அஸ்ஸலாமு அலைக்கும்
மேனேஜ்மெண்ட் படிப்புகளில் சேர இந்த ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வை நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. டான்செட் நுழைவுத் தேர்வு மூலம் மேனேஜ்மெண்ட் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த தமிழக மாணவர்களுக்கு இந்தத் தேர்வு கட்டாயமா,இல்லையா என்பதை தமிழக அரசு விரைவில் தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் உள்ள மேலாண்மைக் கல்லூரிகளில் எம்.பி.ஏ., முதுநிலை மேனேஜ்மெண்ட் படிப்புகளில் சேர பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் மேனேஜ்மெண்ட் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் பொது நுழைவுத் தேர்வை (Common Management Admission Test - CMAT) நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) முடிவு செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தந்த மாநில தொழில்நுட்பக் கல்வித்துறை செயலாளர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏ.ஐ.சி.டி.இ. கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்க விரும்பும் மாநில அரசுகளும், கல்வி நிறுவனங்களும் ஆன்லைன் மூலம் ஏ.ஐ.சி.டி.இ. இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ. தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் எம்.பி.ஏ. படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு டான்செட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. எனவே, வரும் கல்வியாண்டில் (2012-13) தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு டான்செட் நுழைவுத் தேர்வு தொடர்ந்து இருக்குமா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை அல்லது ஏ.ஐ.சி.டி.இ. அறிவித்துள்ள பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்களா அல்லது இந்த இரண்டு தேர்வுகளும் ஒரு சேர இருக்குமா என்பது குறித்தும் தெரியவில்லை. இந்தப் பொது நுழைவுத் தேர்வு, அந்தந்த மாநிலங்களின் விருப்பத்தின் அடிப்படையிலானதுதானா அல்லது கட்டாயமா என்பதும் தெரியவில்லை. கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ. படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இது பொருந்துமா என்பதும் விளக்கப்படவில்லை. இது குறித்து, தமிழக அரசு விரைவில் தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேனேஜ்மெண்ட் படிப்புகளில் சேர எந்தத் தேர்வு என்பது குறித்து தமிழக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டால்தான் ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மேனேஜ்மெண்ட் படிப்புகளில் சேருவதற்கான இந்தப் பொது நுழைவுத் தேர்வை எழுதுவது குறித்து மாணவர்கள் முடிவு எடுக்க வசதியாக இருக்கும்.
இந்த நுழைவுத் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏ.ஐ.சி.டி.இ. வெளியிட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஏதேனும் ஓர் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் இளநிலைப் பட்டப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும். மாணவர்களின் தகுதி விவரங்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்வு, மூன்று மணி நேரம் நடைபெறும். மொத்தம் 400மதிப்பெண்கள் கொண்ட இத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் மொத்தம் 100. குவாண்டிட்டேட்டிவ் டெக்னிக்ஸ் அண்ட் டேட்டா இன்டர்பிரிட்டேஷன், லாஜிக்கல் ரீசனிங், லேங்வேஜ் காம்ப்ரிஹென்ஷன், ஜெனரல் அவேர்னெஸ் போன்ற பிரிவுகளில் தலா 25கேள்விகள் கேட்கப்படும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.1200 செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். கட்டணத்தை வரைவோலையாக அனுப்ப விரும்பும் மாணவர்கள் தங்கள் வரைவோலையை கண்டிப்பாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில்தான் எடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் ஜனவரி 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை ஜனவரி 30ம் தேதி முதல் இணையதளத்தில் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம். மைசூர், ஆக்ரா, டில்லி, ஜாம்ஷெட்பூர், நாக்பூர், அகமதாபாத், தன்பாத், ஜெய்ப்பூர், நொய்டா, அலகாபாத், ஜம்மு, பனாஜி, அம்பாலா,சென்னை, திருச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட 61 நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். பிப்ரவரி 20 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 28 ஆம் தேதி வரை காலை 9.30 முதல் 12.30 வரையிலும் பிற்பகல் 2.30 மணியிலிருந்து 5.30 மணி வரைக்கும் இரண்டு பிரிவாக இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று ஏ.ஐ.சி.டி.இ. தெரிவித்துள்ளது. இத்தேர்வு முடிவுகள் மார்ச் 11ம் தேதி வெளியிடப்படும்.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் நடத்தும் பொது மேனேஜ்மெண்ட் நுழைவுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஜனவரி 9, 2012.
விவரங்களுக்கு : www.aicte-cmat.இன்
Best regards,
ASHRAF
No comments:
Post a Comment