Thursday, 29 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ஆரம்ப இறைவசனங்கள்


பாரியதொரு பிரச்சினைக்கு முஹம்மத் மூலம் காணப்பட்ட சுமுகமான தீர்வு அவரது அதிகாரத்தினதும் தூதினதும் வெளிப்படையான குறிப்புகளை உணர்த்தி நின்றது.

நீண்ட காலம் கழியுமுன்னமேயே பலம் வய்ந்த அகக் குறிப்புகளையும் காணலானார் முஹம்மத். அவர் ஏற்கெனவே கொண்டிருந்த உணர்வுகளை உறுதிப்படுத்துவனவாக இவை அமைந்தன. இது குறித்து வினவப்பட்டபோது அவர் தனது உறக்கத்தில் எழும் ‘மெய்ம்மையான பிரமைகள்’ பற்றியும் அவை ‘உதய காலத்தெழும் ஒளியை ஒத்து’ இருந்தமை குறித்தும் விவரித்துக் கூறினார். - (ஸஹீஹ் புகாரி. 1.3) இவ்வாறான தோற்றங்களின் உடனடி விளைவாக அமைந்தது, தனிமையின் மீது அவருக்கு இருந்த விருப்பின் வலுப்பமாகும். இதனால் அவர் ஹிறா எனும் மலைக்குகைக்கு அடிக்கடி ஆன்மீக சிந்தையராய்ச் செல்லலானார். ஹிறாவும் மக்காவை அண்மியதோர் இடமே. 

இவ்வாறு அவர் செல்வது குறைஷியரைப் பொறுத்தளவில் புதுமையானதோர் அம்சமல்ல. ஏனெனில் ஆன்மீகத் தனிமை நாடிச் செல்வது இஸ்மாயீலின் சந்ததியினரிடையே மரபுவழி வந்ததொன்றாக இருந்தது. ஒவ்வொரு தலைமுறையிலும், மானிட லோகத்து அசூயைகளினின்றும் பிரிந்து நின்று தனிமையில் தவமியற்றச் செல்லும் சிலர் பண்டு தொட்டு இருந்து வந்தனர். தொன்று தொட்டு நிலவி வந்த இந்த மரபினைப் பின்பற்றி முஹம்மதும், தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு இறைவனின் தியானத்துக்கெனச் சில இரவுகளை ஒதுக்கியவராகத் தனிமையில் சென்று விடுவார். ஒதுக்கிய காலம் கழிய, தன் குடும்பத்தினரிடம் திரும்பி வருவார். 
சில போது மேலும் பொருட்களை எடுத்துக்கொண்டு மீண்டும் குகைக்குச் செல்வதுண்டு. கடந்த வருடங்களாக நகரை விட்டும் வெளியேறித் தனது தவமியற்றும் இடத்தை அவர் அண்மிச் செல்லும் போது, 

“ஓ இறைவனின் தூதரே! உம்மீது சாந்தி உண்டாவதாக!. ” - ( இப்ன் இஸ்ஹாக் 151 ) எனும் வாசகம் மிகவும் தெளிவாகத் தனது செவிகளில் வீழ்வதனை அடிக்கடி உணரலானார். வாழ்த்துக் கூறுபவர் யார் எனக் காணத் திரும்புவார். எவரும் காணப்படுவதில்லை. அவ்வாசகம் ஒரு மரத்தினின்றே, கற்பாறையினின்றே எழுவது போன்ற உணர்வே இருந்தது.

ரமழான் மாதமே பொதுவாக தியானத்துக்குரிய காலமாக விளங்கியது. தனது நாற்பதாவது வயதில், ரமழான் மாதத்தில் ஓர் இரவு, முஹம்மத் ஹிறாக்குகையில் தனிமையில் இருக்கும் போது மனித உருவில் ஒரு வானவர் வந்தார். அந்த வானவர் “ஓதுவீராக” என்றார். “நான் ஓதக் கூடியவனல்ல” என்றார் முஹம்மத். பின்னர் முஹம்மத் கூறினார்: “வானவர் என்னைக் கட்டிப் பிடித்து அணைத்தார். என்னால் இனிமேலும் தாங்கிக்கொள்ள முடியாது என்ற நிலையில் அவர் என்னை விடுவித்து, ‘ஓதுவீராக’ என்றார். ‘நான் ஓதக் கூடியவனல்ல’ என்றேன் நான். மீண்டும் என்னைக் கட்டிப்பிடித்து அணைத்து எனது சக்தி முழுவதையும் நான் இழந்த நிலையில் விடுவித்து ‘ஓதுவீராக’ என்றார். மீண்டும் நான் கூறினேன், ‘நான் ஓதக்கூடியவனல்ல’. மூன்றாம் முறையும் என்னை அவர் அவ்வாறே கட்டிப்பிடித்து, அணைத்துப் பின் அவர் கூறினார். :

படைத்த உமதிறைவனின் திருநாமத்தால் ஓதுவீராக, அவனே மனிதனை 

இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான், நீர் ஓதுவீராக, உமதிறைவன் மாபெரும் கொடையாளி. 

அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். அன்றி, மனிதன் 

அறியாதவைகளையெல்லாம் அவனுக்குக் கற்றுக்கொடுக்கின்றான். - ( அல் குர்ஆன் 96 : 1-5 ) , ( ஸஹீஹ் புகாரி: 1.3 )


வானவரைப் பின்பற்றி அவர் இவ்வாசகங்களை ஓதினார். பின்னர் வானவர் அவரை விட்டுச் சென்றார். முஹம்மத் கூறினார்: “அந்த வார்த்தைகள் எனது இதயத்தின் மீது எழுதப்பட்டனபோல இருந்தன”. - ( இப்ன் இஸ்ஹாக் 153 )எனினும் உள்ளூர அவர் அச்சம் கொண்டவராயிருந்தார். ஜின் வயப்பட்டவராகிவிட்டோமோ அல்லது தீய ஆவிகளின் சக்திக்கேதும் உட்பட்டுவிட்டோமோ என அஞ்சியவராக உடனேயே குகையினின்றும் வெளியே வந்து, பள்ளத்தில் ஓடி வரும்போது தனக்கு மேலாக ஒரு குரல் எழக் கேட்டார்: 

“ஓ முஹம்மதே! நீர் அல்லாஹ்வின் தூதராவீர், நான் ஜிப்ரீல்”. 

- வானத்தை நோக்கித் தன் பார்வையை உயர்தினார் முஹம்மத். தன்னைச் சந்தித்தவரையே அங்குக் கண்டார். இப்போது நிச்சயமாக அவர் வானவர் என்பது தெளிவாகியது. வானப்பரப்பு முழுவதனையும் அவர் நிறைத்திருந்தார். மீண்டும் அவர்,

“ஓ முஹம்மதே! நீர் அல்லாஹ்வின் தூதராவீர், நான் ஜிப்ரீல்” எனக் கூறினார். 

அவரை ஆச்சரியமாகப் பார்த்து நின்ற முஹம்மத், அவரினின்றும் தன் பார்வையைத் திருப்பினார். ஆனால் எங்கு நோக்கினும், எத்திசை நோக்கித் திரும்பினும் அந்த உருவமே சர்வ வியாபகமாய் நின்றிருந்தது. இறுதியில் அவ்வானவர் பார்வையினின்றும் மறைய, அல்லாஹ்வின் தூதர், முஹம்மத் நபிகளார் வீடு திரும்பினார்கள். இன்னும் நடுங்கும் இதயத்துடன் ஓர் ஆசனத்தில் சாய்ந்தவர்களாகக் கதீஜாவை அழைத்து “என்னைப் போர்த்தும்! என்னைப் போர்த்தும்!” - ( ஸஹீஹ் புகாரி: 1.3 ) என்றார்கள். அதிர்ச்சியுற்றிருந்தாலும் கேள்விகளேதும் கேட்கத் துணியாதவராக ஒரு போர்வையைக் கொண்டு அன்னாரைப் போர்த்தினார் கதீஜா. 

தமது புதுமையான அனுபவத்தின் தாக்கத்திலிருந்து சிறிதே விடுபட்ட நிலையில் அன்னார் தாம் கண்டதையும் கேட்டதையும் கூறினார்கள். போதிய ஆறுதல் கூறிய கதீஜா, தன் ஒன்றுவிட்ட சகோதரர் வரகாஹ்விடம் விரைந்தார். முதிர்ந்த வயதினராகிப் பார்வையும் இழந்திருந்தார் வரகாஹ். 

“வரகாஹ்வின் உயிர் யாருடைய கையில் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக, முஹம்மதிடம் அம்மகாநாமூஸே ( இறை கட்டளை அல்லது வேதம் என்ற கருத்திலான கிரேக்க நோமோஸ், இங்கு தேவதூதராக குறிக்கப்படுகிறது. )வந்திருக்கின்றார். மூஸாவிடம் வந்தவரும் அவரே. நிச்சயமாக முஹம்மத் தனது மக்களுக்கு ஒரு நபியாகவே வந்துள்ளார். அவருக்கு உற்சாகமூட்டுவீராக!” என்றார். கதீஜா கூறியவற்றை செவிமடுத்த அவர். கதீஜா திரும்பிச் சென்று இவ்வார்த்தைகளைத் தனது கணவரிடம் கூறினார். மனதில் ஆறுதல் அடைந்தவர்களாக, இறைவனுக்காகத் தான் கழிக்க முன்னமேயே நிச்சயித்திருந்த மொத்த நாட்களையும் கழிக்கவெனக் குகைக்குத் திரும்பிச் சென்றார்கள் நபிகளார். அக்கால அளவு முடிவுற ஹிறாவிலிருந்து வந்து நேராகக் கஃபாவுக்குச் சென்றார்கள். 
கஃபாவை வலம் வரும் சம்பிரதாயத்தை முடித்துக் கொண்ட பின்னர், பள்ளிவாசலில் அமர்ந்திருந்தவர்களுள் முதியவரும் பார்வையிழந்தவருமான வரகாஹ்வை அடையாளம் கண்டு சோபனம் கூறினர் நபிகளார். வரகாஹ் : 

“ ஓ எனது சகோதரரின் மகனே! நீர் கண்டவற்றையும் கேட்டவற்றையும் கூறுவீராக! ” என்றார். நபிகளார் தனது அனுபவத்தைக் கூறினார்கள். கதீஜாவிடம் கூறியவற்றையே வரகாஹ் நபிகளாருக்கும் கூறினார். தொடர்ந்து,

“ நீர் பொய்யர் எனப்படுவீர், துயருறுத்தப்படுவீர், துரத்தப்படுவீர், அவர்கள் உம்முடன் யுத்தம் செய்யவும் வருவர். அவ்வாறான நாட்களை நான் காணக் கூடுமாயின் அவனது மார்க்கத்துக்கு நிச்சயம் உதவி செய்வேன் என்பதை இறைவன் நன்கு அறிவான். ” - ( இப்ன் இஸ்ஹாக் 153-4 ) எனக்கூறிய வதகாஹ் நபிகளாரின் பக்கமாகச் சாய்ந்து அன்னாரின் நெற்றியை முத்தமிட்டார்.


கதீஜாவும் வரகாஹ்வும் கூறிய உற்சாக வார்த்தைகளைத் தொடர்ந்து, வானலோகத்திலிருந்தும் உற்சாக வார்த்தைகள் இரண்டாம் இறைவசனங்களாக வந்தன. அவை வந்த முறை பற்றிய குறிப்புகள் இல்லை. எனினும் நபிகளார் தமக்கு இறைவசங்கள் அருளப்படும் முறைகள் இரண்டு பற்றிக் குறிப்பிட்டார்கள், “ சிலவேளை அது எனக்கு மணியோசையின் அதிர்வுகள் போல் வரும். அதுவே எனக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவது. கூறப்பட்ட விடயங்களை நான் உணர்ந்து கொள்வதுடன் அவ்வதிர்வுகள் குறைந்து செல்லும். சிலவேளை வானவர் மனித உருவில் வந்து என்னுடன் உரையாடுவார். அவர் கூறுவன் பற்றிய உணர்வு என்னுள் அவ்வாறே இருக்கும். ” - ( ஸஹீஹ் புகாரி 1.3 ) 

இரண்டாவது இறைவாக்கியங்கள் ஒரு தனி எழுத்துடனேயே ஆரம்பமாயின. மறைபொருள் கொண்ட எழுத்துக்களுடன் ஆரம்பமாகும் இறைவசனங்களில் முதன்மையாயிருந்தது இது. தொடர்ந்து தெய்வீக சத்திய வாக்கொன்று வந்தது - எழுது கோலின் மீது சத்தியமாக, இறைவனது ஞானத்தை மனிதர்களுக்கு கற்பிக்கும் அடிப்படை சாதனமாக முதலாவது இறைவசனத்திலேயே இது குறிக்கப்பட்டிருந்தது. எழுது கோல் குறித்து வினவப்பட்டபோது நபிகளார் கூறினார்கள் : “ அல்லாஹ் முதலில் உருவாக்கியது எழுது கோல். அவன் கற்பலகையைப் படைத்து ‘ எழுதுவாயாக ’ என எழுது கோலுக்கு உத்தரவிட்டான். எழுது கோல் ‘ நான் என்ன எழுதலாம்? ’ எனக் கேட்டது. ‘ இறுதி நாள் வரை எனது படைப்புகள் குறித்த எனது அறிவை எழுதுவாயாக ’ என்றான் அல்லாஹ். எழுதுகோலும் தனக்கிடப்பட்ட கட்டளையைச் செய்யலாயது. ” - ( திர்மிதீ 44 ) எழுதுகோலின் மீது சத்தியமாக எனும் உறுதி மொழியைத் தொடர்ந்து, மற்றுமோரு உறுதிமொழி வருகின்றது. - அவர்கள் எழுதியவைகளின் மீது சத்தியமாக. அவர்கள், அதாவது வானவர்கள் மதிப்பிடவியலா எழுது கோல்களால் மதிப்பிடவியலாக் கற்பலகைகள் மீது எழுதுவனவற்றுள் அமைந்தது குர்ஆனின் தெய்வீக மூலரூபம். பின்னைய இறைவசனங்கள் இதனையே இந்த மேலான தூய ஓதுதல் ( குர்ஆன் ) * (இஸ்லாத்தின் அடிப்படையான தெய்வீக வாசகங்கள் இதிலிருந்தே தம் பெயர் பெற்றுள்ளன.)எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல் (லவ்ஹூல் மஹ்பூலில்) பதிவு செய்யப்பட்டது*85:21-22எனவும், நூலின் தாய்*13:39 ( உம்முல் கிதாப் ) எனவும் குறிக்கின்றன. இந்த இரு சத்திய வசனங்களின் பின்னர் தெய்வீக வாக்கு வருகின்றது.


நூன். எழுது கோலின் மீதும் ( அதனைக் கொண்டு ) அவர்கள் எழுதியவைகளின் மீதும் 

சத்தியமாக, ( நபியே ) நீர் உமதிறைவனருளால் ஒரு பைத்தியக்காரனல்லர். நிச்சயமாக 

உமக்கு முடிவுறாத ( நீடித்த ) ஒரு கூலி இருக்கின்றது. நிச்சயமாக நீர் மகத்தான நற்குணங்கள் 

உடையவராகவே இருக்கின்றீர். - 68: 1-4


ஆரம்ப இந்த வசனங்கள் அருளப்பட்ட பின்னர் சிறிது காலம் அமைதி நிலவியது. தாம் ஏதோ ஒரு வகையில் வானலோகத்தின் மகிழ்வின்மைக்குக் காலாக அமைந்துவிட்டோமோ என நபிகளார் அஞ்சுமளவுக்கு அவ்வமைதி நீடித்தது. அவ்வாறேதும் நடப்பது முடியாத கருமமென கதீஜா இடையறாது கூறி வந்தார். இறுதியில் அமைதி விலகி மேலும் வாக்குறுதிகள் வந்தன. அன்னாரின் தூதுடன் நேரடியான தொடர்புடைய முதலாவது கட்டளையும் அத்துடனேயே அருளப்பட்டது : 


முற்பகலி(ன் ஒளியி)ன் மீது சத்தியமாக! மறைத்துக் கொள்ளும் (இருண்ட) இரவின் மீது 

சத்தியமாக! (நபியே) உமதிறைவன் உம்மை கைவிடவுமில்லை; (உம்மை) வெறுக்கவுமில்லை. 

(உமது) பிந்திய நிலைமை முந்திய நிலைமையைவிட நிச்சயமாக உமக்கு மிக்க மேலானதாக 

இருக்கின்றது. உமதிறைவன் பின்னும் (பின்னும் பல உயர் பதவிகளை) உமக்கு அளிப்பான். 

(அவைகளைக் கொண்டு) நீர் திருப்தியடைவீர். அநாதையாக உம்மைக் கண்ட அவன், 

(உமக்குத்) தங்கும் இடமளி(த்து ஆதரி)க்கவில்லையா? திகைத்துத் தயங்கியவராக உம்மைக் 

கண்ட அவன் நேரான வழியில் (உம்மை) செலுத்தினான். முடைப்பட்டவராக உம்மைக் கண்ட 

அவன் (உம்மைத்)தனவந்தராக்கி வைத்தான் (அல்லவா?) ஆகவே (இவைகளுக்கு நன்றி 

செலுத்தும் பொருட்டு) நீர் அநாதைகளை கடிந்து கொள்ளாதீர். யாசிப்பவனை வெருட்டாதீர். 

(உம்மீது புரிந்துள்ள உமதிறைவனின் அரு(ளைப் பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி 

செலுத்திக்)க் கொண்டிருப்பீராக. ” - அல் குர்ஆன் 93



இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment