Tuesday, 8 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ப த் ரை நோ க் கி


அபூஸுப்யான் ஸிரியாவிலிருந்து திரும்பி வரும் காலம் நெருங்கி வந்தது. நபிகளார் தல்ஹாவையும், உமரின் ஒன்றுவிட்ட சகோதரரும், ஹனீப் ஆன ஸைதின் மகனுமான ஸஈதையும் மதீனாவின் மேற்குப் புறக் கடலோரமாயமைந்திருந்த ஹவ்ரா எனும் இடத்துக்கு அனுப்பி வைத்தார்கள். அபூஸுப்யானின் வர்த்தகக் குழு வந்து சேர்ந்ததும் செய்தி கொண்டு வரும்படி இருவரும் பணிக்கப்பட்டிருந்தனர். இதன் மூலம் நபிகளார் தென்மேற்கு நோக்கி விரைந்து சென்று வர்த்தகக் குழுவை முந்திக் கொள்ள இயலும். உளவாளிகள் இருவரையும் ஜுஹைனாவின் தலைவர் தாராண்மையுடன் வரவேற்று வர்த்தகக் குழு அப்பிரதேசத்தைக் கடந்து செல்லும்வரை அவர்களைத் தனது வீட்டில் ஒளித்து வைத்திருந்தார். அவர்களது சிரமங்கள் அனைத்தும் வீண் விரயமாகவே முடிவுற்றன. மதீனாவில் யாரோ ஒருவர் - ஒரு யூதர் அல்லது வஞ்சகர் என்பதில் ஐயமில்லை - நபிகளாரின் திட்டங்கள் குறித்து அபூஸுப்யானுக்கு செய்தியனுப்பியிருந்தார். உடனே அபூஸுப்யான் கிபாரிக் கோத்திரத்தவரான தம்தம் என்பாரை வேலைக்கமர்த்தி, மக்காவுக்கு ஓர் அவசர செய்தியை அவர் மூலம் அனுப்பி வைத்தார். வர்த்தகக் குழுவைக் காப்பாற்றிக்கொள்ளக் குறைஷியர் உடனடியாக ஒரு படையுடன் கிளம்பி வரவேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அத்தோடு தானும் கரையோரப் பாதை வழியே இயன்றளவு விரைவாக, இரவும் பகலும் ஓய்வின்றி தன் குழுவினரை வழி நடாத்திச் சென்றார் அபூஸுப்யான்.


அபூஸுப்யானுக்கு மாத்திரம்தான் அவசரம் என்பதல்ல. மதீனாவில் இயன்றளவு தாமதித்துச் செல்ல நபிகளார் விரும்பியமைக்கு தக்க காரணங்களிருந்தன. அன்னாரின் அன்புக்குரிய மகள் ருகையா கடுமையான சுகவீனமுற்றிருந்தார். என்றாலும் தனிப்பட்ட காரணங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய வேளையல்ல இது. காலதாமதம் செய்வது உசிதமல்ல எனக்கருதிய நபிகளார் உளவாளிகள் திரும்பி வரும் வரை கூட காத்திருக்கவில்லை. அவர்கள் மீண்டும் மதீனாவை வந்து சேரும் முன்னமேயே, நபிகளார் அன்ஸாரிகளையும் முஹாஜிர்களையும் கொண்டதோரு படையுடன் வெளியேறிவிட்டார்கள். படையில் மொத்தம் முந்நூற்றைந்து பேர் இருந்தனர். அவ்வேளையில் மதீனாவில் வலிமை வாய்ந்தவர்களாயிருந்த எழுபத்தேழு முஹாஜிர்களுள் மூவர் தவிர ஏனையோரனைவரும் படையெடுப்பில் பங்கு பற்றினர். நபிகளார், தமது மருமகன் உத்மானை வீட்டிலேயே தங்கியிருந்து தன் சுகவீனமுற்ற மனைவியை கவனித்துக் கொள்ளும்படி வேண்டினார்கள். மற்ற இருவர் தல்ஹாவும் ஸஈதும். உளவாளிகளாகச் சென்றிருந்த அவர்கள் திரும்பி வர முன்னமேயே படை கிளம்பி விட்டது.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

யு த் த த் தி ன்

வி ளி ம் பி ல்


அநியாயத்திற்குள்ளானவர்களுக்கு யுத்தம் செய்ய அனுமதியளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ், இவர்களுக்கு உதவி செய்யப் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். இவர்கள் ( எத்தகையோரென்றால் ) நியாயமின்றித் தங்கள் வீடுகளிலிருந்து ( விரோதிகளால் ) துரத்தப்பட்டார்கள். எங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறியதுதான் இவர்கள் செய்த குற்றம்! குர்ஆன் : 22 : 39-40

மதீனாவுக்கு வந்து சேர்ந்த சிறிது காலத்துள்ளேயே நபிகளார்க்கு இந்த இறைவசனங்கள் அருளப்பட்டன. இங்கு அனுமதி எனக் குறிக்கப்பட்டது ஒரு கட்டளையே என்பதனையும், யூதர்களுடனான ஒப்பந்தத்தில் யுத்தக் கடமைப்பாடுகள் அழுத்தமாகக் குறிக்கப்பட்டமையையும் உணர்ந்தார்கள் நபிகளார். ஆரம்ப இறைவசனங்களில் ஒன்று, 

இந்நிராகரிப்போருக்கு நீர் அவகாசமளியும் ; ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளியும்
குர்ஆன் : 86 : 17 

- எனக் கூறியிருந்தது. எனினும் அந்த அவகாசம் முன்னேற்பாடான ஓர் அறிவிப்பு மட்டுமே. இறைவன் இப்போது குறைஷியர் மீதான படையெடுப்பைக் கட்டளையிட்டுள்ளான். எனவே தமது சக்திக்குட்பட்ட அனைத்தையும் கொண்டு அவர்களை எதிர்த்துப் போராடி, அல்லாஹ்வின் ஆணைகட்கு அடிபணியும் வரை குறைஷியருக்கு அறேபியாவில் அமைதி கிட்டாதென்பதை உணர்த்த வேண்டுவது நபிகளாரின் கடமையாகிவிட்டது. குறைஷியரை அமைதியிழக்கச் செய்வது, தம்மையும் தம்மைச் சார்ந்தோரையும் அமைதியிழக்கச் செய்யும் என்பதையும் அன்னார் உணராதிருக்கவில்லை. இவ்வாறான முன்னெண்ணங்கள் மற்றுமோர் இறைவசனத்தாலும் உறிதிப் படுத்தப்பட்டன :

( இந்நிராகரிப்போரின் ) விஷமத்தனம் முற்றிலும் நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் முற்றிலும் நிலைபெரும் வரையில் அவர்களுடன் யுத்தம் புரியுங்கள் குர்ஆன் : 8 : 39

- எனினும் இப்போதைய நிலையில் திடீர்த்தாக்குதல்கள் மேற்கொள்வதனைத் தவிர வேறெதுவும் செய்ய இயலாது. குறைஷியர் தமது வர்த்தகப் பிரயாணங்களின் போது இலகுவாகத் தாக்குதலுக்குள்ளாகக் கூடியவர்கள். சிறப்பாகக் கோடை கால ஆரம்ப மாதங்களில் ஸிரியாவுடனான வர்த்தகம் மிக மும்முரமாக இருக்கும்போது மதீனாவிலிருந்து அவர்கள் தாக்குதலுக்குள்ளாவது இலகு. குளிர் காலப் பருவங்களின் போது தமது வர்த்தகக் குழுக்களை அவர்கள் தெற்கே பெரிதும் யெமன், அபிஸீனியா நோக்கியே அனுப்பி வந்தனர்.

Monday, 7 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


பு தி ய இ ல் ல த் தா ர்

பள்ளிவாசல் கட்டட வேலைகள் பூரணமாகி வந்த வேளை, நபிகளார் அதன் கிழக்குச் சுவரோடு இணைந்ததாக இரண்டு சிறு உறைவிடங்களை அமைக்கும்படி வேண்டினார்கள். ஒன்று அன்னாரின் மனைவி ஸவ்தாவுக்கு. மற்றது அன்னாருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஆயிஷாவுக்கு. கட்டட வேலைகள் ஏழு மாத காலமளவு தொடர்ந்தன. இக்கால இடைவெளியில் நபிகளார் அபூ ஐயூபுடனேயே தங்கியிருந்தார்கள். ஸவ்தாவின் இருப்பிடம் தயாரானதும் அவரை அழைத்து வரவென ஸைத் மக்காவுக்கு அனுப்பப்பட்டார். அவர், உம்ம் குல்தூமையும் பாத்திமாவையும் கூட அழைத்து வரவேண்டியவராயிருந்தார். உம்ம் ரூமான், அஸ்மா, ஆயிஷா ஆகியோரை அழைத்து வரும்படி அபூபக்ர், தன் மகன் அப்த்-அல்லாஹ்வுக்கு செய்தியனுப்பினார். மக்காவிலிருந்து திரும்பி வரும்போது ஸைத் தனது மனைவி உம்ம் அய்மனையும் மகன் உஸாமாவையும் கூடக் கூட்டி வந்தார். அவர்களோடு தல்ஹாவும் பயணம் செய்தார். அசையும் ஆதனங்கள் அனைத்தையும் விற்றுத் தனது ஹிஜ்றாவை மேற்கொண்டிருந்தார் அவர். அனைவரும் வந்து சேர்ந்த சில காலத்துள் அபூபக்ர், அஸ்மாவை ஸுபைருக்கு மனைவியாகக் கொடுத்தார். ஸுபைர் ஏற்கெனவே சில மாதங்கள் தனது தாயார் ஸபிய்யாவுடன் மதீனாவில் இருந்து வந்தவர். அபூபக்ரின் சகோதரி குரைபா, வயது முதிர்ந்து அந்தகராய் விட்ட தமது தந்தையார் அபூகுஹாபாவைக் கவனித்துக் கொள்ளவென மக்காவிலேயே தங்கி விட்டார். குரைபாவைப் போலன்றி குஹாபா இன்னும் இஸ்லாத்தை ஏற்காதவராகவே இருந்தார்.


