Tuesday, 4 September 2018

இப்ராஹீம் நபி காலத்தில் கஃபா விற்கு இரண்டு வாசல்கள் இருந்தன

மக்கா நகரில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி காற்றுடன் கூடிய பலத்த மழையினால் கஃபதுல்லாஹ்வின் திரை அகன்ற நிலையில் கஃபதுல்லாஹ்வின் தற்போதைய கதவுக்கு நேர் எதிராக மேற்கு திசையில் அடைக்கப்பட்ட ஒரு வாசல் காட்சியை பலரும் கவனித்திருப்பீர்கள்
#அவ்வாசல் மறக்கப்பட்ட கஃபாவின் இடைக்கால வரலாற்றை நினைவூட்டியது
---------------------------------------------------------------------------------
இப்ராஹீம் நபி காலத்தில் கஃபா விற்கு இரண்டு வாசல்கள் இருந்தன.

இரண்டு வாசல்களும் தரையோடியிருந்தன.மக்கள் ஒரு வாசல் வழியாக உள்ளே நுழைந்து எதிரே இருந்த மறு வாசல் வழியாக வெளியேறி வந்தனர்.
அப்பொழுது கஃபா, இப்பொழுது அதன் அருகே அரை வட்ட வடிவில் இருக்கும் ஹதீமையையும் இணைத்து விசலாமாக இருந்தது.
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களுக்கு இறை தூது வருவதற்குமுன்பு குறைஷியர் கள் சிதிலமடைந்த கஃபா வை புனரமைப்பு செய்ய முடிவெடுத்தனர்.அப்பொழுது
குறைஷிக் குலத்தினர் கஃபாவின் கட்டுமானப் பணிக்காக தங்கள் வருமானத்தில் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும், (விபச்சாரத்தின் வருமானமோ,வட்டிப் பணமோ, மக்கள் எவரிடமிருந்தாவது அக்கிரமமாகப் பெறப்பட்ட பொருளோ) சேரக்கூடாது”என்று முடிவெடுத்து குறைஷியர் ஒவ்வொரு குலத்தாரும் தங்களுக்கிடையே அந்தப் பணியைப் பிரித்துக் கொண்டனர்.
அந்த நேரத்தில் சேகரிக்கப்பட்ட பணம் கஃபதுல்லாவின் முழு பகுதியையும் நிர்மாணிப்பதற்கு போதுமானதாக இருக்கவில்லை.

இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டிய காஃபா செவ்வக வடிவில் இருந்தது. ஆனால், குறைஷியர்கள் கைவசம் இருந்த தொகையை வைத்து கஃபாவை அதன் செவ்வக வடிவிலேயே முழுமைப்படுத்த முடியவில்லை.
அதனால் செவ்வக வடிவில் இருந்த (கஃபா) கட்டிட அஸ்திவாரத்தில், சதுர வடிவில் கஃபாவை கட்டிமுடித்து அஸ்திவாரத்தின் மீதமுள்ள இடமும் கஃபா தான் என அறிவிக்கும் முகமாக அரை வட்ட வடிவில் ஒரு சுவற்றை எழுப்பினர்.
அந்த இடத்திற்கு ஹதீம் என்றும் ஹிஜ்ரு இஸ்மாயீல் என்று சொல்லப்படுகிறது.
{அந்த இடத்தில் தான் நபி இப்ராஹீம்عليه السلام அவர்கள்
குழந்தையாக இருந்த இஸ்மாயீல் நபியை (عليه السلام) விட்டு விட்டு சென்றதாகக்
கூறப்படுகிறது}

ஹதீம் பகுதி கஃபாவின் உள் பகுதியாக கருதப்படுவதால்தான் பர்ளு தொழுகை ஜமாஅத்தாக நடை பெறும்போது இமாம் காஃபாவிற்கு வெளியே நிற்பதால் அப்பகுதியில் தொழுவது தடை செய்யப்படுகிறது
இப்ராஹிம் நபி காலத்தில் இருந்தது போலவே கஃபாவின் உள்ளே நுழைவதற்கு ஒரு வாயிலும்,வெளியேறுவதற்கு ஒரு வாயிலும் அமைத்தனர்.
ஆனால் உள்ளே செல்லும் வாசலை உயராமகவும்,வெளியே வரும் வாசலை தரையோடும் அமைத்து கட்டி முடித்தனர்.

மக்கா வெற்றிக்குப்பின் நபி صلى الله عليه وسلم அவர்கள் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுடன் கஃபாவை வலம் வந்து, ஹத்தீம் இடத்தில் நின்று, தங்கள் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றை சொன்ன நபியவர்கள் இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இருந்ததை போன்றே ஹத்தீம் பகுதியையும் இணைத்து கஃபாவை புதுப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் ஆனால் அண்மையில்தான் இஸ்லாத்தை ஏற்ற மக்காவாசிகள் முஹம்மது கஃபாவை இடிக்கிறார் என்று தவறாக புரிந்துக் கொண்டு அதனால் தேவையற்ற குழப்பங்கள் மக்களிடையே ஏற்படும் என்பதால் அந்த விருப்பத்தை நிறைவேற்றாமல் விட்டுவிட்டேன் என்று கூறினார்கள்.

நபித்தோழர் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மறைவிற்குப் பின் மகனார் யஜீத் கலிஃபாவாக பதவி ஏற்றார்.
யஜீத் கலிபாவாக பதவியேற்றதை நபிகளாரின் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பேரர் நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.
கூஃபா வாசிகளின் அழைப்பை ஏற்று ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூஃபா சென்று அங்கு எஜீதுக்கு எதிரான போரில் ஷஹீத் ஆனார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் அவர்களை ஹிஜாஜ் மாகாண பகுதியினர் தங்களின் கலீபாவாக ஏற்றுக் கொண்டார்கள்.அப்பொழுது நடைப்பெற்ற போரில் கஃபாவின் ஒரு பகுதி தீக்கிரையானது,
அவ்வாண்டு நடைப்பெற்ற ஹஜ்ஜின் போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களிடையே தங்களுடைய சிறிய தாயான அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறிய விருப்பத்தை மக்களிடம் தெரிவித்து கஃபாவை முழுமையாக இடித்து விட்டு இப்ராஹீம் அலைஹிஸ்ஸாம்் அவர்கள் காலத்தில் இருந்ததைப் போன்று வடிவமைப்பில் தான் கட்டப்போவதாக அறிவித்தார்.
மக்களில் பலரும் அதனை எதிர்த்தார்கள். இருப்பினும், அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் அவர்கள் நான் அல்லாஹ்விடம் இஸ்திகாரா செய்து முடிவெடுப்பேன் என்று சொன்னவர் அவ்வாறே இஸ்திகாரா செய்த பின் கஃபாவை ஹதீம் பகுதியுடன் இணைத்து இரண்டு வாசல்களையும் வைத்து புதிதாக கட்டினார்.



யஜித்தின் மரணதிற்குப்பின் அப்துல் மாலிக் பின் மர்வான் கலீபாவாக பதவி ஏற்றார்.ஹிஜாஜ் பகுதியையும் தனது காட்டுப்பாட்டில் கொண்டுவர ஹஜ்ஜாஜ் பின் யுசுபின் தலைமையில் பெரும் படையை அனுப்பினர்.மக்காவை கைப்பற்றிய ஹஜ்ஜாஜ் அப்துல்லாஹ் பின் ஜுபைர்(ரழி)அவர்களை கொலை செய்ததுடன் அவர் புனரமைத்த கஃபாவின் ஹதீம் பகுதியை இடித்து விட்டு குறைசியர்கள் அமைத்தது போன்றே ஹதீம்பகுதியை அறை வட்ட வடிவில் மீண்டும் அமைத்தார்.வெளியே வருமவாசலையும் சுவர்எழுப்பிஅடைத்துவிட்டார் .
அப்பாஸிய கலீபாவாக மஹதி அவர்கள் பதவி ஏற்றபின் மீண்டும் அப்துல்லாஹ் பின் ஜுபைர்(ரழி) அவர்கள் அமைத்த நபி பெருமான் விரும்பிய வடிவமைப்பில் கஃபாவை மாற்றி அமைக்க விரும்பி
மார்க்க அறிஞர்களிடம் ஆலோசனை செய்தார்.. இமாம் மாலிக் ( ரஹ்)அவர்கள் ஆட்சியாளர்கள் மாறும்போழுதெல்லாம் காபாவை மாற்றி அமைத்தால் வெகுஜன மக்களுக்கு காஃபத்துல்லாஹ்வின் மீதுள்ள கண்ணியம் போய்விடும் எனவே இப்பொழுதுள்ள வடிவமைப்பிலேயே விட்டுவிடுங்கள் என் ஆலோசனை கூறினார்
அதனை கலீபா மஹதி ஏற்றுக்கொண்டார்.
அன்றிலிருந்து கஃபத்துல்லாஹ் எவ்வித மாற்றமுமின்றி முஃமினீன்களின் வணக்கஸ்தலமாக இருந்து வருகிறது.
-----கணியூர் இஸ்மாயீல் நாஜி

No comments:

Post a Comment