அம்பாசமுத்திரம், டிச. 3: மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் ராமநதி அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை ஓரிரு நாளில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நிரம்பி வருகிறது. கடனாநதி அணை ஏற்கனவே நிரம்பி விட்ட நிலையில் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனிடையே ராமநதி அணையும் நிரம்பியதை அடுத்து சனிக்கிழமை அதிகாலை அணையில் இருந்து உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது.
சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் கீழ் அணையில் 1 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 2 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 1.2 மி.மீ மழையும் கடனாநதி அணையில் 4 மி.மீ மழையும், ராமநதி அணையில் 13 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 16.4 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2141.18 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 929 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 139.00 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 93.40 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 149.08 அடியாகவும் இருந்தது. பாபநாசம் அணை, சேர்வலாறு அணைகளில் இருந்து 3,000 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
கடனாநதி அணையின் நீர்மட்டம் 83.20 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 83.00 அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனத்திற்காக 35 கனஅடி திறந்து விடப்படுகிறது. கடனாநதி அணைக்கு வந்து கொண்டிருந்த 400 கனஅடி நீர் கருணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. ராமநதி அணையில் இருந்து 100 கனஅடி திறக்கப்படுகிறது.
வீணாகும் உபரி நீர்: தாமிரபரணி பாசனப் பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பாசனத்திற்கு தற்போது தண்ணீர் தேவையில்லை. இதனிடையே பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 3,000 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படுகிறது. பாபநாசம் கீழ் அணையில் மழை பெய்து வருவதால் தாமிரபரணியில் 5,000 கனஅடி நீர் செல்கிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் திருவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து 7,000 கனஅடி நீர் உபரியாக செல்வதாக கூறப்படுகிறது. ஆகவே தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 10,000 கனஅடி நீர் வீணாக செல்கிறது. வீணாகும் உபரி நீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.
அம்பை ஷேக்
No comments:
Post a Comment