நபிகளார் இப்போது உம்ம் அய்மனுக்கும் மேலாக ஸைத், தனது வயதையொத்த இன்னும் ஒருவரை மணம் செய்து கொள்ள வேண்டுமெனத் தீர்மானித்தார்கள். எனவே தமது ஒன்றுவிட்ட சகோதரரும் ஜஹ்ஷின் மகனுமான அப்த்-அல்லாஹ்விடம் அவரது சகோதரி ஸைனபைத் தரும்படி கேட்டார்கள். முதலில் ஸைனப் இதற்கு இணக்கம் காட்டவில்லை. அதற்குக் காரணங்களும் இருந்தன. பின்னரே அவை தெரிய வருவனவாயின. எனினும் அப்போதைய நிலையில் அவர் கூறிய காரணம் தக்கதொன்றாக அமையவில்லை. தான் குறைஷிக் குலத்திலுள்ள ஒரு பெண் எனக் காரணங்காட்டி நின்றார் அவர். ஸைனபின் தாயார் இரு வழிகளிலும் தூய்மையான குறைஷிய இரத்த பந்தம் கொண்டவராயிருந்தும் அஸத் கோத்திரத்தவர் ஒருவரை மணந்திருந்தார். குறைஷியருக்கிடையில் வளர்ப்பு மகன் என்ற வகையில் ஸைதின் நிலை எவ்வாறிருந்தாலும் அவரது பெற்றோரின் கோத்திரங்களான பனீ-கல்ப், பனீ-தாயி என்பன எவ்வகையிலும் பனீ-அஸத்துக்கு குறைந்ததெனக் கூறுவதற்கில்லை. அவர் ஸைதை மணக்க வேண்டுமென்பது நபிகளாரே தெரிவித்ததோர் ஆலோசனை என அறிந்து கொண்டதும் ஸைனப் சம்மதம் தெரிவித்தார். திருமணமும் நடந்தேறியது. அதே கால அளவில் அவரது சகோதரி ஹம்னா, முஸ்அபுக்கு மணஞ்செய்து கொடுக்கப்பட்டார். சில காலம் சென்ற பின்னர் உமைமா மதீனாவுக்கு வந்து நபிகளாரை ஏற்று விசுவாசங் கூறினார்.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

அ மை தி யு ம்
பி ரி வி னை யு ம் ( தொடர்… )

ஸஅத்தின் வார்த்தைகளை நபிகளார் ஒரு போதும் மறந்து விடவில்லை. இப்ன்-உபையோ தனது செல்வாக்கு வெகு உயரிய நிலையிலிருந்து மிக வேகமாகக் குன்றிச் செல்வதை உணர்ந்து கொண்டார். தான் இஸ்லாத்தினுள் நுழையாது விடின் எஞ்சியிருக்கும் சிறிதளவு செல்வாக்கும் முற்றாகவே இல்லாது போய் விடலாம். பெயரளவிலாவது இஸ்லாத்தைத் தழுவிக் கொள்வது, தன்னைத் தொடர்ந்தும் அதிகாரத்தில் வைத்துக் கொள்ளத் துணை புரியவும் கூடும். ஏனெனில், பாரிய காரணங்களேதுமின்றிப் பழய வாக்குறுதிகளை முறியடிப்பதனை அறாபியர் ஒரு போதும் விரும்புவதில்லை. எனவே இப்ன்-உபை இஸ்லாத்தில் நுழைந்து கொள்வதில் காலதாமதம் செய்யவில்லை. அவர் நபிகளாரை ஏற்று, வாக்குறுதியளித்து, தொழுகையையும் கடைப்பிடித்தொழுகி வந்த நிலையிலும் விசுவாசிகள் அவர் குறித்து நம்பிக்கையற்றவர்களாகவே இருந்தனர். நேர்மையில் குன்றிய, ஐயத்துக்குறியவர்களான வேறு பலரும் இருக்கவே செய்தனர். எனினும் இப்ன்-உபை தான் கொண்டிருந்த செல்வாக்குகளின் காரணமாக அவர்களிலிருந்தும் முற்றும் வேறுபட்டவராகவே விளங்கினார். அதனாலேயே அவர் மிகவும் அபாயகரமானவராகவும் தோற்றினார்.


பள்ளிவாசல் உருப்பெற்று வந்த ஆரம்ப மாதங்களிலேயே அஸ்அத்தின் மறைவினால் முஸ்லிம் சமுகம் பேரிழப்புக்குள்ளாயது. அவரே யத்ரிபிலிருந்தும் நபிகளாருக்கு விசுவாச வாக்குறுதியளித்த முதலாமவர். அவரே முஸ்அப்பின் உபசரிப்பாளராக இருந்து இரு அகபாக்களுக்குமிடையில் அவருடன் நெருங்கிக் கருமமாற்றி வந்தவர். நபிகளார் கூறினார்கள் :

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

அ மை தி யு ம்
பி ரி வி னை யு ம் ( தொடர்… )


பாலை நிலச் சோலையில் இனிமேலும் உள் நாட்டு யுத்தங்கள் ஏற்படக்கூடிய ஆபத்துகளுக்கு ஒரு முற்றுப் புள்ளியிடுவதாக அமையுமென்ற எண்ணத்தில் புதிய நிலையைப் பல யூதர்கள் வரவேற்றனர். என்றாலும் அவ்வாறான ஆபத்துகள் மூலமும் சில நன்மைகள் விளையவே செய்தன. அறபிகளிடையே காணப்படக் கூடிய பிரிவினைகள் அறபிகளல்லாதோரின் நிலையை உயர்த்தி வைத்தன. அவர்கள் யுத்த சகாக்களாக நாடப்பட்டு வந்தனர். அவ்ஸ்-கஸ்ரஜ் கோத்திரத்தார்களது ஒற்றுமை பழைய யுத்த உடன்பாடுகளைப் பெறுமதியிழக்கச் செய்து விட்டது. அதேவேளை யத்ரிபின் அறபிகளை மிகப் பலம் வாய்ந்தோராகவும் அது ஆக்கி வைத்தது. நபிகளாரிடம் தாம் செய்து கொண்ட ஒப்பந்தம் அறபிகளின் பலத்தில் தாமும் பங்கு பெற்றுக்கொள்ள யூதர்களுக்குத் துணையாயிருந்தது. பாலைச் சோலையின் வெளியில் வாழும் பரந்த அறாபிய சமுகத்தவர்களுடன் யுத்தங்கள் மூளக் கூடுமாயின் தாமும் பங்கு பெற வேண்டியிருக்குமென்பதையும் அவர்கள் உணராதிருக்கவில்லை. இன்னும் பரீட்சிக்கப்படாத புதிய ஏற்பாடுகள் மூலம் பெரு நட்டங்கள் கூட விளையலாம். பழய அமைப்பு முறை அவர்களுக்கு நன்கு பரிச்சயமானதாயிருந்ததோடு, அது குறித்துப் போதிய அறிவும் அவர்களுக்கிருந்தது. எனவே பழய அமைப்பு முறைக்கே மீண்டு கொள்ளும் ஆவலும் யூதர்கள் பலரிடை உதித்திருந்தது. இவ்வாறான தெளிவற்றதொரு பின்னணியிலேயே, அறாபியரிடையே காணப்பட்ட பிரிவினைகளைக் கொண்டு லாபமீட்டுவதில் பெருந்திரன் வாய்ந்திருந்தவரும் பனீகைனுகாவைச் சார்ந்தவருமான ஒரு யூத அரசியல்வாதி, அவ்ஸ்-கஸ்ரஜ் ஒருமைப்பாடு காரணமாக மிகவும் மனமுடைந்து போனவராகக் காணப்பட்டார். எனவே அவர் தனது கோத்திரத்தில் நல்ல குரல் வளம் வாய்க்கப்பெற்றிருந்ததோர் இளைஞரை அழைத்து, அவரை, அன்ஸாரிகள் அமருமிடம் நோக்கிச் சென்று, கடைசியாக நடந்த உள்நாட்டு யுத்தமான புஆத் யுத்தத்தின் சிறிது முன்னும் பின்னும் இரு கோத்திரத்தாராலும் இயற்றப்பட்டுப் பாடப்பட்டு வந்த கவிதைகளை அவர்கள் மத்தியில் பாடும்படி வேண்டினார். அக்கவிதைகள் எதிரிகளை இகழ்ந்தன; வீரர்களின் பிரதாபங்களைப் போற்றின ; - வீரமரணம் அடைந்தவர்களைப் புகழ்ந்துரைத்தன ; பழி வாங்கும் அச்சுறுத்தல்களளித்தன. தன்னைச் சூழவிருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்து நின்ற அந்த இளைஞர் நிகழ் காலத்திலிருந்து இறந்த காலத்துக்கு இவர்களைக் கொண்டு செல்வதில் பெருவெற்றி கண்டார். அவ்ஸ்களைச் சார்ந்தோர் அப் பாடல்களை உற்சாகமாக வரவேற்றனர். கஸ்ரஜ் கோத்திரத்தாரும் தமது பாடல்களை அவ்வாறே வரவேற்றனர். இது பின்னர் இரு சாராரையும் வாதாட்டங்களுக்குள்ளாக்கவே, அவர்கள் பெருமைகள் பாராட்டத் தொடங்கி, ஒருவரையொருவர் இகழ்ந்துரைத்து இறுதியில் 
“ போர்! போர்! ” எனக் கோஷமிடலாயினர். தீக்குழம்புப் பாறைப் பகுதிக்குச் சென்று யுத்தத்தைத் தொடங்குவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் செய்தி நபிகளாரை எட்டியதும், உடனிருந்த முஹாஜிர்களையும் அழைத்துக் கொண்டு, தமது இரு உபசரிப்பாளர்களும் ஏற்கெனவே யுத்தத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்த இடம் நோக்கி அன்னார் மிக வேகமாகச் சென்றார்கள்.

“ ஓ முஸ்லிம்களே! ” என அவர்களை உரத்து விளித்து தெய்வீக நாமத்தை இரு முறை மொழிந்தார்கள் ; 
அல்லாஹ்! அல்லாஹ்! பின்னர் 

“ நான் உங்களுடன் இருக்க ; அல்லாஹ் உங்களை இஸ்லாத்தின் பால் வழிகாட்டியிருக்க ; அதன் மூலம் உங்களைக் கெளரவித்து, அதன் மூலமே மூடவழக்கங்களிலிருந்தும் உங்களை விடுவித்து, நம்பிக்கையீனத்தினின்றும் உங்களைப் பாதுகாத்து, உங்களது இதயங்களையெல்லாம் ஒன்றுபடச் செய்துள்ள நிலையிலும், நீங்கள் அறியாமைக் காலத்தில் இருந்தவர்கள் போல் தான் நடந்து கொள்வீர்களா? ” என வினவினர் நபிகளார்.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

அ மை தி யு ம் 
பி ரி வி னை யு ம்


நபிகளார் தாம் பெற்றுக் கொண்ட முற்றவெளி ஒரு பள்ளிவாசலாக அமைக்கப்படவேண்டும் எனக் கட்டளைப் பிறப்பித்தார்கள். கூபாவில் போலவே அனைவரும் உடனடியாகக் கருமமாற்றத் தொடங்கினர். பெரும்பகுதி செங்கற்களால் சுற்றிக் கட்டப்பட்டது. ஜெரூஸலம் நோக்கிய வடபுறத்துச் சுவரின் நடுவில் தொழுகை நடாத்தப்படும் இடத்து வளைவின் இரு புறத்தும் கற்கள் வைக்கப்பட்டன. முற்றத்திலிருந்த ஈச்ச மரங்கள் வெட்டப்பட்டுத் தூண்களாக அமைக்கப்பட்டு, அவை ஈச்சம் ஓலைகளால் வேயப்பட்ட கூரைக்குத் தாங்கலாக நிறுவப்பட்டன. முற்றத்தின் பெரும் பகுதி வெறுமனே விடப்பட்டிருந்தது.


மதீனாவின் முஸ்லிம்கள், நபிகளாரால் உதவியாளர்கள் எனப் பொருள்படும் அன்ஸார் எனும் பட்டம் வழங்கப்பட்டிருந்தனர். குறைஷிய முஸ்லிம்களும், தம் வீடுகளை விட்டு வெளியேறி மதினாவில் வந்து குடியேறிய ஏனைய கோத்திரத்தவரும் ‘முஹாஜிராஹ்’ - வெளியேறியோர் என வழங்கினர். நபிகளார் உட்பட அனைவரும் பள்ளிவாசல் நிர்மாண வேலைகளில் பங்கெடுத்தனர். அச்சந்தர்ப்பத்துக்கென ஒருவர் இயற்றியிருந்த சில வாசகங்களைத் தாம் வேலை செய்யும் போது அவர்கள் பாடலாயினர் :

யா அல்லாஹ்! மறுமை நலன் தவிர
வேறு நலன் ஏதும் இல்லை.
அன்ஸார்க்கும் முஹாஜிர்க்கும்
உன் அருளே என்றும் துணை.

அவர்கள் பாடிய ஏனைய பாடல்களும் இதே கருவையே கொண்டிருந்தன.

Sunday, 6 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ம தீ னா வி னு ள் நு ழை த ல்


நபிகளார் பாலைச் சோலையை கி.பி. 622 செப்டம்பர் மாதம் 27 - ந் திகதி திங்கட்கிழமை சென்றடைந்தார்கள். கிட்டிய பல செய்திகள், மதீனாவாசிகள் நபிகளாரின் வருகையை எதிர்ப்பார்த்துப் பொறுமையிழந்தவர்களாக இருந்து வந்தமையைச் சுட்டி நின்றன. எனவே நபிகளார் மூன்று முழு நாட்களே கூபாவில் தங்கியிருந்தார்கள். பள்ளிவாசலொன்றனுக்கான அத்திவாரத்தையும் அமைத்தார்கள். இதுவே இஸ்லாத்தில் முதன் முதல் கட்டப்பட்ட பள்ளிவாசல். வெள்ளிக்கிழமை காலை கூபாவிலிருந்து புறப்பட்ட நபிகளாரும் தோழர்களும் பகல் வேளையில் தொழுவதற்கென ரானூனா வெளியில் தங்கினர். கஸ்ரஜ் கோத்திரத்தரான பனீஸாலிம் மக்கள் அன்னாரை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். அவர்களுடன் தொழுகை நடாத்தப்பட்டது. இதுவே நபிகளார் இனிமேல் தமது நிரந்தர வசிப்பிடமாக விளங்கவிருக்கும் ஊரில் நடாத்திய முதலாவது வெள்ளிக்கிழமைத் தொழுகையாகும். பனீ-அந்-நஜ்ஜாரிலிருந்து நபிகளாரது உறவினர் சிலர் அன்னாரைக் காணவென வந்திருந்தனர் ; பனீ அம்ரின் சில அங்கத்தவர்கள் கூபாவிலிருந்து வழித்துணையாக வந்திருந்தனர். அனைவரும் ஒன்று சேர கூட்டுத் தொழுகையில் சுமார் நூறு பேரளவு கலந்து கொண்டனர். தொழுகையின் பின்னர் நபிகளார் கஸ்வாவின் மீதும், அபூபக்ரும் ஏனையோரும் தத்தமது ஒட்டகங்களின் மீதுமாக நகரத்தை நோக்கி அனைவரும் செல்லலாயினர். இவர்களது வலப்புறமும் இடப்புறமுமாக அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தவர்கள் ஆயுத பாணியராக, வாள்களைக் கையிலேந்தி வந்து கொண்டிருந்தனர். இது மரியாதை அணிவகுப்பொன்றாக அமைந்திருந்தது. எவ்வித பாதுகாப்பும் தேவையற்றிருந்த அப்போதைய நிலையில், தாம் முன்னர் அண்ணலாரைப் பாதுகாப்பதாகக் கொடுத்த வாக்குறுதி வெறும் வார்த்தையளவினதானதல்ல என்பதை உணர்த்துவதாகவே இது பெரிதும் அமைந்தது. அதைப் போன்றதொரு மகிழ்ச்சிகரமான நாள் இல்லவே இல்லை.

“ அல்லாஹ்வின் தூதர் வந்துவிட்டார்! அல்லாஹ்வின் தூதர் வந்து விட்டார்! ”

- என்ற மகிழ்ச்சி ஆரவாரம் வழி நெடுக நின்றிருந்த ஆண்கள், பெண்கள் குழந்தைகள் அனைவரது குரல்களையும் ஈர்த்துப் பெரும் முழக்கத்தை ஏற்படுத்தி நின்றது. மதினாவின் தென் புறத்துத் தோட்டங்கள், பேரீச்ச மரத் தோப்புகள் ஊடாகச் செல்லும் போது கஸ்வா மெதுவாகவும் கம்பீரமாகவும் நடந்து சென்றது. வீடுகள் சிலவாகவும், பெரும் இடைவெளிகளோடு அமைந்தனவாகவும் இருந்தன. படிப்படியாக அவர்கள் ஜனநெருக்கம் மிஞ்சிய பகுதிகளை அடைந்தனர். பலரும் நபிகளாரை அன்புடன் அழைக்கலாயினர்.

Saturday, 5 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ஹி ஜ் றா ( தொடர்… )


ஒரு நாள் காலை எதிர்ப்புறத்திருந்து வந்து கொண்டிருந்த ஒரு சிறு வர்த்தகக் குழு இவர்களைக் கலக்கமுறச் செய்தது. என்றாலும் அது அபூபக்ரின் ஒன்று விட்ட சகோதரர் தல்ஹாவின் குழுவே என்பதனை அறிந்து கொண்டதும் இவர்கள் மகிழ்ந்தனர். ஸிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த அவர் தனது ஒட்டகங்களை அங்கு வாங்கி இருந்த ஆடையணிகளாலும் வேறும் பல வர்த்தகப் பொருட்களாலும் நிரப்பியிருந்தார். வரும் வழியில் யத்ரிபில் தங்கியிருந்த அவர், மக்கா சென்று பொருட்களை விற்றுத் தீர்த்ததும் உடனடியாக யத்ரிபுக்குத் திரும்பி செல்லும் நோக்குடையவராக விளங்கினார். நபிகளாரின் வரவை அப்பாலை வனச்சோலையின் மக்கள் மிக்க ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்திருப்பதாகக் கூறிய அவர் விடைபெற்றுக் கொள்ளுமுன்னர், தான் குறைஷியரின் பெரும் செல்வந்தர் யாருக்கேனும் விற்றுக் கொள்ளலாம் என வைத்திருந்த சிறந்த வெண்ணிற ஸிரிய மேலாடைகளில் இருவருக்குமென ஒவ்வொன்றைக் கொடுத்தார்.

தல்ஹாவைப் பிரிந்து சிறிது தூரம் சென்ற பின்னர், அவர்கள் வடக்கு நோக்கித் திரும்பினார்கள். கடலோரத்திலிருந்து சிறிது உட்புறமாகச் சென்று பின்னர் வடகிழக்காக யத்ரிபை நோக்கி நேரே செல்லலானார்கள். தமது பிரயாணத்தின் ஒரு கட்டத்தில் நபிகளார் ஓர் இறைவசனம் அருளப்பெற்றார்கள் :

( நபியே! ) நிச்சயமாக எவன் ( இறவனின் கட்டளைகள் பொதிந்த ) இந்தக் குர்ஆனை உம்மீது விதித்திருக்கின்றானோ அவன், நிச்சயமாக உம்மை ( மக்காவாகிய உம்முடைய இல்லத்தில் ) திரும்பச் சேர்த்து வைப்பான்.

குர்ஆன் : 28 : 85

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ஹி ஜ் றா


இதேவேளை நபிகளார் அபூபக்ரிடம் சென்றிருந்தார்கள். கால தாமதமேதும் செய்யாமல், அபூபக்ரின் வீட்டின் பின்புறம் இருந்த ஜன்னல் ஒன்றன் வழியாக அவர்கள் வெளியேறி, சேணம் பூட்டப்பட்டு இவர்களுக்கெனத் தயாராக வைக்கப்பட்டிருந்த இரு ஒட்டகங்களும் இருந்த இடத்தை அடைந்தனர். நபிகளார் ஒன்றன் மீது ஏறிக் கொண்டார்கள். அபூபக்ரும் அவருடைய மகன் அப்த்-அல்லாஹ்வும் அடுத்ததில் ஏறிக் கொண்டனர். அவர்கள் திட்டமிட்டிருந்தபடி தென் புறத்திருந்த தவ்ர் மலையின் ஒரு குகையை அடைந்தனர். இது யெமனுக்குச் செல்லும் வழியில் இருந்தது.

நபிகளார் காணாமற் போய் விட்டமை தெரிய வந்ததுமே நகரின் வட பகுதிச் சுற்றுப்புறம் முழுவதும் தேடுதல் குழுக்கள் அனுப்பப்படும் என்பதனை உணர்ந்திருந்தமையாலேயே அவர்கள் தென்புறமாகச் சென்றனர். மக்காவிலிருந்தும் வெளியேறிச் சென்றதும் நபிகளார் தனது ஒட்டகத்தை நிறுத்திப் பின்னால் திரும்பி மக்காவை நோக்கிக் கூறினார்கள் :

“ இறவனின் உலக முழுவதிலும் நீயே எனக்கு மிகவும் விருப்பமான இடம் ; இறைவனுக்கும் மிக விருப்பமான இடம். எனது மக்கள் என்னை விரட்டி விடாதிருந்தால் நான் ஒரு போதும் உன்னை விட்டு நீங்கி இருக்க மாட்டேன் ”.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ச தி

ஹிஷாம், அய்யாஷ் ஆகியோரின் மதத்துறவு குறைஷியருக்கு மிகச் சிறியதொரு வெற்றியாகவே அமைந்திருந்தது. அவர்களால் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாத அளவு பெருந்தொகையினர் மக்காவை விட்டும் வெளியேறிக் கொண்டிருந்தனர். மக்காவின் சில பெரிய வீடுகள் இப்போது குடியிருப்போர் இல்லாத நிலையிலிருந்தன. முன்னர் நிரம்பியிருந்தன சில இப்போது முதியர்கள் சிலரை மட்டுமே கொண்டிருந்தன. பத்தே வருடங்களின் முன்னர் செல்வமும் அமைதியும் நிரம்பப் பெற்றிருந்த நகரம் முற்றாக மாறிவிட்டிருந்தது. அனைத்துக்கும் காரணம் இந்த ஒரு மனிதர் மட்டுமே. துயருறுத்தும் சோகமயமான இவ் வெண்ணங்கள் எழுவதும் செல்வதுமாக இருந்த நிலை ஒரு புறமிருக்க, வடக்கேயிருந்த நகரத்திலிருந்து வரக்கூடிய ஆபத்து குறித்து அனைவரதும் அடிமனதில் ஒருவகை அச்சவுணர்வும் இருந்து கொண்டேயிருந்தது. எதிரிகளாயமையக் கூடியவர்கள் அங்கே பெருகி வந்தார்கள். அவர்களோ, தமது மதத்துடன் முரண்பாடுகள் எழக் கூடுமாயின், உறவுகளாலான பந்தங்களையும் பொருட்படுத்தாதோராய் இருந்தனர். நபிகளார் முன்னர், “ஒ குறைஷியரே!..... நான் உங்களுக்கு அழிவையே கொண்டு வந்துள்ளேன்” எனக் கூறியதைக் கேட்டவர்கள் ஒரு போதும் அதனை மறந்து விடவில்லை. அப்போதைய நிலையில் அஞ்சுவதற்கு போதிய காரணங்கள் இருக்கவில்லை. இப்போதோ, தாம் தீவிர கண்காணிப்பு செலுத்தி வந்த நிலையிலும் அவர் தம்மை ஏமாற்றி விடக் கூடுமாயின், அத்தோடு தானும் யத்ரிபைச் சென்றடைவாராயின், அவ்வாசகங்கள் வெறும் அச்சுறுத்தல் மட்டுமல்ல என்ற நிலை உருவாகி விடலாம். 

நபிகளாரின் பாதுகாவலர் முத்இம்மின் மரணம், குறைஷியருக்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.இப்போது ஆவன செய்ய வழி நன்கமைந்து விட்டது. வழியைச் செப்பனிடும் வகையில், நபிகளாரின் பெரிய தந்தையார் அபூலஹப், குறைஷித் தலைவர்கள் கூடிப் பேசும் அவைக்குச் சமூகமளிக்காது ஒதுங்கிக் கொண்டார். பல தரப்பட்ட அபிப்பிராயங்கள் கூறப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வந்த நீண்டதொரு கலந்துரையாடலின் பின்னர், அபூ ஜஹ்ல் முன் வைத்ததொரு திட்டமே தமது பிரச்சினைகட்குத் தக்கவொரு தீர்வை அளிப்பதாக அமையும் எனப் பலரும் ஏற்றனர். சிலர் தயக்கத்துடனாயினும் அதற்குச் சார்பாயினர். 

Friday, 4 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

பெ ய ர் வு கள் ப ல

நபிகளார் தம்மைப் பின்பற்றியவர்களை மக்காவிலிருந்தும் யத்ரிபுக்குப் புலம் பெயர்ந்து செல்ல ஊக்குவித்தார்கள். ஏற்கெனவே ஒருவர் அவ்வாறு சென்றிருந்தார். அபூதாலிபின் மரணத்தினால் அவரது மருமகன் அபூஸலாமாவுக்குப் பாதுகாப்பில்லாது போயிற்று. தனது சொந்தக் கோத்திரத்தாரை விட்டும் நீங்கி அடைக்கலம் தேட வேண்டிய நிலைக்குள்ளானார் அவர். மகன் ஸலாமாமைக் கையிலேந்தியவராகத் தன் மனைவி அமர்ந்திருந்த ஒட்டகத்தைத் தானே வழி நடாத்தி வடக்கு நோக்கிப் பயணமானார் அபூஸலாமா. மக்ஸூமின் அடுத்த கிளையினரான பனீ-அல்-முகீராவைச் சார்ந்தவராகவும், அபூஜஹ்லின் ஒன்றுவிட்ட சகோதரியாகவும் விளங்கினார் உம்ம்-ஸலாமா. அவரது குடும்ப அங்கத்தவர்கள் சிலர் இவர்களைப் பின்தொடர்ந்து சென்று அபூஸலாமாவின் கையிலிருந்த ஒட்டகக் கயிற்றைப் பறித்துக் கொண்டனர். தொகையில் மிகைத்திருந்த அவர்களை எதிர்த்து நிற்பது பயனளிக்காது என்பதை உணர்ந்த அபூஸலாமா, தம் மனைவியை அவர்களோடு திரும்பிச் செல்லுமாறு பணித்ததோடு வெகு விரைவிலேயே உம்ம் ஸலாமா தன்னுடன் சேர்ந்து கொள்ள ஆவன செய்வதாகக் கூறினார். என்றாலும் மக்ஸும் கோத்திரத்தாருள் அபூஸலாமாவின் கிளையினர் இதனைக் கேள்வியுற்றதும் சினங் கொண்டவர்களாக பனீ-அல்-முகீராக்களிடம் சென்று, குழந்தையைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கேட்டு பிரச்சினையைப் பெரிதாக்கி விட்டனர். இதனால் மிகவும் கொடூரமான முறையில் தந்தையும் தாயும் சேயும் பிரிந்து வாழ வேண்டியேற்படவே முழுக் கோத்திரத்தாரும் இவர்கள் மீது அனுதாபங் கொண்டு, மகனோடு சென்று கணரோடு வாழ உம்ம்-ஸலாமாவை அனுமதித்தனர். ஸலாமாவை எடுத்துக் கொண்டு வேறு எவரது துணையுமின்றி தாயார் ஒர் ஒட்டகத்திலேறிப் பயணமானுர். ஆறு மைல்களளவு சென்றதும் அப்த்-அத்தார் கோத்திரத்தைச் சேர்ந்த உத்மான்-இப்ன்-தல்ஹா என்பாரைச் சந்தித்தார் அவர். இஸ்லாத்தைத் தழுவியிருந்தவரல்ல உத்மான். உம்ம்-ஸலாமாவின் பிரயாண முடிவு வரை தான் வழிகாட்டி உதவுவதாகக் கூறி அதில் பிடிவாதமாகவும் நின்றார் அவர். அபூ ஸலாமா கூபாவில் இருப்பதாக அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர். யத்ரிபின் தென் புறக் கோடியிலிருந்ததொரு கிராமம் அது. அவர்கள் கூபாவின் ஈச்சமரத் தோட்டமொன்றன் அருகில் வந்ததும், உத்மான், “ உமது கணவர் இந்தக் கிராமத்தில்தான் இருக்கின்றார்; இறைவனது ஆசீர்வாதத்துடன் இதில் நுழையும்” எனக் கூறி மக்கா நோக்கித் திரும்பிச் சென்று விட்டார். உத்மானின் கருணையையும் அன்பையும் ஒரு போதும் மறக்காத உம்ம் ஸலாமா எப்போதும் அவரது மேன்மையை வியந்தவராயிருந்தார்.


இரண்டாவது அகபா உடன்படிக்கையின் பின்னர் முஸ்லிம்கள் பெருந்தொகையினராகப் புலம் பெயர்ந்து செல்லத் தொடங்கினர். முதலில் செல்லத் தொடங்கியோர் நபிகளாரின் ஏனைய ஒன்று விட்ட சகோதரர் சிலராவர். ஜஹ்ஷ்-உமைமா தம்பதியரின் குடும்பத்தில் நால்வர் சென்றனர். அவர்களது புதல்வர் அப்த்-அல்லாஹ் ; அவரது அந்தகச் சோதரர் அபூ அஹ்மத் ; இருவரதும் சகோதரியான ஸைனப், ஹம்னா ஆகியோர். நீண்ட காலமாக அப்த்-ஷம்ஸின் கூட்டுறவில் இருந்த பனீ-அஸத்களில் பலரும் உடன் சென்றனர். ஹம்ஸாவும் ஸைதும் அப்போதைக்குத் தம் மனைவியரை மக்காவில் விட்டுச் சென்றனர். உத்மான் ருகையாவைக் கூட்டிச் சென்றார். உமர் தனது மனைவி ஸைனப், மகள் ஹப்ஸா, இளம் மகன் அப்த்-அல்லாஹ் ஆகியோருடன் புறப்பட்டார். ஹப்ஸாவின் கணவர், ஸஹ்ம் கோத்திரத்தவரான குனைஸும் அவர்களோடிருந்தார். அபூ ஸலாமாவின் அரைச் சோதரர் அபூ ஸப்ரா, தனது மனைவியும் ஸுஹைலின் மகளுமான உம்ம்-குல்தூமைக் கூட்டிச் சென்றார். இம்முறை புலம் பெயர்ந்து சென்ற நபிகளாரின் ஏனைய ஒன்றுவிட்ட சகோதரர்கள் ஸுபைர், துலைப் ஆகியோராவர்.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ய த் ரி ப் ஆ த ர வு ( தொடர்… )

உஸைத் தன் கோத்திரத்தாரிடம் திரும்பிச் சென்றார். அவர்களைச் சென்றடையுமுன்னரே அவருள் ஏற்பட்டிருந்த மாற்றத்தினை அவர்களால் அவதானிக்க முடிந்தது.

“ நீர் என்ன செய்தீர்? ” என்றார் ஸஅத்.

“ நான் அவர்கள் இருவரிடமும் பேசினேன். இறைவன் பெயரால், அவர்களில் எவ்வித தீங்கையும் நான் காணவில்லை. ”

“ உம்மால் ஒரு பிரயோசனமும் இல்லை ” எனக் கூறிய ஸஅத், ஈட்டியை தானே கையிலேந்தி விசுவாசிகள் இன்னமும் அமைதியாக அமர்ந்திருந்த இடம் நோக்கிச் சென்றார். தனது ஒன்றுவிட்ட சகோதரர் அஸ்அத்திடம் தனது ஆட்சேபணையைத் தெரிவித்த ஸஅத், தமது உறவு முறையை அவர் தவறாகப் பயன்படுத்துகின்றார் எனக் குற்றம் சாட்டி நின்றார். எனினும் முஸ்அப் தலையிட்டு முன்னம் உஸைதிடம் பேசியது போலவே பேசினார். ஸஅத்தும் அவர் கூறுவதைச் செவிமடுக்கத் தன்னை இயைபு படுத்திக் கொண்டார். இப்போதைய முடிவும் முன்னையது போலவே அமைந்தது.

ஸஅத் தொழுத பின்னர், உஸைதும் மற்றும் சிலரும் அமர்ந்திருந்த இடத்திற்குத் திரும்பிவர, அனைவருமாக அவ்ஸ் கோத்திரத்தார் கூடும் இடத்திற்குச் சென்றனர். ஸஅத் தன் மக்களை நோக்கி,

“ உங்களிடையே எனது நிலைமைக் குறித்து நீங்கள் கருதுவதென்ன? ” எனக் கேட்டார். 

மக்கள் கூறினர் : “ நீரே எமது பெரும் எஜமான் ; நீதியில் எம்மிடையே சிறந்தவர் ; மிக்க நலம் பயக்கும் தலைவர் ”.

பின்னர் ஸஅத் கூறினார் : “ அப்படியானால், இறைவனிலும் அவனது தூதரிலும் விசுவாசம் கொள்ளாத வரை உங்களில் எந்த ஓர் ஆணுடனும் எந்த ஓர் பெண்ணிடமும் வார்த்தையாட மாட்டேன் என நான் சத்தியம் செய்கின்றேன் ”.

இரவு வேளை வந்தபோது அவரது கோத்திரத்தாருள், இஸ்லாத்தில் சேர்ந்து கொள்ளாத ஒருவரையும் காண முடியவில்லை.

முஸ்அப் சுமார் பதினொரு மாதங்களளவு அஸ்அத்துடன் தங்கியிருந்தார். அக்கால இடைவெளியில் இஸ்லாத்தைத் தழுவியோர் பலர். அடுத்த புனித யாத்திரைக் காலம் ஆரம்பமான போது அவ்ஸ், கஸ்ரஜ் மக்களிடம் தான் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை நபிகளாருக்கு தெரிவிக்கவென முஸ்அப் மக்கா திரும்பினார்.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ய த் ரி ப் ஆ த ர வு

“ பகைமையாலும் தீமைகளாலும் பிரிந்து வாழும் மக்கள் ” எனத் தமது மக்களை விவரித்த யத்ரிபின் மதமாறிய அறுவரும் எதனையும் மிகைப்படுத்திக் கூறிவிடவில்லை. உள்நாட்டு யுத்தத்தில் நான்காவதும் மிகக் கொடூரமானதுமாக இருந்த புஆத் யுத்தம் தீர்க்கமான ஒரு முடிவையும் ஏற்படுத்துவதாக இல்லை. சமாதான உடன்படிக்கைகள் ஏதும் ஏற்படுவதற்குறிய சாத்தியங்களும் காணப்படவில்லை. அப்போதைக்கு யுத்த நிறுத்தம் செய்து கொள்வதென்பதே முடிவாயமைந்தது. பயங்கரமான முறையில் நீடித்த தொடர்பறாத கசப்புணர்வும் வன்செயல்களின் அதிகரிப்பும் இரு சாராலிருமிருந்த மிதவாத நோக்குடையவர்களிடையே சிறந்ததொரு தலைமைத்துவம் இருக்க வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தி வந்தன. குறைஷிகளை ஒன்று படுத்த குஸை வந்ததுபோல, தம்மனைவரையும் ஒன்று படுத்தி வைக்கப் பலம் வாய்ந்ததொரு தலைவன் தேவை என்பதனையும், தமது பிரச்சினைகட்கு அது தவிர வேறு எந்த முடிவும் கிடையாதெனவும் அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

இப்பாலைவனச் சோலையின் தலைவர்களுள் ஒருவராயிருந்த அப்த்-அல்லாஹ்-இப்ன்-உபை என்பார் தம்மனைவர்க்கும் ஓர் அரசனாகத் திகழத் தகுதிகள் கொண்டவர் எனப் பலர் கருதி வந்தனர். யுத்தத்தின் அண்மைய தொடரில் அவர் அவ்ஸ்களுக்கெதிராகக் கலந்து கொள்ளவில்லை. யுத்தம் ஆரம்பமாகும் நிலையில் தனது மக்களை அவர் திருப்பியழைத்துக் கொண்டார். என்றாலும் அவர் கஸ்ரஜ் கோத்திரத்தவர். எனவே தமது கோத்திரத்தவரல்லாத ஒருவரை அவ்ஸ்கள் ஓர் அரசனாக ஏற்றுக் கொள்வரோ என்ற ஐயமும் வளர்ந்து வந்தது.

Thursday, 3 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

து ய ர வ ரு ட த் தி ன் பி ன்


துயர வருடம் கழிய, அடுத்த வருடத்து புனித யாத்திரைக்காலம் ஜூன் மாத ஆரம்பத்தில் வந்தது. யாத்திரிகர்கள் மினாவில் மூன்று நாட்கள் தங்கியிருப்பது வழக்கம். பலியீட்டுவைபவ நாளன்று நபிகளார் மினாவுக்குச் சென்றார்கள். வெவ்வேறு குழுவினரின் கூடாரங்களுக்குச் சென்று, தனக்குச் செவி சாய்ப்போருக்குப் போதனை செய்வது பல வருடங்களாக நபிகளாரின் வழக்கமாகி வந்திருந்தது. அவ்வேளைகளிலெல்லாம் தன் மனதை உந்தும் குர்ஆன் வாசகங்களையும் ஓதிக் காட்டுவார்கள். மக்காவிலிருந்து மினாவை அண்மிய இடமாக விளங்குவது அகபா. இங்கு சமவெளியிலிருந்து பாதை நேர்குத்துப்போல புனித நகரை நோக்கிய மலைகளை நோக்கி மேலெழும்புகின்றது. இந்த வருடம்தான் அகபாவில், நபிகளார், யத்ரிபின் கஸ்ரஜ் கோத்திரத்தோரான ஆறு பேரை சந்தித்தார்கள். இவ்வறுவரில் எவரையும் நபிகளார் அறிந்திருக்கவில்லை. ஆனால், நபிகளார் குறித்தும், அன்னாரது இறைதூதுவ பாத்யதை குறித்தும் அவ்வறுவரும் கேள்விப்பட்டிருந்தனர். நபிகளார் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவர்களது முகங்கள் ஆர்வத்தால் பிரகாசித்தன. அன்னார் கூறுவதை அறுவரும் மிகக் கவனமாகச் செவி மடுத்துக் கேட்டனர். தமது அண்டை வாசிகளான யத்ரிப் யூதர்களின் அச்சுறுத்தல் அவர்கள் ஒவ்வொருவரது மனத்துள்ளும் நன்கு பதிந்திருந்தது. -

“ ஓர் இறை தூதர் வரும் காலம் நெருங்கி விட்டது : நாம் அவரைப் பின்பற்றி உங்களைக் கொன்றொழிப்போம் - ஆத் இராம்கள் அழிக்கப்பட்டது போல ”.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

“ உ ன் பே ர ரு ட் பி ழ ம் பி ன் ஒ ளி யி ல் ”

அபூதாலிபின் விதவை பாத்திமா இஸ்லாத்தை ஏற்றிருந்தார். இது நிகழ்ந்தது அவரது கணவரின் மரணத்துக்கு முன்னரோ பின்னரோ என்பது தெளிவில்லை. அவரது மகள் உம்ம்-ஹானியும் இஸ்லாத்தைத் தழுவினார். இவர் அலீ, ஜஅபர் ஆகியோரின் சகோதரி. இறைவனின் ஏகத்துவம் பற்றிய கருத்துகள் உம்ம்-ஹானியின் கணவர் ஹுபைராவின் மனதில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. என்றாலும் நபிகளார் தமது வீட்டுக்கு வரும் வேளைகளில் அவரும் அன்னாரை வரவேற்று நன்கு உபசரிப்பார். நபிகளார் வருகை தரும் சந்தர்ப்பங்களில் தொழுகைக்குறிய நேரம் வந்து விட்டால் அக்குடும்பத்து முஸ்லிம்கள் அனைவரும் கூட்டாகத் தொழுவார்கள். ஒரு முறை நபிகளாரின் பின்னின்று அனைவருமாக இரவுத் தொழுகையை முடித்த பின்னர், அன்றைய இரவைத் தமது குடும்பத்தாருடன் நபிகளார் கழிக்க வேண்டுமென உம்ம்-ஹானி வேண்டுகோள் விடுத்தார். அன்னாரும் அதனை ஏற்றனர். உறங்கிச் சிறிது நேரம் கழிந்ததும் நபிகளார் எழுந்து பள்ளிவாசலுக்குச் சென்றார்கள். இரவு வேளைகளில் கஃபாவை தரிசிப்பது அன்னாருக்கு மன மகிழ்ச்சியை அளித்தது. அங்கிருந்த வேளை மீண்டும் உறக்கம் வந்தது. நபிகளார் ஹிஜ்ரின் மேல் சாய்ந்தார்கள்.

“ நான் ஹிஜ்ரில் உறங்கிக் கொண்டிருந்த போது ஜிப்ரீல் என்னிடம் வந்து தனது கால்களால் என்னைத் தட்டினார். உடனே நிமிர்ந்து உட்கார்ந்த நான் எதையும் காணவில்லை. எனவே மீண்டும் நித்திரை கொண்டேன். இரண்டாம் முறை அவர் வந்தார். மூன்றாம் முறையும் வந்தார். பின் அவர் எனது கைகளைப் பிடிக்கவே நான் எழுந்து அவர் அருகில் நின்றேன். அவர் என்னைப் பள்ளிவாசலின் வாயிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு வெண்ணிற மிருகம் நின்றது. கழுதைக்கும் கோவேறு கழுதைக்கும் இடைப்பட்ட தோற்றம் கொண்ட அம்மிருகத்தின் இரு புறத்தும் சிறகுகள் காணப்பட்டன. அவற்றோடு அதன் கால்களும் அசைந்தன. அதன் ஒவ்வொரு பாத அடியும் அதன் கண்கள் காணும் தூரத்தை நிகர்த்து நின்றன " என்றன நபிகளார். - இ.இ. 264

Wednesday, 2 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

து ய ர வ ரு ட ம் ( தொடர்… )

மக்காவுக்கு திரும்பி வரும் வழியில் தகீப் கோத்திரத்தாரிடமிருந்து எந்த நன்மையும் கிட்டப் போவதில்லை என்பதை நபிகளார் நன்குணர்ந்து கொண்டனர். தம்மை நிராகரித்துவிட்ட இரு நகரங்களுக்கும் இடைப்பட்டிருந்த நக்லாஹ் வெளியைப் பிந்திய இரவில் வந்து சேர்ந்தார்கள் நபிகளார். தாம் நிராகரிக்கப்பட்டுள்ளமை அன்னாருக்கு தெளிவாகியிருந்த இந்த நிலையில்தான் தூரத்து நினவேயின் மனிதரொருவர் அன்னாரின் இறைதூதுவத்தை அங்கீகரித்திருந்தார். இப்போது நக்லாஹ்வில் தொழுவதற்காக நபிகளார் எழுந்து நின்ற வேளை ஜின்களின் கூட்டமொன்று அவ்விடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது.

நபிகளார் ஓதிக் கொண்டிருந்த குர்ஆன் வாசகங்களைக் கேட்டு நஸீபீனிலிருந்து வந்த அந்த ஏழு ஜின்களும் மெய்மறந்து நின்றன. தாம் மானிட லோகத்துக்கு மாத்திரம் அனுப்பப்பட்டவரல்ல என்பதை நபிகளார் அறிந்திருந்தனர். இறை வசனங்கள் அண்மையில்தான்…

நபியே! நாம் உம்மை உலகங்கள் யாவைக்கும் ஒரு அருளாகவே அனுப்பியிருக்கின்றோம் ( - குர்ஆன்: 21 :107 ) எனப் பிரகடனப்படுத்தியிருந்தன.

முன்னைய ஒரு ஸூறா (குர்ஆன் : 55) ஜின்களுக்கும் மனிதர்களுக்குமாக அருளப்பட்டிருந்தது. இரு சாராருக்கும் தீமைகள் புரிந்தால் தண்டனையாக நரகமும், இறை பக்தியுடன் நன்மைகள் செய்தால் சுவர்க்கமும் கிட்டும் நன்மாராயமும் கூறப்பட்டிருந்தது. இப்போது மற்றுமோர் இறைவசனம் அருளப்பட்டது :

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

து ய ர வ ரு ட ம் ( தொடர்… )

அபூபக்ருக்கும் பனீ ஜூமாஹ்களுக்குமிடையிலான பிரச்சினைகள் சில காலமாக அமைதிக்குள்ளாயின. ஹாஷிம்களின் தலைமைப் பீடம் அபூதாலிபின் பின்னர் அபூலஹப் வசமானது. அபூலஹப் தன் சகோதரன் மகனுக்கு அளித்த பாதுகாப்பு வெறுமனே பெயரளவினதாக மட்டுமே விளங்கியது. 
முன்னொரு போதும் இல்லாத வகையில் நபிகளார் துன்புறுத்தப்பட்டார்கள். ஒரு முறை வீதி வழியாகச் சென்று கொண்டிருந்த ஒரு மனிதர் வீட்டு வாசலை அண்மி, அழுகிய மாமிசத் துண்டொன்றனை அன்னாரின் சமையல் பானைக்குள் போட்டுச் சென்றார். மற்றெரு சந்தர்ப்பத்தில், தமது வீட்டு முற்றத்தில் நபிகளார் தொழுது கொண்டிருக்க, அன்னாரது உடம்பின் மேல், இரத்தமும் மலமும் தோய்ந்திருந்த செம்மறியாட்டுக் குடலொன்றனை வீசினார் ஒருவர். இவ்வாறு செய்தவர் ருகையாவின் கணவர் உத்மானின் சிறிய தந்தையான ஷம்ஸ் கோத்திரத்து உக்பா * என்பதைக் கண்டு கொண்டனர் நபிகளார். ஒரு கம்பினால் அக்குடலைத் தூக்கியெடுத்த நபிகளார் அதனை வீசியெறிய முன்னர் தம் வாசலில் நின்று கூறினார்கள் : 

“ஒ அப்த்-மனாபின் மக்களே! இது என்ன பாதுகாப்பு? ”

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

து ய ர வ ரு ட ம்

கி.பி 619-ம் ஆண்டு, தடையுத்தரவு நீக்கப்பட்டுச் சில காழங் கழிய, நபிகளார், தமது மனைவி கதீஜாவின் மறைவினால் பெருந்துயருற்றார்கள். மரணத்தின் போது கதீஜா பிராட்டியாருக்கு வயது அறுபத்தைந்து. நபிகளார் தமது ஐம்பதாவது வயதை எட்டிக் கொண்டிருந்தார்கள். இருவரும் மிக்க மகிழ்ச்சிகரமானதொரு குடும்ப வாழ்க்கையை இருபத்தைந்து வருடங்களாக நடாத்தி வந்திருந்தனர். நல்லதொரு மனைவியாக மட்டுமன்றி, நெருங்கிய நண்பராக, முதிர்ந்த ஆலோசகராக, அலீ - ஸைத் உட்பட குடும்பத்தின் அனைவருக்கும் அருமைத் தாயாக விளங்கியவர் கதீஜா பிராட்டியார். அவரது புதல்வியர் நால்வரும் அளவிறந்த கவலைக்குள்ளாயினர். அவர்களுக்குப் பலவாறு தேறுதல் மொழிகள் கூறினர் நபிகளார். முன்னர் ஒரு முறை ஜிப்ரீல், இறைவனிடமிருந்து கதீஜாவுக்குச் சாந்தியும் சோபனமும் கொண்டு வந்தமையையும், சுவர்க்கத்தில் அவருக்குத் தனியிடம் அமைக்கப்பட்டுள்ளமையையும் கூறி ஆறுதலளித்தார்கள்.



சிறிது காலம் கழிய மற்றுமோர் இழப்பு ஏற்பட்டது. முந்திய இழப்பின் அளவு பாரதூரமானதோ பாரியதோ அல்லாவிடினும், ஈடுசெய்ய முடியாததாகவும், வெளிவிளைவுகளில் பெருந்தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும் இது அமைந்தது. அபூதாலிப் சுகவீனமுற்றார் ; அவரது மரணம் சமீபித்து விட்டமை உடனடியாகவே தெளிவாகியது. அவரது மரணத் தருவாயின் போது குறைஷியரின் தலைவர்கள் சிலர் ஒரு குழுவினராக அவரைக் காணச் சென்றனர். அப்த்-ஷம்ஸ் கோத்திரத்தின் உத்பா, ஷைபா, அபூஸுப்யான், ஜுமாஹ்வின் உமையா ; மக்ஸுமின் அபூஜஹ்ல் உட்பட மேலும் பலர் அவர்களுள் அடங்கியிருந்தனர். குழுவினர் கூறினர் : 

Tuesday, 1 October 2013

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

சு வ ன மு ம்  மு டி வி லா வா ழ் வு ம்

தனது சொந்த மக்களிடமிருந்தே பாதுகாப்புத் தேடியவராக திரும்பி வந்த மற்றுமோர் அகதி, உமரின் மைத்துனரான, ஜுமாஹ் கோத்திரத்து உத்மான்-இப்ன்-மஸ்ஊன் ஆவார். தனது ஒன்றுவிட்ட சகோதரர்களான உமையாவும் உபையும் தன்னை வதை செய்வர் என்பதை அவர் நன்கறிந்திருந்தார். இம்முறை ஜுமாஹ் கோத்திரத்தவரான உத்மானுக்குப் பாதுகாப்பளிக்க முன்வந்தவர் வேறொரு கோத்திரத்தவரான ஒரு மக்ஸுமியாகும். உத்மானை வலீத் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டார். எனினும் தான் பாதுகாப்பாக இருக்கத் தனது சக முஸ்லிம்கள் கொடுமைப்பட்டு வருவதைக் கண்ட உத்மான், வலீதிடம் சென்று அவரது பாதுகாப்பிலிருந்தும் தான் விடுதலை பெற்றுக்கொள்ள விழைவதாகக் கூறினார். 



“ எனது சகோதரன் மகனே! எனது மக்கள் யாரும் உமக்குத் தீங்கிழைத்தனரா? ” என்றார் வலீத்.

“ அவ்வாறேதுமில்லை. நான் அல்லாஹ்வின் பாதுகாப்பை வேண்டி நிற்கின்றேன். அவனுடைய பாதுகாப்பைத் தவிர வேறு எவருடைய பாதுகாப்பையும் நான் தேடவில்லை ” என்றார் உத்மான். 
பின்னர் அவர் வலீதுடன் பள்ளிவாசலுக்குச் சென்று பகிரங்கமாகவே வலீதின் பாதுகாப்பினின்றும் தன்னை விடுவித்துக் கொண்டார். தினங்கள் சில கழிய, ஒரு நாள் லபீது எனும் கவிஞர் குறைஷியருக்குக் கவிதைகள் வாசித்துக் கொண்டிருந்தார். அவரது கவிதைகளைக் கேட்கவெனக் குழுமியிருந்த சனத்திரளுள் உத்மானும் அமர்ந்திருந்தார். இயல்பாகவே அறாபியர் கவிதைத்திறன் வாய்க்கப் பெற்றோராய் இருந்தனர். அவர்களுள்ளும், அபூதாலிப், ஹுபைரா, ஹாரிதின் மகனான அபூஸுப்யான் முதலியோர் பெருங்கவிஞர்களாக மதிக்கப் பெற்று வந்தனர். இவர்களுக்கும் மேலாக உன்னதமான கவித்துவம் படைத்தோராகக் கருதப்பட்டவர்கள் வெகு சிலரே. பொது அபிப்பிராயப்படி அச்சிலருள் லபீதும் ஒருவர். அக்காலை அவரே வாழ்ந்து வரும் மிகச் சிறந்த அறபிக்கவிஞராயிருந்தார். அவரைத் தம்மிடையே கொண்டிருப்பதில் குறைஷியர் பெருமை பாராட்டி வந்தனர். அவர் பாடிய கவிதைகள் ஒன்று.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

த டை யு ம்
த டை நீ க் க மு ம் ( தொடர்… )


ஹாஷிம், முத்தலிப் கோத்திரத்தார்கள் மீதான தடையுத்தரவு இரண்டு வருட காலமளவு நீடித்தும் கூட, குறைஷிகள் எதிர்பார்த்த முடிவுகள் ஏதும் ஏற்படுவதாக இல்லை. மாறாக, எவரும் எதிர்பார்த்திராத, நினைத்துக் கூடப் பார்க்காத சில விளைவுகளை அது ஏற்படுத்தி வைத்தது. நபிகளார் மீது மேலும் மேலும் கவனம் ஈர்க்கப்பட்டது. முழு அறேபியாவிலும் இத்தடையுத்தரவு குறித்தும், நபிகளார் குறித்தும் அனைவரும் பேசலாயினர். குறைஷிகளினுள்ளேயே தனிப்பட்ட முறையில் தடையுத்தரவு குறித்த பல்வேறு அபிப்பிராயங்களும் எழலாயின.



பாதிப்புக்குள்ளானவர்களுள் நெருங்கிய உறவினர்களைக் கொண்டிருந்தோர் இதில் தீவிரமாக இருந்தனர். மனமாற்றம் ஏற்படவேண்டிய காலம் நெருங்கிவிட்டது. இந்நிலையில் ஆரம்ப நடவடிக்கை எடுத்தவர் ஹாஷிமிகளுக்கு உணவும் உடையும் ஏற்றிய ஒட்டகங்களை அனுப்பி வந்த ஹிஷாம் என்பவராகும். தான் தனிப்பட்ட எதையும் சாதித்து விட முடியாதென்பதை உணர்ந்த அவர், முதலில் மக்ஸுமியான ஸுஹைரிடம் சென்றார். நபிகளாரின் மாமியாரான ஆதிகாவின் இரு புதல்வர்களுள் ஒருவர் ஸுஹைர்.

“ உமது தாயாரின் உறவினர்கள் இருக்கும் நிலையை அறிந்தும் நீர் உண்டு, உடுத்து, மணஞ்செய்து களித்துக் கொண்டிருக்கலாமா? அவர்களால் வாங்கவோ விற்கவோ முடியவில்லை ; மணஞ்செய்து கொள்ளவோ, மணமுடித்துக் கொடுக்கவோ இயலாது. இறைவன் மீது ஆணையாக, அவர்கள் அபுல்-ஹகமின் ( அதுதான் அபூஜஹ்ல் ) தாயாரது சகோதரராயிருந்து, அவர் நீர் செய்ய வேண்டுமெனக் கூறியவற்றை, நீர் அவர் செய்ய வேண்டுமெனக் கூறியுமிருந்தால் நிச்சயமாக அவர் இணங்கியிருக்கமாட்டார். ” என்றார் ஹிஷாம்.

“ அத்தோடு நிறுத்தும் ஹிஷாம்! நான் என்ன செய்யலாம்? நானோ தனியொரு மனிதன். என்னுடன் இன்னுமொருவர் இருந்தால் இதனை ரத்து செய்யும் வரை நான் ஓயமாட்டேன் ” எனப் பதிலிறுத்தார் ஸுஹைர். “ நான் ஒருவரைக் கண்டு பிடித்துள்ளேன் ” , “ யார் அவர்? ” “நான் தான்” என்றார் ஹிஷாம். “ மூன்றாமவரைத் தேடும் ” என்றார் ஸுஹைர். எனவே ஹிஷாம், முத்இம்-பின்-அதீயிடம் சென்றார். நவ்பல் கோத்திரத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான அவர், ஹாஷிம்- முத்தலிப் ஆகியோரின் சகோதரனான நவ்பலின் பேரன். ஹிஷாம் கூறினார் :
“ குறைஷியர் கூறுவதை நீர் அங்கீகரித்து நிற்க, அப்த்-மனாபின் இரு புதல்வர்கள் அழிந்து போவதைக் காணவேண்டியிருப்பது உமது விதியாக இருக்கின்றது. இறைவன் பெயரால், நீர் இவ்வாறான நடவடிக்கைகளை அங்கீகரித்தால், இதே நடவடிக்கை சீக்கிரமே உமக்கெதிராகவும் எடுக்கப்படலாம். ” முத்இம் நான்காமவர் ஒருவரை வேண்டினார். ஆக, ஹிஷாம், அஸத் கோத்திரத்து அபுல்-பக்தரீயிடம் சென்றார். இவர்தான் கதீஜாவின் மாமூடை காரணமாக அபூ ஜஹ்லை தாக்கியவர். அவர் ஐந்தாமவரை வேண்டி நிற்க, மற்றுமோர் அஸதியரான ஸம்ஆ-இப்ன்-அல்அஸ்வத்திடம் சென்றார். ஆறாமவர் ஒருவரை வேண்டாது தான் ஐந்தாமவராக நிற்க ஒப்புக் கொண்டார். 
ஐவரும் மக்காவின் மேலாக ஹஜுன் சுற்றுப் பகுதியில் அன்றிரவு சந்தித்து தமது செயல் திட்டத்தை முடிவு செய்து, இத்தடையுத்தரவை ரத்துச் செய்யும் வரையில் பத்திரம் சம்பந்தமான விடயத்தைக் கைவிடுவதில்லை என உறுதி செய்து கொண்டனர். ஸுஹைர் கூறினார் : 

“ நானோ இதில் நெருங்கிய அக்கறைக் கொண்டுள்ளவன் ; எனவே நானே முதலில் பேசுபவனாக இருப்பேன் ”


அடுத்த நாள் காலையிலேயே பள்ளிவாசலில் சேர்ந்திருந்த மக்களுடன் இவ்வைவரும் இணைந்து கொண்டனர். ஸுஹைர் நீண்ட மேலங்கியொன்றனை அணிந்தவராகக் கஃபாவை ஏழுமுறை வலம் வந்தார். பின்னர் அங்கு கூடியிருந்தோரை நோக்கியவராக, 

“ மக்கத்து மக்களே! ஹாஷிமின் மக்கள் வாங்கவும் விற்கவும் முடியாத நிலையில் அழிந்து போக, நாம் உணவுகள் உண்டும், உடைகள் உடுத்தும் வரலாமா? இறைவன் பெயரால், இந்த அநீதியான தடையுத்தரவு கிழித்தெறியப்படும் வரை நான் ஓய மாட்டேன் ” என்றார். 

“ நீர் பொய் சொல்கின்றீர் ; அது கிழித்தெறியப்படமாட்டாது ” என்றார் அபூஜஹ்ல். 

“ நீர் தான் பெரும் பொய்யர் ; அது எழுதப்பட்டபோது எழுதப்படுவற்குச் சார்பாக நாம் இருக்கவில்லை ” என்றார் ஸம்ஆ. 

“ ஸம்ஆ கூறியது முற்றிலும் சரி. அதில் எழுதப்பட்டிருப்பனவற்றுக்கு நாம் ஆதரவாளர்களல்ல. அதை நாம் ஏற்கவும் தயாராக இல்லை ” என்றார் அபுல்-பக்தரீ. முத்இம் கூறினார் : 
“ நீங்கள் இருவரும் கூறியது சரி. இல்லையெனக் கூறுபவரே பொய்யர். இது பற்றிய எமது அறியாமைக்கும், அதில் எழுதப்பட்டவற்றிற்கும் சாட்சியாக நாம் இறைவனை அழைக்கின்றோம். ” ஹிஷாமும் இதுபோலவே பேசினார். முந்திய இரவு இவர்கள் கூடித்தீட்டிய சதி இது என அபூஜஹ்ல் குற்றஞ்சாட்டினார். எனினும் முத்இம் அவரை இடைநிறுத்திப் பத்திரத்தைக் கொண்டுவரவெனக் கஃபாவினுள் நுழைந்தார். 

வெற்றிப் பெருமிதத்துடன் ஒரு சிறிய தோல் துண்டைக் கையில் கொண்டவராக வெளிவந்தார் முத்இம். தடையுத்தரவைக் கரையான்கள் தின்று விட்டிருந்தன. எஞ்சியிருந்தது ஆரம்ப வசனம் மட்டுமே : ‘ ஓ இறைவா! உனது பெயரால் ’.


ஏற்கெனவே குறைஷியருள் பெரும்பாலோர் வெற்றி கொள்ளப்பட்டிருந்தனர். சந்தேகிக்க முடியாததொன்றாக அமைந்த பத்திரம் பற்றிய சகுனம் இறுதியானதும் உறுதியானதுமான ஒரு வாதமாக அமைந்து கொண்டது. அபூ-ஜஹ்லும் அவரதே சிந்தனையுடைய இன்னும் சிலரும் புதிய நிலைமையை எதிர்த்து நிற்பது பயனளியாதென்பதை உணர்ந்து கொண்டனர். தடையுத்தரவு முறைப்படி ரத்துச் செய்யப்பட்டது. பனீ ஹாஷிம், பனீ அல் முத்தலிப் கோத்திரத்தார்களுக்கு இந் நற்செய்தியை அறிவிக்கவெனக் குறைஷியரின் ஒரு குழுவினர் விரைந்து சென்றனர்.


தடையுத்தரவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்காவில் பெரும் நிம்மதி நிலவியது. முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் - தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டன. அமைதியான இந்நிலைமை குறித்து பெரிதுபடுத்தப்பட்ட அறிக்கைகள் அபிஸீனியாவைச் சென்றடைந்தன. அகதிகளில் பலர் உடனடியாகவே மக்காவை வந்தடைய வேண்டிய ஏற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினர். ஜஅபர் உட்படச் சிலர் தாம் இருக்கும் இடத்திலேயே தொடர்ந்தும் சில காலத்தைக் கழிக்க முடிவு செய்தனர்.


இதே வேளைகளில் குறைஷிகளின் தலைவர்கள், நபிகளாரை ஒரு சமுக உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளச் செய்யும் முயற்சிகளில் ஈடுபடலாயினர். இது கால வரைக்கும் இதுவே நபிகளாரை ஓரளவேனும் நெருங்கிய முறையில் அவர்கள் அணுகியதாகும். வலீதும் ஏனைய தலைவர்களும் இரு மதங்களையும் எல்லாருமே பின்பற்ற வேண்டும் என்ற ஓர் ஆலோசனையை சமர்ப்பித்தனர். இதனை ஏற்றுக்கொள்ள நபிகளாரால் முடியாது. தனது ஏற்காமையை வெளிப்படுத்த வேண்டிய சங்கடமானதொரு நிலையை அன்னார் எதிர் நோக்க வேண்டியதாயிற்று. அன்னாரின் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், பதிலாக, இறைவசனங்களே ஒரு ஸுறாவாக அருள் செய்யப்பட்டன :


“ நீர் கூறும் : நிராகரிப்போரே! நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்குபவனன்று. நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்களல்லர். உங்களுடைய (வினைக்குரிய) கூலி உங்களுக்கும், என்னுடைய (செயலுக்குரிய) கூலி எனக்கும் கிடைக்கும் ”

அல் குர்ஆன் : 109 : 1-6


இதனால், தற்காலிகமாக ஏற்பட்டிருந்த நல்லுறவு அபிஸீனியாவிலிருந்து திரும்பி வந்த அகதிகள் புண்ணிய பூமியின் அருகில் வந்து சேரும்போது மிகவும் அருகிச் சென்றிருந்தது.


ஜஅபரையும் உபைத்-அல்லாஹ்-இப்ன்-ஜஹ்ஷையும் தவிர்த்து, நபிகளாரின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் அனைவரும் திரும்பி வந்திருந்தனர். உத்மானும் ருகையாவும் கூட வந்தார்கள். உத்மானுடன் திரும்பிய மற்றுமொரு ஷம்ஸியர் அபூ-ஹுதைபா. அவரது தந்தை உத்பா பாதுகாப்பளிப்பாரென்ற நம்பிக்கை அவரிடமிருந்தது. ஆனால், அபூஸலாமாவும் உம்ம்ஸலாமாவும் தமது கோத்திரத்தாரிடமிருந்து துயரத்தையே. தவிர வேறெதனையும் எதிர்பார்க்க முடியாதோராயிருந்தனர். எனவே மக்காவினுள் நுழையுமுன்னர் அபூஸலாமா தனது ஹாஷிமிய மாமனார் அபூதாலிபுக்குச் செய்தியனுப்பிப் பாதுகாப்புக் கோரினார். மக்ஸுமிகளின் பலத்த அதிருப்தியின் மத்தியில் அபூதாலிப் பாதுகாப்பளிக்க ஒப்புக்கொண்டார்.

“ உமது சகோதரன் மகன் முஹம்மதை நீர் எம்மிடமிருந்து பாதுகாத்துக் கோண்டீர். ஆனால் எமது சொந்த கோத்திரத்தாருக்கு நீர் ஏன் பாதுகாப்பளிக்க வேண்டும்? ” என்றனர் மக்ஸுமிகள்.

“ அவர் எனது சகோதரியின் மகன். எனது சகோதரி மகனுக்குப் பாதுகாப்பளிக்க முடியாவிடின், சகோதரன் மகனுக்கும் பாதுகாப்பளிக்க முடியாது ” என்றார் அபூதாலிப். 

அவரது தலைமைத்துவ அதிகார உரிமைகளை மக்ஸுமிகள் மறுத்துரைக்க முடியவில்லை. அத்தோடு இச்சந்தர்ப்பத்தில் அபூலஹப்பும் தன்சகோதரர் அபூதாலிபை ஆதரிக்கலானார். நபிகளாரை எதிர்த்து நிற்பதில் தமக்கெப்போதும் சார்பாக இருப்பவர் என்ற காரணத்தால், மக்ஸுமிகள் அபூலஹப்பை எதிர்த்து உரையாட விரும்பவில்லை. தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலங்களில் தனது சகோதரன் மகன் முஹம்மத் மீதான தனது வெறுப்பைப் பகிரங்கமாகவும் தெளிவாகவும் வெளிக்காட்டிக் கொள்ள நேர்ந்தமையை நினைத்து வருந்தினார் அபூலஹப். அதற்குக் காரணம் அவரது வெறுப்புணர்வு குறைந்து விட்டது என்பதல்ல. தனது சகோதரனின் பின்னர் கோத்திரத்தலைவனாக வரக்கூடிய சாதகங்கள் தனக்கு இருக்கும் நிலையில் தன் குடும்பத்தவர்களுடன் நல்லுறவு பாராட்டி வருவதே சிறந்ததென அவர் கருதலானார். அபூதாலிப் நீண்ட காலம் வாழப்போவதில்லையென்பதற்குறிய அறிகுறிகளை அபூலஹப் கண்டிருக்கலாம்.



இன்னும் வரும்…

இறைவன் நாடினால்