Saturday, 3 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


குழிவின் குறைஷியர்


இப்றாஹீம் நபியவர்களுடைய வம்சாவளியில் எழுந்த மற்றுமொரு பலம் வாய்ந்த குலம் குறைஷ் ஆகும். கிறிஸ்துவுக்குப் பின் சுமார் நான்கு நூற்றாண்டுகள் கழிந்து குறைஷிக் குலத்தில் வந்த குஸை என்பார், குஸாஅ குலத்தின் தலைவராயிருந்த ஹுலைல் என்பாரின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். அறபு மக்களிடையே மிக்க கெளரவமும் செல்வாக்கும் வாய்ந்த வராகக் குஸை விளங்கவே, ஹுலைலும் தன் சொந்த மக்களைப் பார்க்கிலும் மருமகனையே மிகவும் நேசித்தார். ஹுலைலின் மரண்த்தின் பின்னர் தலைமைப் பீடத்துக்கெனப் பெரியதொரு போட்டி நடந்தது. சமாதான உடன்படிக்கையில் முடிந்த அப்போராட்டத்தின் பின்னர், குஸையே மக்காவின் ஆட்சியாளராகவும் கஃபாவின் பாதுகவலராகவும் விளங்கலானார்.




ஆட்சிப் பொறுப்பினையேற்ற குஸை, தனது நெருங்கிய உறவினரான குறைஷிகளை அழைத்து வந்து புனிதத் தலத்தை அண்மிய பகுதிகளில் குடியமர்த்தினார். அவரது சஹோதரன் ஷுஹ்ரா, மாமனார் தையிம், மற்றுமொரு மாமனாரின் மகன் ம்க்‌ஹும் ஆகியோருடன் மேலும் சில ஒன்றுவிட்ட சகோதரர்களும் இவ்வாறு குடியமர்த்தப்பட்டனர். இவர்களும் இவர்களது வழி வந்தோரும் குழிவின் குறைஷியர் என அழைக்கப்பட்டனர்.

மக்காவைச் சூழவிருந்த மலைப் பிரதேசங்களிலும் அண்மையில் இருந்த சுற்றுப்புறப் பகுதிகளிலும் குடியேறியிருந்த குறைஷியர் சுற்றுப்புறக் குறைஷியர் எனப்பட்டனர். இவர்கள் அனைவர் மீதும் குஸை தனது மேலாணையைச் செலுத்தித் தனிப் பெரும் அரசனாக ஆண்டு வந்தார். வசதி குறந்த யாத்திரிகர்களது நலன்களைக் கவனிக்கவெனக் குறைஷியரனைவரும் தமது மந்தைகள் மீதான ஒரு வரியை, குஸைக்கு செலுத்தி வந்தனர். இதுவரைக் காலமும் புனிதத் தலத்தின் காவலர்கள் அனைவரும் கஃபாவைச் சூழ கூடாரங்கள் அமைத்தே வாழ்ந்து வந்தோராயிருந்தனர். தனக்கென வசதிமிக்கதொரு கட்டடத்தை அமைத்துக் கொண்ட குஸை, குறைஷியரையும் நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொள்ளும்படி வேண்டினார். குஸையின் வீடு ஆலோசனை மன்றம் என அழைக்கப்பட்டது.

அனைத்துக் கருமங்களும் அமைதியாக நிறைவேறி வந்தாலும் பிரிவினையின் வித்துக்கள் சிறுகச் சிறுக ஊன்றப்படலாயின. குஸையின் வம்சத்தின் ஒவ்வொரு தலைமுறையிலும், ஏனைய அனைவரிலும் தலைசிறந்த ஒருவர் தலையெடுப்பது இயல்பாக இருந்து வந்தது. குஸையின் நான்கு புதல்வர்களுள் இவ்வாறு சிறப்புற்றவர் அப்த்-மனாப். தனது தந்தையாரின் காலத்திலேயே அவர் சமூகத்தில் சிறப்பிடம் பெற்றுக் கொண்டார். எனினும், அனைவரிலும் திறமை குன்றி இருந்த அப்த்-அத்-தார் எனும் மூத்த மகனையே குஸை பெரிதும் விரும்பினார்.

தனது மரணத் தறுவாயின் சிறிது முன்னர், குஸை அப்-அத்-தாரை அழைத்துக் கூறினார்: “என் மகனே! உன்னைவிட மற்றவர்களையே மக்கள் கொளரவப் படுத்தி வந்தாலும், நான் உன்னை அவர்களுக்குச் சமனாக்கி வைப்பேன். நீ திறக்காமல் கஃபாவின் உள்ளே ஒருவரும் நுழைய மாட்டார்கள். யுத்தங்களுக்கான குறைஷிய சின்னத்து முடிச்சை உன்னைத் தவிர வேறு யாரும் இடமாட்டார்கள். உன் அனுமதி இன்றி எந்த ஒரு யாத்திரிகரும் மக்காவில் தண்ணீர் அள்ள முடியாது. நீ அளித்தாலொழிய யாரும் உணவருந்த முடியாது. உனது வீட்டிலன்றி, குறைஷியர் எவரும் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ள முடியாது.”- இப்னு இஸ்ஹாக் 83.

குஸையின் உரிமைகள், அதிகாரங்கள் ஆகியவற்றோடு ஆலோசனை மன்றமும் அப்-அத்-தாருக்கே உரிமையாயது.

தந்தைக்குச் செய்யும் கொளரவமாக, குஸையின் தீர்மானங்களை எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக் கொண்டார் அப்த்-மனாப். எனினும் அடுத்த தலைமுறையில் பிளவுகள் விரிவடையலாயின. அப்த்-மனாபின் மகனான ஹாஷிம் மக்களாதரவைப் பெற்று சமுகத்தில் பெரும் புகழ் பெற்று விளங்கலானார். ஹாஷிமை ஆதரித்து நின்ற குறைஷிகள், அப்த்-அத்-தாரின் வம்சத்தாரிடமிருந்து அப்த்-மனாபின் வம்சத்தாருக்கு அதிகாரம் மாற்றப்படவேண்டுமென அவாவி நின்றனர். ஸுஹ்ரா, தையிம் உட்பட குஸையின் வழி வந்தவர்கள் அனைவருமே ஹாஷிமையும் அவரது சகோதரர்களையும் ஆதரித்து வந்தனர். மக்ஸும் வழி வந்தவர்களும், தூரத்து உறவினர்களாயிருந்தோரும் அதிகாரம் தொடர்ந்தும் அப்த்-அத்-தாரின் வம்சத்தாரிடமே இருக்க வேண்டுமெனக் கருதினர்.
இரு சாராருக்குமிடையிலான பிரச்சினைகள் பெரிதுபட்டு வந்தன.
அப்த்-மனாப் வம்சத்துப் பெண்கள் சிலர், வாசனைக் கிண்ணம் ஒன்றனைக் கொண்டு வந்து கஃபாவின் அண்மையில் வைத்தனர். ஹாஷிம் சகோதரர்களும், அவர்களை ஆதரித்து நின்றோரும் தமது கரங்களைக் கிண்ணத்துள் தேய்த்து, கஃபாவின் கற்கள் மீது பூசித் தாம் ஒருவரையொருவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் கைவிடுவதில்லையென உறுதி பூண்டனர்.

இவ்வறு உறுதிப் பூண்ட பல்வேறு குழுவினதும் கூட்டத்தார் வாசனையாளர்கள் என அழைக்கப்ட்டனர். மறுபுறத்தில் அப்-அத்-தாரின் ஆதரவாளர்களும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இவர்கள் கூட்டுறவாளர்கள் என பெயர் பெற்றனர்.

மக்காவின் புனிதத் தலத்தில் மட்டுமன்றி பல மைல்கள் தூரத்துக்குப் பரவிய சூழற் பிரதேசங்களிலும் யுத்தம் புரிவது மரபு ரீதியாக தடை செய்யப்பட்டிருந்தது.
எனவே இரு சாராரும் தம் பிரச்சினைக்கு முடிவொன்று காணும்வரை போராடும் தீர்மானத்தோராக இப்புனிதப் பிரதேசத்தினின்றும் வெளிச் செல்ல ஆயத்தமாயினர். இந்நிலையில் செய்து கொள்ளப்பட்டதோர் உடன்படிக்கை இரு சாராரதும் இணக்கத்தைப் பெற்றது. அதன்படி, வரிகளைச் சேகரிப்பதும், யாத்திரீகர்களுக்கு உணவும் நீரும் அளிப்பதும் அப்த்-மனாபுடைய மக்களது பொறுப்பில் விடப்பட்டது.

கஃபாவின் திறவுகோல்களை வைத்திருப்பதும், கஃபாவை பரிபாலனம் செய்வதும் அப்த்-அத்-தாரின் மக்களுக்காயின. அத்தோடு அப்த்-அத்-தாரின் மக்களது வீடே ஆலோசனா மன்றமாக தொடர்ந்து இருந்து வருவதெனவும் ஏற்கப்பட்டது.


-இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,
 

No comments:

Post a Comment