Friday, 16 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

பஹீரா...

அப்த்-அல்-முத்தலிபின் இறுதிக் காலப் பகுதியில் அவரின் செல்வ வளமும் குன்றிச் சென்றிருந்தது. அவர் தனது மக்களுக்கு விட்டுச் சென்றனவும் சிறியனவாகவே இருந்தன. அவர்களுள் சிலர், சிறப்பாக அபூலஹப் என வழங்கப்பட்ட அப்த்-அல் உஸ்ஸா முதலியோர் சொந்தமாகவே பெரும் செல்வம் சேகரித்திருந்தனர். அபூதாலிப் ஏழையாகவே இருந்தார். எனவே அவரது தம்பி மகன் முஹம்மதும் தன் ஜீவியத்துக்காகத் தன்னால் இயன்றளவு சுயமாகச் சம்பாதிக்க வேண்டியவராயிருந்தார். ஆடுகள் மேய்க்கும் தொழிலிலேயே அதிகம் ஈடுபட்ட சிறுவர், மக்காவைச் சூழவுள்ள மலைகளிலும், சுற்றுப் புறங்களிலும் பல நாட்களைத் தனிமையிலேயே கழித்து வரலாயினார். அபூ தாலிப் தனது பிரயாணங்களின் போது, சிறுவரை நகருக்கு வெளியே கூட்டிச் செல்வதையும் வழக்கமாய்க் கொண்டிருந்தார். இவ்வாறுதான் ஒரு முறை முஹம்மத் ஒன்பது வயதுடையவராக இருந்த போது,- சிலர் பன்னிரண்டு வயதென்பர் - அவர்கள் ஒரு வர்த்தகக் குழுவுடன் ஸிரியா வரை சென்றனர்.  

போஸ்த்தராவுக்கு அருகில் வழக்கமாக மக்கத்து வர்த்தகக் குழுக்கள் தங்கிச் செல்லும் இடத்துக்கருகே ஒரு மடம் இருந்தது. தலைமுறை தலைமுறையாக அங்கே ஒரு கிறிஸ்தவ மதகுரு வாழ்வது வழக்கம். ஒருவர் இறந்தால் மற்றொருவர் அங்கு இடம்பெறுவார். மடத்தின் அனைத்துப் பொருட்களும் பழம் ஏட்டுச் சுவடிகளும் மதகுருவின் பொறுப்பிலேயே இருந்து வந்தன. இந்த ஏட்டுச் சுவடிகளில் ஒன்று, அறபிகளுக்கு ஓர் இறைதூதர் வருவதனை முன்னறிவிப்புச் செய்வதாக இருந்தது. தற்போது அம்மடத்தில் வாழ்ந்து வந்த பஹீரா, இச்சுவடிகளை நன்கு கற்றறிந்தவராகவும் அவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். வரகாஹ்வைப்போல இவரும், தனது வாழ்நாளுக்குள்ளேயே இவ்விறை தூதர் தோற்றம் பெறுவார் என்ற ஒரு நம்பிக்கையைக் கொண்டிருந்தார்.
மக்கத்து வர்த்தகக் குழுக்கள் பல தனது மடத்துக்கண்மையில் தங்கிச் செல்வதைப் பல சந்தர்ப்பங்களிலும் பஹீரா அவதானித்து வந்துள்ளார். எனினும் இம்முறை, இதன் முன்னர் எப்போதும் கண்டிராத அம்சங்கள் சில அவரது கவனத்தை ஈர்த்து நின்றன. 

குழுவினர் தூரத்தில் வந்து கொண்டிருந்தனர். ஒரு சிறிய மேகம் மிகவும் தாழ்வாகவும் மெதுவாகவும் அக்குழுவினருக்கு மேலாக மிதந்து வந்தது. சூரியனுக்கும் பிரயாணிகளுக்கும் இடையிலாக இம்மேகம் எப்போதும் இரண்டொரு பிரயாணிகளுக்கு நிழல் அளிப்பதாக இருந்தது. இக்காட்சியினால் கவரப்பட்ட பஹீரா, அவர்கள் அருகே வரும் வரை காத்திருந்தார். அவரது கவர்ச்சி சடுதியாக வியப்பாக மாறியது. ஏனெனில் அப்பிரயாணிகள் நின்றவுடன் மேகமும் நின்றுவிட்டது. அவர்கள் தங்கியிருந்த மரத்தின் மேலாக அது நின்றது. மரமும் தன் கிளைகளை நன்கு தாழ்த்தியிருந்தது. அதனால் பிரயாணிகளுக்கு நிழல் இரு மடங்காகக் கிட்டியது. பொதுவாக எவரதும் அவதானத்துக்குள்ளாகாத இச்சிறு சம்பவம் பஹீராவைப் பொறுத்தமட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக விளங்கியது. வல்லமை பொருந்தியதோர் ஆன்மீக சக்தியே இதற்குறிய விளக்கத்தை அளிக்கமுடியும். உடனேயே அவரது சிந்தனை எதிர்பார்க்கப் பட்டிருக்கும் இறைதூதர் குறித்து எண்ணலாயிற்று. அவர் ஏற்கனவே வந்து விட்டாரோ? இந்த வர்த்தகப் பிரயாணிகளுள் அவரும் இருக்கின்றாரோ?…


மடத்தில் தேவையான பொருட்களனைத்தும் இருந்தன. அனைத்தையும் ஒன்று சேர்த்த பின்னர், பஹீரா வர்த்தகக் குழுவினருக்குச் செய்தியனுப்பினார்: “குறைஷி மக்களே! நான் உங்களுக்கு உணவு தயார் செய்துள்ளேன். நீங்கள் ஒவ்வொருவரும், பெரியோரும், சிறியோரும், சுதந்திரவான்களும், வேலையாட்களும் அனைவரும் அவசியம் வரவேண்டும்”. 

அவர்கள் மடத்துக்கு வந்தனர். பஹீரா இவ்வளவு கூறியும், அவர்கள் தமது பொதிகளையும், ஒட்டகங்களையும் கண்காணிக்கவென முகம்மதை விட்டு வந்திருந்தனர். அவர்கள் அண்மையில் வந்ததும், ஒவ்வொருவர் முகத்தையும் பஹீரா கூர்ந்து அவதானித்தார். தனது சுவடிகளிலிருந்து குறிப்புகளுக்கும் விளக்கங்களுக்கும் இயைந்தவராக எவரும் காணப்படவில்லை. மட்டுமல்ல, தான் கண்ட இரு அற்புதக் காட்சிகளுக்குத் தகுதிவாய்ந்தவரான ஒருவரையும் கூட அவரால் கண்டு கொள்ள முடியவில்லை. குழுவினருள் அனைவரும் வரவில்லை போலும். 
“குறைஷி மக்களே! உங்களில் ஒருவரையும் நீங்கள் விட்டு விடவேண்டாம்,” என்றார் பஹீரா. “நாம் ஒருவரையும் விட்டு வரவில்லை- ஒரேயொரு சிறுவனைத் தவிர, எம்மனைவரிலும் ஆக இளையவர் அவர்”, என்றனர் அவர்கள். “ அவரை அவ்வாறு நீங்கள் கருத வேண்டாம், அவரையும் அழையுங்கள், எமது விருந்தில் அவரும் கலந்து கொள்ளட்டும்.” என்றார் அவர். அபூதாலிபும் ஏனையோரும் தமது கவனயீனத்தைக் கடிந்து கொண்டனர். ‘ அப்த்-அல்லாஹ்வின் மகனை விட்டு, இந்த விருந்தில் அவரும் கலந்து கொள்ளாமைக்கு, நாம் நிச்சயமாக குறை கூறப்பட வேண்டியவர்களே ’ எனக் கூறியவராக ஒருவர் சென்று, அவரை அழைத்து வந்து தமது மக்களுடன் இருத்திக் கொண்டார்.

சிறுவரின் முகத்தைப் பார்த்ததுமே பஹீராவால் அவ்வற்புத நிகழ்ச்சிகளை விளங்கிக்கொள்ள முடிந்தது. உணவருந்திக் கொண்டிருந்த வேளை ஆழ்ந்து அந்தச் சிறுவரை அவதானித்த பஹீராவால் தன் சுவடிகளில் காணப்பட்ட அத்தனைக் குறிப்புகளையும், அவரது முகத்திலும் உடம்பிலும் காண முடிந்தது.

உணவருந்தி முடிந்ததும் பஹீரா, தனது இளம் விருந்தினரை அண்மிப் பல்வேறு விடயங்கள் குறித்தும் அவருடன் உரையாடத் தொடங்கினார். அவரது வாழ்க்கைப் போக்கு, உறங்கும் முறை உட்பட எல்லா நடவடிக்கைகள் குறித்தும் வினவப்பட்டது. எவ்விதத் தயக்கமுமின்றி பதிலளித்தார் முஹம்மத். 
ஏனெனில் வினாக்களை விடுத்தவர் கொளரவத்துக்குரியவர். அத்தோடு கேள்விகள் அன்பும் அருளும் மிக்கனவாக அமைந்திருந்தன. இறுதியாக பஹீரா சிறுவரின் முதுகைச் சிறிது பார்க்கலாமா என வினவியபோது தனது மேலங்கியைக் கழற்றவும் அவர் தயங்கவில்லை. ஏற்கெனவே பஹீரா இச்சிறுவர் குறித்துத் தீர்க்கமான முடிவு கொண்டிருந்தார். இப்போது அது மேலும் உறுதியாகி விட்டது. தனது நூல்களில் கூறப்பட்டிருந்தது போல, சிறுவரின் தோல்களுக்கு மத்தியில் தான் எதிர்பார்த்தவாறே இறைதூதர்க்கானதொரு சின்னம் - முத்திரை - காணப்பட்டது. அவர் அபூதாலிபிடம் திரும்பினார். “ இச்சிறுவருக்கும் உமக்கும் என்ன உறவு? ” என்றார். “ அவர் எனது மகன் ” என்றார் அபூதாலிப். “ அவர் உமது மகனல்ல; இவரது தந்தை உயிரோடிருக்க முடியாது ” என்றார் பஹீரா. “ அவர் எனது சகோதரனின் மகன் ” என்றார் அபூதாலிப். “ அப்படியானால் அவருடைய தந்தை எங்கே? ” “ அவர் மரணமடைந்து விட்டார் ”. “ அதுதான் உண்மை ” என்றார் பஹீரா. தொடர்ந்தும் அவர் கூறினார்: “ உமது சகோதரரின் மகனை அவரது ஊருக்கே அழைத்துச் செல்லும். யூதர்களிடமிருந்து அவரைக் காத்து கொள்ளும். இறைவன் மீது ஆணையாக, அவர்கள் இவரைக் கண்டு நான் அறிந்திருப்பனவற்றை அவர்களும் அறிந்துக் கொள்ளக் கூடுமாயின் நிச்சயமாக இவருக்குத் தீங்கு விளைவிப்பார்கள். உமது சகோதரனது மகனுக்கு மகத்தானதொரு எதிர்காலம் இருக்கின்றது ”.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment