Friday, 2 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

இறைவனின் இல்லம் (தொடர்…) 2

சிறுவர் தனது பதின்மூன்றாம் வயதை அடைந்தபோது இப்றாஹீம் தனது நூறாவது வயதிலும், ஸாரா தொண்ணூறாவது வயதிலும் இருந்தனர். 
இறைவன் மீண்டும் இப்றாஹீமுடன் உரையாடி ஸாராவும் ஒரு மகனைப் பெற்றெடுக்க வாக்களித்து, அம்மகனுக்கு இஸ்ஹாக் எனப் பெயரிடும்படி கூறினான். இறைவனிடம் தனது மூத்த மகன் பெற்றிருந்த உன்னத நிலை குலைந்து விடுமோ என்றஞ்சிய இப்றாஹீம் ‘ஓ! இஸ்மாயீல் உனக்கு முன்பாகப் பிழைப்பானாக! ' எனப் பிரார்த்தித்தார். இறைவன் கூறினான்: இஸ்மாயீலுக்காக நீர் செய்த பிரார்த்தனையை நான் கேட்டேன். நான் அவரை ஆசீர்வதித்துள்ளேன்……

அவரது சந்ததியார் அதிகமாகப் பல்கவும் பெருகவும் பண்ணுவேன்…… வருகிற வருஷம் இதே காலம் ஸாரா உமக்குப் பெறப்போகிற ‘இஸ்ஹாக்’கோடு எனது வாக்கினை நான் உறுதிப்படுத்துவேன்.

ஸாரா இஸ்ஹாக்கைப் பெற்றுத் தானே பாலூட்டி வளர்த்தார். குழந்தை வளர்ந்து, பால்குடி மறக்கடிக்கப்பட்ட பின்னர், ஹாஜராவும் அவரது மகன் இஸ்மாயீலும் தங்களது வீட்டில் தொடர்ந்தும் வாழ்ந்து வரக்கூடாது என இப்றாஹீமிடம் முறையிடலானார் ஸாரா.

இஸ்மாயீலின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பின் காரணமாக, ஸாராவின் முறையீடு, இப்றாஹீமை மிகுந்த துயரத்துக்குள்ளாக்கியது. மீண்டும் இறைவன் அவருடன் உரையாடி, இஸ்மாயீல் ஆசீர்வதிக்கப்பட்டவராகவே விளங்குவார் என வாக்களித்தான்.

ஒன்றல்ல - இரண்டு பெரும் சமூகங்கள்; இறைவனின் நியதிகளைச் செயல்படுத்தவென எழுந்த இரு பெரும் சாதனங்கள்; வழிகாட்டப்பட்ட இரு பெரும் சக்திகள் தமது மூல கர்த்தாவாக, தந்தையாக, இப்றாஹீம் நபியவர்களையே நோக்கி நிற்பனவாயின.

தூய்மையல்லாத எதையுமே இறைவன் தன் அருட்கொடையாக வாக்களிப்பதில்லை. தூய்மையான ஆத்மாவைத் தவிர்த்து வேறு எதுவுமே இறைவன் முன்னிலையில் பெருமை பெறுவதுமில்லை.

ஆக, இரண்டு பெரிய ஆன்மீக இயக்கங்களின் மூலபிதாவாக விளங்குகின்றார் இப்றாஹீம் நபியவர்கள்.

இவையிரண்டும் ஒரு முகமாகவன்றி தத்தமது பாதையில் வெவ்வேறாகவே இயங்கவேண்டியிருந்தன. இறவனது அருளிலும், அவனது வானவ தூதர்களின் பாதுகாப்பிலுமாக ஹாஜராவையும் இஸ்மாயீலையும் ஒப்படைத்து விட்டார் இப்றாஹீம். அவர்களப் பொறுத்த மட்டில் அனைத்தும் நலமாகவே அமையும் என்ற நம்பிக்கை அவரிடம் உறுதி பெற்றிருந்தது.



-இன்னும் வரும்…

இறைவன் நாடினால்…

No comments:

Post a Comment