Thursday, 15 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

பாலை

ஆண் குழந்தைகளைப் பிறந்த சில காலத்துள் பாலைவனத்துக்கு அனுப்பி வைக்கும் ஒரு வழக்கம் அறாபிய நகரங்களது பெருங்குடும்பங்கள் மத்தியில் இருந்து வந்தது. இளம் பருவத்தை நாடோடிக் கோத்திரத்தாரிடையே கழிப்பதற்காக, பால் குடி மறக்கும் காலம் வரையிலும் குழந்தைகளைச் செவிலித் தாயரிடம் ஒப்படைத்து விடுவர். 

மக்க நகர் வாசிகளும் இதற்கு விதி விலக்கானவர்களல்ல. தொற்று நோய்கள் இலகுவாகப் பரவும் இடங்களுள் ஒன்றாயிருந்த மக்காவில் குழந்தைகள் இறப்பு விகிதமும் அதிகமாயிருந்தது. தமது புதல்வர்கள் பாலை நிலத்தின் தூய காற்றினை நுகரவேண்டும் என்பது மாத்திரம் அவர்களது நோக்கமாக இருக்கவில்லை. அது அவர்களது உடலுக்கு நல்லது. அதற்கும் மேலாகப் பாலை நில வாழ்வு ஆன்மாவுக்கும் பல பயன்களை நல்குவதாயமைந்தது. குறைஷியர் மிக அண்மையிலேயே நகரமைப்பிலான வாழ்வினைப் பின்பற்றத் தொடங்கியிருந்தனர்.


குஸை புனிதத் தலத்தினைச் சுற்றிவர வீடுகளை அமைத்துக் கொள்ளும்படி குறைஷியரை வேண்டிக் கொண்ட காலம் வரையும், அவர்கள் பொதுவாக நாடோடி வாழ்க்கையே வாழ்ந்து வந்தனர். நிலையான குடியமைப்பு வசதிகள் தவிர்க்க முடியாதனவே. எனினும் அவை ஆபத்தானவையுங்கூட. தம் முன்னோர் வாழ்க்கை தான் எத்துணை பெருமை வாய்ந்ததாக இருந்தது! கூடார வாழ்க்கை எப்போதும் வேறு இடங்கள் நோக்கிய பெயர்வு. பெருமித வாழ்வும் சுதந்திரமும் இணைபிரியாது அமைந்திருந்தன.

நாடோடி எப்போதும் சுதந்திரமானவனே. பாலை நிலத்தில் மனிதன், தான் பிரபஞ்சத்தின் எஜமானன் என்ற உணர்வைப் பெற்று வந்தான். இவ்வாறானதொரு தன்மையினால் காலத்தின் ஆதிக்கம் பற்றிய உணர்விலிருந்தும் அவன் தப்பி வாழ முடிந்தது.

ஏதோ ஓர் இடத்தில் கூடாரமடித்துத் தங்கும்போது நேற்றைகளை அவன் பலியிட்டு விடுகின்றான். எங்கோ எப்போதோ என்றிருப்பதனால் நாளையென்பது துர்ப்பாக்கியங்கள் குறைந்ததாகவே விளங்கியது. நகர் வாசியோ சிறைப்பட்டவன். ஒரே இடத்தில் நிலை பெற்றிருக்க வேண்டும். நேற்று, இன்று நாளை என்றெல்லாம் காலத்தின் கட்டுப்பாட்டுக்குள் வாழவேண்டும். அதுவே அனைத்தையும் சீர்குலைப்பதாகவும் அமையும். தீமைகளின் வளர்ப்பிடங்களும் நகரங்களே. மனிதனது விழிப்புணர்வையும் அவதான நிலைமையையும் எப்படியும் கவர்ந்துக் கொள்ளவென நகரத்துச் சுவர்களின் நிழல்களில் சோம்பலும் மெத்தனமும் கரம் நீட்டிக் காத்திருக்கின்றன. அனைத்தும் அங்கு சீர் கெட்டுச் செல்வன - மனிதனின் மிகப் பெறுமதி வாய்ந்த பொக்கிஷமான மொழி கூட…,

அறபியர்களில் சிலரே வாசிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். என்றாலும் எல்லா அறாபியப் பெற்றோரும் தம் குழந்தைகள் அழகாக பேசவேண்டுமென விரும்பி வந்தனர். உரையாடல் திறமையைப் பொறுத்து மனிதனது மதிப்பும் உயர்ந்தது. 
உரையாடல் திறனின் கிரீடமாக விளங்கியது கவிதை புனையும் ஆற்றல். கவிஞனொருவனை குடும்பத்தில் கொண்டிருப்பது பெருமைப் படத்தக்கதோர் அம்சமாக விளங்கியது. சிறந்த கவிஞர்கள் பொதுப்பட பாலை நில நாடோடிக் குழுக்களிலிருந்தே உருவாகி வந்தார்கள். ஏனெனில் பாலை நிலப் பேச்சுவழக்கு, கவிதையை அண்மியதாகவே விளங்கியது.

எனவே ஒவ்வொரு தலைமுறையிலும் நகர-பாலைநில உறவுகள் புதுப்பிக்கப்பட வேண்டியிருந்தன. நெஞ்சத்துக்குத் தூய்மையான காற்று; நாவுக்கு தூய்மையான அறபு மொழி; ஆன்மாவுக்குச் சுதந்திரம். 
குறைஷிக் குழந்தைகளில் ஏராளமானோர் எட்டு வயது வரை கூட பாலை நிலங்களில் விட்டு வைக்கப்பட்டனர். அதற்குக் குறைந்த காலம் கூட போதுமானதாயினும் பாலை நில அனுபவங்கள் அவர்களது உள்ளத்தில் ஆழமாகப் பதிய வேண்டியே அவ்வாறு விடப்பட்டனர்.

சிறு குழந்தைகளை போஷித்து வளர்த்து வருவதில் பிரசித்தம் பெற்ற பல பாலை நிலக் கோத்திரங்கள் இருந்து வந்தன. அவற்றுள் ஒன்று, மக்காவின் தென் கிழக்குப் பிரதேசத்தில் இருந்து வந்த பனீ-ஸஅத்-இப்ன்-பக்ர் எனும் கோத்திரமாகும். இது ஹவாஸின் கோத்திரத்தின் ஒரு கிளையாக இருந்தது. இந்தக் குழுவின் ஒரு பெண்ணிடமே தனது குழந்தையைக் கொடுக்கும் எண்ணத்தவராய் இருந்தார் ஆமினா. குறிப்பிட்டதொரு கால இடைவெளியுடன் வளர்ப்புக் குழந்தைகள் பெற்றுச் செல்வதற்காகத் தொடர்ந்து வரும் வழக்கத்தையுடையவர்கள் அவர்கள். அண்மையில் வருவர் எனவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தனர். 

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அவ்வருடத்திய பிரயாணம் குறித்து அக்குழுவினருள் ஒருவராயிருந்த ஹலீமா என்பார் பின்னைய காலங்களில் விபரித்துக் கூறினார். 
தனது கணவர் ஹாரிதுடன் கைக்குழந்தை ஒன்றை ஏந்தியவராக மக்கா சென்றிருந்த ஹலீமா, அபூ-துஐப் என்பாரின் மகளாவார்.
“வரட்சி மிகுந்ததொரு வருடம் அது. எங்களிடம் எதுவுமே இருக்கவில்லை. எனது சாம்பல் நிற பெண் கழுதையின் மீதேறி நான் சென்றேன். எம்மிடம் ஒரு கிழட்டுப் பெண் ஒட்டகமும் இருந்தது. ஒரு சொட்டுப் பாலைக் கூட அதிலிருந்து பெற்றுக் கொள்ள முடுயவில்லை. இரவு முழுவதும் நாங்கள் உறக்கமின்றி இருந்தோம். எனது மகன் பசியினால் அழுது துடித்துக் கொண்டிருந்தான். அவனது பசியைப் போக்குமளவு எனது மார்பகம் சுரப்பதாக இல்லை. எனது கழுதையோ பலமிழந்து களைத்துப் போயிருந்தது. அதனால் எங்களுடன் சென்றவர்கள் முந்திச் சென்று, நாங்கள் வரும்வரை காத்து நிற்கலானார்கள்.”

ஹலீமாவும் கணவரும் எந்தவிதமான ஒரு நம்பிக்கையுமற்றவர்களாகவே மக்காவுக்குச் சென்றனர். வழியில் மழை பெய்திருந்து தமது கழுதையும் ஒட்டகமும் சிறிது மேய்ந்து அவற்றின் பால்மடியைப் பெருக்கிக் கொண்டாலே போதுமாயிருந்தது அவர்களுக்கு.
மக்காவை அவர்கள் அண்மியும் மழை பெய்திருக்கவில்லை.

மக்காவில் ஹலீமாவுடன் சென்றிருந்த பெண்களனைவரும் வளர்ப்புக் குழந்தைகள் தேட ஆரம்பித்திருந்தனர்.
ஆமினா தன் குழந்தையை ஒருவர் மாற்றி ஒருவருக்கு கொடுக்க முனைந்து, ஒவ்வொருவரும் அதனை ஏற்க மறுத்து, இறுதியில் எவருமே அக்குழந்தையை ஒப்புக்கொள்ள முன்வராத நிலையில் கவலைக்குள்ளானார். ஹலீமா கூறினார்: “அதற்குக் காரணம் நாங்கள் குழந்தையின் தகப்பனாரிடமிருந்து ஏதும் சகாயங்களை எதிர்ப்பார்த்திருந்தோம். ‘ஓர் அனாதை! அதன் தாயும் பாட்டனாரும் எமக்கு என்னதான் செய்யலாம்’ என்றெண்ணினோம்”. 
தமது சேவைகளுக்குப் பிரதியுபகாரமாக ஏதும் கொடுப்பனவுகளை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏனெனில் குழந்தையைப் பராமரிக்கவென கைம்மாறு பெற்றுக்கொள்வது கெளரவக்குறைவானதோர் அம்சமாகவே விளங்கியது. அவர்கள் எதிர்பார்த்திருந்த கைம்மாறு உடனடியானதாகவோ, நேரடியானதாகவோ அன்றிப் பரந்ததோர் தன்மையதாக அமைந்திருந்தது. நகர்வாசிகளுக்கும் கிராமப்புறத்தாருக்கும் இடையிலான கைம்மாறுகள் இயற்கையாகவே அமைந்திருந்தன. அனைத்து அம்சங்களிலும் ஒரு திறத்தார் பலம் பெற்றிருக்க, மறுதிறத்தார் அதில் வறியவராயிருந்தனர். ஒன்றில் சிலர் வறியவராயிருக்க அதிலேயே அடுத்தவர் வளம் பெற்றவராயிருந்தனர். இறைவனே அருளிய, பண்டு தொட்டு நிலவி வரும் வாழ்க்கை முறையை நாடோடிகள் கொண்டிருந்தனர். அது ஆபீல் காட்டிய வழியாக இருந்தது. காபீலின் மக்களோ பொருளுடையோராயும் அதிகாரம் படைத்தோராயும் விளங்கினர். காபீலே முதன் முதல் கிராமம் ஒன்றனை அமைத்தவர். பெரும் குடும்பம் ஒன்றுடன் நிலையான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது பாலை நிலக் கோத்திரத்தாருக்கு நலம் பயப்பதாக இருந்தது.

செவிலித்தாய் பெற்றுக் கொள்ளும் வளர்ப்பு மகன், அவளைத் தனது இரண்டாம் தாயாகக் கொண்டு தன் வாழ்க்கை முழுவதுமே அவள்மீது கடமையுணர்வு கொண்டிருப்பான். இவ்வுறவு முறையும் பெயரளவிலானது மட்டுமல்ல. அறபிகள், வழிவழியாகவரும் தமது குண விஷேடங்களின் தொடர்பங்கமாகவே மார்பகத்தைக் கொள்வர். தனக்குப் பாலூட்டும் செவிலித்தாயின் குணங்களையும் இயல்பாகவே வளர்ப்பு மகன் பெற்றிருப்பான். என்றாலும் இவ்வளர்ப்பு மகன் வளர்ந்து பெரியவனாகும் வரை அவனிடமிருந்து விசேடமாக எதனையும் எதிர்பார்க்க முடியாது. அதுகாலவரை பொதுவாக அக்குழந்தையின் தந்தையே மகனது கடமைகளை ஆற்றி வருவது மரபு. 

பாட்டனாரின் நிலையோ மிகவும் சேய்மையானது. இந்த சந்தர்ப்பத்தில், மூப்படைந்திருந்த அப்த்-அல்-முத்தலிப் நீண்ட நாள் வாழ்ந்திருப்பார் என்ற நம்பிக்கை கூட அவர்களிடம் இருந்திருக்காது. அவர் இறந்து போனால் அவருடைய மக்களே வாரிசாக வருவர்; பேரனல்ல. 

ஆமினாவோ வறுமையில் வாழ்பவர். குழந்தையோ, செல்வமெதனையும் சேகரித்து வைக்கும் வயதை அடையுமுன்னமேயே இறந்து போன ஒரு தந்தையின் மகன்.

அப்த்-அல்லாஹ் தன் மகனுக்கு விட்டுச் சென்றவை ஐந்து ஒட்டகங்கள். சிறியதோர் ஆட்டுமந்தை. ஓர் அடிமைப் பெண். உண்மையிலேயே அப்த்-அல்லாஹ்வின் மகன் பெரியதொரு குடும்பத்தில் உதித்தவர்தான். ஆனால் அந்த வருடம் இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆக வறுமையான குழந்தையாகவே அவர் விளங்கினார்.


இன்னும் வரும்…

- இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment