Wednesday, 14 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

மகவைப் பலியிட ஒரு சபதம். ( தொடர்…)


சபதத்தை நிறைவேற்றும் நடவடிக்கைகள் குறித்து, அப்த்-அல்-முத்தலிப் தனது இல்லத்திலிருந்த பெண்களிடம் எவ்வித ஆலோசனையும் நடாத்தி இருக்க வில்லை. அதிலும் குறிப்பாக அப்த்-அல்லாஹ்வின் தாயார் பாத்திமா பாத்திமாவுடன்கூட இதுபற்றி உரையாடியிருக்கவில்லை. அவருடைய ஏனைய மனைவியர் மக்காவின் சுற்றுப்புறங்களைச் சார்ந்தோர். ஆகவே அவர்கள் மக்காவில் அதிகம் செல்வாக்கும் படைத்தோராயில்லை. ஆனால் பாத்திமாவோ குறைஷிக் குலத்தவர். பலம் வாய்ந்த மக்ஸும் கோத்திரத்தவர். தனது தாய்வழியில் அவர் குஸையின் மகன் அப்த்துடைய வழி வந்தவர். தேவையேற்படின் பாத்திமாவுக்கு உதவ அவரது உறவினர் அனைவரும் மிக அண்மையிலேயே இருந்தனர்.

அப்த்-அல்-முத்தலிபின் பத்துப் புதல்வர்களுள் ஸுபைர், அபூ தாலிப், அப்த்-அல்லாஹ் ஆகிய மூவரும் பாத்திமாவால் பெறப்பட்டவர்கள். தமது சகோதரர்களுடன் மிக்க வாஞ்ஞையுடனிருந்தவர்களான அப்த்-அல்-முத்தலிபின் ஐந்து பெண் மக்களதும் தாயார் அவர். வீட்டில் இருந்த பெண்கள் அனைவருமே வெறுமனே இருக்கவில்லை. 
எல்லாப் புதல்வர்களதும் தாய்மார் பாத்திமாவின் துணையை நாடி நின்றனர். ஏனென்றால் யாருடைய மகன் பலியிடப்படவேண்டுமென்பது அவர்களால் அறியப்பட்டிருக்கவில்லை.

குறிபார்த்து முடிந்த நிலையில் கஃபாவை சூழவர மக்கள் நிரம்பி வழியலாயினர். அப்த்-அல்-முத்தலிபும் மகன் அப்த்-அல்லாஹ்வும் மரண பயங்கரம் முகத்தில் கவிழ்ந்தவராகக் கஃபாவின் வாசலில் வந்ததும் மக்ஸூம் கோத்திரத்தாரிடையே முணுமுணுப்புகள் எழுந்தன. தமது சகோதரிகளுள் ஒருவரது மகனே பலிக்குள்ளாக வேண்டியுள்ளமையை அவர்கள் உணர்ந்தனர். 
“அந்தக் கத்தி எதற்காக?”…என்று ஒரு குரல் எழுந்தது. அதே கேள்வி மேலும் பலராலும் எழுப்பப்பட்டது. எல்லோருக்கும் பதில் தெரிந்துதான் இருந்தது.
அப்த்-அல்-முத்தலிப் தனது சபதம் குறித்து விளக்கத் தொடங்கினார். மக்ஸும் கோத்திரத் தலைவரான முஙீரா அவரை இடைநிறுத்தக் கூறினார். “ அவரை நீர் பலியிடாதீர். பதிலாக வேறு ஒன்றைப் பலியிடும். மக்ஸும் கோத்திரத்தார் அனைவரது செல்வங்களையும் தியாகம் செய்தேனும் நாம் இவரை மீட்போம். ” அப்த்-அல்லாஹ்வின் சகோதரர்களும் இந்நிலையில் கஃபாவிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள். இதுவரை எவரும் எதுவும் பேசியிருக்கவில்லை. இப்போது அவர்கள் தம் தந்தையாரிடம், தம்பியை விட்டுவிடும்படியும் பதிலாக வேறு பலிகள் எதனையும் செய்யும்படியும் இரந்து வேண்டி நின்றார்கள். குழுமியிருந்த அனைவருமே அப்த்-அல்-முத்தலிபை கெஞ்சத் தொடங்கினார்கள். என்றாலும் உள்ளத்தில் ஐயங்கள் நிறைந்து தெளிவான சிந்தனையில்லாதவராக இருந்தார் அவர்.
இறுதியில், ஆவிகளுடன் கலந்து பேசும் யத்ரிபின் ஒரு பெண்ணைக் கண்டு அப்த்-அல்லாஹ்வுக்குப் பகரமாக வேறு பலிகள் ஏதும் மேற்கொள்ளப்படலாமா எனக் கலந்தாலோசிக்க ஒப்புக் கொண்டார். அது கூடுமாயின் எவ்வாறான பிரதியீடு செய்வதென விசாரித்தறிவதாகவும் ஏற்பாடாயிற்று.

ஏனைய புதல்வருள் ஒருவர் அல்லது இருவருடன் அப்த்-அல்லாஹ்வையும் அழைத்துக் கொண்டு தன் பிறந்த இடம் நாடிச் சென்றார். அப்த்-அல்-முத்தலிப்.
அவர் தேடிச்சென்ற பெண் யத்ரிபிலிருந்து கைபர் பிரதேசத்திற்குச் சென்றிருந்தார். செலிப்பானதொரு பள்ளத்தாக்கிலிருந்து யூத குடியேற்றப் பிரதேசமான கைபர், யத்ரிபிலிருந்து வடக்கே சுமார் நூறு மைல் தொலைவிலிருந்தது.

பிரயாணத்தை மேலும் தொடர்ந்து, அப்பெண்ணச் சென்று கண்டு பிரச்சினையை எடுத்துரைத்ததும், தன்னோடளவளாவும் ஆவியுடன் கலந்து அடுத்த நாள் தக்க பதிலுரைப்பதாகக் கூறினார் அப்பெண்.

இறவனை வழிபட்ட வண்ணம் இருந்தார் அப்த்-அல்-முத்தலிப்.
அடுத்த நாள் அப்பெண், “ எனக்கு செய்தி வந்துள்ளது; உங்களிடையே உயிர்ப் பலிக்கான பிரதியீடு என்ன? ” எனக் கேட்டார். பத்து ஒட்டகைகள் என பதிலளித்தனர் சென்றிருந்தோர். அப்பெண்மணி கூறினா: “ உங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்வீர்களாக! பத்து ஒட்டகங்களை ஒரு புறத்தும் உங்கள் மனிதனை மறுபுறத்தும் இட்டு அம்பிழுத்துப் பாருங்கள். அம்பு உங்கள் மனிதனுக்கு எதிராக வருமாயின் ஒட்டகங்களின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளுங்கள் தேவையாயின் ஒட்டகங்களுக்கு எதிராக முடிவு ஏற்படும்வரையில் அவற்றின் தொகையைக் கூட்டிச் செல்லுங்கள். 

உங்கள் இறைவன் ஒட்டகங்களின் பலியீட்டை ஏற்றுக் கொள்ளும்வரை தொகையைக் கூட்டிச் சென்று அவற்ரைப் பலியிட்டு உங்களவரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். 
உடனடியாக அவர்கள் மக்காவுக்குத் திரும்பினர்.அப்த்-அல்-முத்தலிப், மகன் அப்த்-அல்லாஹ்வைக் கூட்டிக் கொண்டு பத்து ஒட்டகங்களுடன் மிகத் தாழ்மையாகக் கஃபாவினுள் நுழைந்தார். ஹுபலின் அருகில் நின்றவராக, தனது செய்கையை ஏற்றுக் கொள்ளும்படி இறைவனை வேண்டி நின்றார் அவர்.
அம்பிழுத்துப் பார்த்தபோது அது அப்த்-அல்லாஹ்வுக்கு எதிராகவே விழுந்தது. இன்னும் பத்து ஒட்டகங்கள் சேர்க்கப்பட்டன. அம்போ ஒட்டகங்கள் வாழ வேண்டுமென்றும் அப்த்-அல்லாஹ் பலியிடப்பட வேண்டுமென்றே கூறியது. இன்னும் பத்து ஒட்டகங்களைச் சேர்த்தனர். இவ்வாறு கூட்டிச் சென்று, நூறு ஒட்டகங்களாக எண்ணிக்கை அமைந்த போதே அப்த்-அல்லாஹ்வுக்கு சார்பாக அம்பு விழுந்தது. எனினும் அப்த்-அல்-முத்தலிப் மிகக் கவனமாக இருந்தார்.
இத்துணைப் பாரியதொரு பிரச்சினைக்குத் தீர்வு காண ஓர் அம்பின் முடிவினை மாத்திரம் ஏற்றுக்கொள்ள அவர் தயாராயில்லை. இரண்டாம், மூன்றாம் முறையும்கூட அம்பிழுக்க வேண்டுமென்பதே அவர் விருப்பமாயமைந்தது. மூன்றாம் முறையும் அப்த்-அல்லாஹ்வுக்கு சார்பான முடிவே கிட்டியது.
இறைவன் தனது பிதியீட்டை ஏற்றுக் கொண்டான் என அப்த்-அல்-முத்தலிப் உறுதி கொண்டார். ஒட்டகங்களும் முறைப்படி பலியிடப்பட்டன.



இன்னும் வரும்…

-இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment