Wednesday, 14 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

குழிவின் குறைஷியர்…(தொடர்…2)

ஹாஷிமுக்கு உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் இருந்தனர். அப்த்-ஷம்ஸ், முத்தலிப் என்பன அவர்கள் பெயர்கள். உடன் பிறவாச் சகோதரர் ஒருவர் - நவ்பல்.

அப்த்-ஷம்ஸ் யெமனுடனான வர்த்தக நடவடிக்கைகளில் தீவிரமான ஈடுபாடு காட்டி வந்தார். பின்னர் ஸிரியாவிலும் இவரது கவனம் சென்றது.
நவ்பல் ஈராக்குடனான வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். எனவே இவ்விருவரும் மக்காவுக்கு வெளியேயே நீண்ட காலங்களைக் கழித்து வரலாயினர். இதனாலும் வேறு பல காரணங்களினாலும் ஹாஷிமின் இளைய சகோதரரான முத்தலிபின் மீதே யாத்திரிகர்களுக்குத் தண்ணீர் வசதி செய்து கொடுக்கும் கடமையும், அவர்களுக்கு உணவு வசதியளிக்கவென வரிகள் அறவிடும் பொறுப்பும் சுமத்தப்பட்டன. தனக்குப் பின்னர் இப்பொறுப்புகளை ஏற்று நடாத்தக் கூடிய ஒருவரைத் தெரிந்து கொள்வதில் முத்தலிப் கவனம் செலுத்த வேண்டுமளவுக்குக் காலம் கழிந்து விட்டது.

ஹாஷிம், ஸல்மா தவிர்ந்த ஏனைய மனைவியர் மூலம் மூன்று புதல்வர்களைக் கொண்டிருந்தார். என்றாலும், தெரிய வந்துள்ளன அனைத்தும் உண்மையாயின, இவர்கள் எவருமே, ஏன், முத்தலிபின் புதல்வர்கள் கூட, ஸல்மாவின் மகனுக்கு ஈடானவர்களாக அமையவில்லை.
ஸல்மாவின் மகன் ஷய்பா, இள வயதிலேயே தளமைத்துவ தகுதிகள் கொண்டவராக விளங்கியமையால், அவர் குறித்த செய்திகள், புகழுரைகளாகவே, யத்ரிபிலிருந்து மக்காவுக்கு அடிக்கடி வரலாயின. யத்ரிப் ஊடாக வரும் பிரயாணிகள் ஷய்பா குறித்து கொண்டு வந்த செய்திகள் உன்னதமானவையாயிருந்தன.
யத்ரிப் சென்ற முத்தலிப் நேரடியாகவே நிலைமைகளை அவதானித்து, மனமகிழ்ந்தவராய், தனது சகோதரரின் மகனைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி ஸல்மாவை வேண்டினார். மகனை மக்காவுக்கு அனுப்ப ஸல்மா விரும்பவில்லை. தாயாரின் அனுமதியின்றி யத்ரிபை விட்டும் நீங்க மகன் விரும்பவில்லை.
என்றாலும் முத்தலிப் தன் நோக்கத்தில் தளர்ந்துவிடாதவராக அவ்விருவருடனும் வாதாடலானார். யத்ரிபிலிருந்து ஷய்பா பெற்றுக் கொள்ளக்கூடிய நன்மைகளைவிட, மக்க நகர் பெருமளவு நன்மைகளை அளிக்கும் என்றார் அவர்.
முழு அறேபியாவுக்கும் புனித யாத்திரைத் தளமாக விளங்கும் கஃபாவின் பாதுகாவலர்கள் என்ற வகையில் அறேபிய கோத்திரங்கள் அனைத்திலும் மிக உன்னதமான ஒரு ஸ்தானத்தைக் குறைஷிகள் வகித்து வருகின்றனர்; தனது தந்தையார் முன்னர் வகித்து வந்த தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்று குறைஷிக்குலத் தலைவர்களுள் ஒருவராக வருவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் ஷய்பாவுக்கு இருக்கின்றன; ஆனால் இதற்கெல்லாம் முன்னமாக அவர் தம் சமுகத்தாரோடு இணைந்தவராக இருக்க வேண்டும்: வெளியிலிருந்து திடீரென உள் நுழைந்து இவ்வாறானதொரு உயரிய தகுதியைப் பெற்றுக் கொள்வதென்பது இயலாத கருமம். 

முத்தலிபின் வாதங்களினால் கவரப்பட்டார் ஸல்மா. தாயும் மகனும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வதற்குத் தடைகளேதும் இருக்கப் போவதில்லை, ஆக ஸல்மா முத்தலிபுடன் மகனை அனுப்ப இசைந்தார்.

ஒட்டகத்தின் மீது தன் பின்புறமாக சகோதரன்மகனை இருத்தியவராக மக்கா நோக்கி பயணமானார் முத்தலிப். மக்காவினுள் நுழையும் போது முத்தலிப் கூட்டி வரும் புதிய இளைஞன் யாரென்று அறியாதவர்களாக, மக்கத்தார், முத்தலிபின் அடிமை ( அப்த்-அல்-முத்தலிப் ) ஒருவரே கொண்டு வரப்படுவதாகக் கூறிக் கொள்ளலாயினர். இது முத்தலிபின் செவிகளிலும் வீழ்ந்தது. அவர் கூறினா: “இவர் எனது சகோதரன் ஹாஷிமின் மகனேயன்றி வேறு யாருமல்ல”.

நேர்ந்து விட்ட தவறுக்காக அனைவரும் சிரிக்கலாயினர். வேடிக்கையான இத்தவறு பற்றிய செய்தி நகர் முழுவதும் பரவவே நகரத்தார் அனைவரும் இச்சம்பவத்தைக் கூறிக் கூறிச் சிரித்து சிரித்து மகிழலாயினர். தவறே நிலைபெறுவதுமாயிற்று. அந்த இளைஞர் ஷைபாவும், அன்று முதல் அப்-அல்-முத்தலிப் என்றே அழைக்கப் படலானார்.

சில காலம் கழிய, இந்த இளைஞர் தன் தந்தையின் சொத்து விவகாரம் சம்பந்தமாகச் சிறிய தந்தையார் நவ்பலுடன் பிரச்சினைக்குள்ளானார். என்றாலும் தன் பாதுகாவலரான சிறிய தந்தையார் முத்தலிபின் ஆதரவுடனும், யத்ரிபிலிருந்து வந்த செல்வாக்குகளுடனும் அப்-அல்-முத்தலிப் தன் உரிமைகளை நிலை நிறுத்திக் கொண்டார். தனது தலைமைத்துவ தகைமைகள் குறித்த திறமைகள் எதுவும் குன்றி விடாத வகையில் செயல்பட்டார் அவர். 

பல வருடங்களின் பின்னர், முத்தலிப் மரணமடைந்த நிலையில், யாத்திரிகர்களுக்குத் தண்ணீர் வசதியும், உணவு வசதியும் செய்துக் கொடுக்கும் பாரிய பொறுப்பினை ஏற்று நடத்த அப்-அல்-முத்தலிபுக்கிருந்த தகைமையை எவரும் மறுத்துரைக்க முடியவில்லை. 
தனது கடமைகளைத் திறம்பட நடத்துவதில், தனது தந்தையை மட்டுமன்றி, சிறிய தந்தையாரையும் விஞ்ஞியவராகக் கணிக்கப்பட்டார் அப்-அல்-முத்தலிப்.



இன்னும் வரும்…
-இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment