர் அல்லது அவரது குடும்பத்தினரின் வன்முறைகளுக்கு எந்த முஸ்லிம் பெண்ணும் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் நீதி பெறலாம்.
மதச்சார்பற்ற ஜனநாக அரசமைவின் அடிப்படைகளுக்கு ஆபத்தில்லாமலேயே முஸ்லிம் பெண்கள் உட்பட எந்தப் பிரிவினருக்கும் நியாயம் கிடைப்பதை உறுதி செய்வது என்பதற்கு இத்தகைய வழிமுறைகளே ஒரே தீர்வாக இருக்க முடியும்.
____________________________________________
முஸ்லிம் சமூகமும் இயக்கங்களும் இதுதான் அடிப்படைப் பிரச்சினை என்பதை ஏற்று இது குறித்து வெளிப்படையாகப் பேசுதல் அவசியம்.

No comments:

Post a Comment