Thursday, 27 September 2018

அறிவு - Mansoor Ali

இறைவன் தனது தூதர்களுக்கு செய்தியை வழங்கிடும் முறைக்கு 'வஹி' என்று பெயர். ஆங்கிலத்தில் இதனை (Revelation) என்று அழைக்கலாம். தமிழில் அதனை 'வெளிப்படுத்துதல்' என்று மொழி பெயர்க்கலாம். எனினும் மொழி பெயர்ப்புகள் வஹி என்பதன் முழுமையான பொருளைத் தந்திட இயலாது. வஹி என்பது முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தது. இறைவன் தான் தெரிவு செய்திடும் மனிதர் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட வானவர் (angel) மூலமாக தனது செய்திகளை மிகச் சரியான சொற்களைக் (Exact words) கொண்டு படித்துக் காட்டி அவர் உள்ளத்தில் அப்படியே பதிய வைக்கும் அசாதாரணமானதொரு நிகழ்ச்சிக்குப் பெயர் தான் வஹி என்பது!

இந்த அனுபவம் இறைத்தூதர்களுக்கு மட்டுமே உரித்தானது. வேறு எவரும் இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இயலாது. எனவே இந்த வஹி எனும் அனுபவம் எப்படி இருந்திருக்கும் என்பதை வேறு எவராலும் ஊகித்து அறிந்து கொண்டிட இயலாது!

எனவே வஹி மூலம் பெறப்பட்ட செய்தி - அந்த செய்தியைச் சொல்லிட இறைவனே தேர்ந்தெடுத்த சொற்கள் மூலமாக அப்படியே இறைத்தூதருக்கு வேத வசனங்களாகக் கொண்டு போய் சேர்க்கப்படுவதால் - பெறப்பட்ட அந்த செய்தியை 'இது ஊகம் தான்! இது கற்பனை தான்!' - என்று எண்ணி ஒதுக்கி விட முடியாது.

ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம். ஒருவர் தனக்கு வஹி வருகிறது என்று பொய் சொல்லி விட்டால்? இந்தக் கேள்விக்கு மட்டும் சரியான விடை கிடைத்து விட்டால், ஒருவர் உண்மையான இறைத்தூதர் தான் என நிருவப்பட்டு விட்டால் - இறைவனிடமிருந்து அவருக்கும் அவர் மூலமாக நம்மிடமும் வந்து சேர்க்கப்படும் 'இறைவனின் செய்தி'யின் யதார்த்த நிலை என்ன?

இறைவனோ எல்லாம் அறிந்தவன். இறைவனின் தூதரோ உண்மையானவர். எனவே வஹி மூலமாக நம்மிடம் வந்து சேர்கின்ற செய்தி - சத்தியமானது! சந்தேகத்துக்கு இடம் இல்லாதது! அந்தச் செய்தி குறித்து - அது உண்மையாகவும் இருக்கலாம் அல்லாமலும் இருக்கலாம் என்று பொத்தம் பொதுவாகக் கருத்துச் சொல்லிட இயலாது! - வஹி மூலம் பெறப்படும் ஒவ்வொரு சொல்லும் இறைவனுடையவை!
ஒவ்வொரு கருத்தும் இறைவனிடமிருந்து பெறப்பட்டவை! ஆதாரப் பூர்வமானவை! எனவே அறிவு என்றால் அது தான் அறிவு! சந்தேகத்துக்கு இடம் இல்லாத அறிவு! கோணல் இல்லாத அறிவு! அது பொய் என்று ஒதுக்கித் தள்ளி விட இயலாத அறிவு! - வஹியின் கருத்துக்கு மாற்றமான எதனையும் உண்மை என்று நிரூபித்திட இயலாத அளவுக்கு உறுதி வாய்ந்த அறிவு!

தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். (18:1)

No comments:

Post a Comment