Wednesday, 14 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


மகவைப் பலியிட ஒரு சபதம்.


பெருந்தன்மை, நம்பிக்கை, ஆழ்ந்த மதிநுட்பம் என்பவற்றின் காரணமாக அப்த்-அல்-முத்தலிப் குறைஷியரிடையே பெரிதும் கொளரவிக்கப் பட்டு வந்தார்.

ஆளுமை நிறையப் பெற்றதோர் அழகான ஆண் மகன் அவர்.
செல்வம் நிறைந்திருக்கப் பெற்றமையால் மிக்க அதிர்ஷ்டம் வாய்ந்தவராகவும் விளங்கினார். ஸம்ஸம் கிணற்றினை மீட்டெடுக்கும் பணிக்கு அவர் தேர்ந்தெடுக்கப் பட்டமை இவை அனைத்தையும் விஞ்ஞியதொரு கொளரவமாக விளங்கியது.

இவ்வருட் கொடைகள் அனைத்துக்குமாக அவர் இறைவனுக்கு நன்றி செலுத்தி வந்தார். என்றாலும் அவரது உள்ளத்தில் எழுந்த சில எண்ணங்கள், அவருள் அமைதியிண்மையை ஏற்படுத்தின. அதுதான், ஸம்ஸம்மைத் தான் தோண்டுவதை நிறுத்தும்படி குறைஷியர் கூறியபோது - அனைத்து முயற்சிகளும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தபோது - அவரது உள்ளத்தில் ஏற்பட்ட கவலை. இறைவன் அருளால் யாவும் நலமே முடிந்தன. என்றாலும் அதற்கு முன்னர், குழந்தைச் செல்வத்தைப் பொறுத்த மட்டில் தான் இருந்த வருமை நிலையை, ஒரேயொரு மகனை மாத்திரமே தான் கொண்டிருந்தமையை எண்ணி ஒருபோதும் அவர் கவலையுற்றதில்லை.
அப்த்-ஷம்ஸ் கோத்திரத் தலைவரும், அப்த்-அல்-முத்தலிபின் ஒன்றுவிட்ட சகோதரருமான உமையா பல புதல்வர்களைப் பெற்றிருந்தார். மக்ஸூம் கோத்திரத்து முஙீரா ஸம்ஸம்மைத் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், அவரது புதல்வர்கள், பரந்த பலம் வாய்ந்ததோர் வட்டத்தராக அவரைச் சுற்றி அமைந்திருப்பர். ஆனால் அப்த்-அல்-முத்தலிபோ ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைக் கொண்டிருந்த போதும் ஒரே ஒரு மகனையே பெற்றிருந்தார். இவ்வெண்ணம் அவரை வாட்டியது. என்றாலும் கூட, ஸம்ஸம்மை அளித்த இறைவன் நிச்சயமாக ஏனைய வழிகளிலும் தனக்கு ஆதரவு அளிப்பான் என்ற நம்பிக்கை அவருள்ளத்தில் இருந்தது.

அண்மையில் இறைவன் தனக்கு காட்டிய அருளினால் உந்தப்பட்டு, தனக்கு புதல்வர்களைப் பெருக்கித் தரும்படி பிரார்த்தித்தார் அவர். அத்தோடு தனக்கு பத்து ஆண்மக்கள் பிறந்து அவர்கள் அனைவரும் வாலிபப் பிராயத்தை அடையக் கூடுமாயின் அவர்களில் ஒருவரை கஃபாவில் காணிக்கையாகப் பலியிடுவதென ஒரு சபதமும் செய்தார்.

அவரது சபதம் ஏற்கப்பட்டது. வருடங்கள் பல கழிந்து விட்டன. அவருக்கு மேலும் ஒன்பது ஆண் மக்கள் கிடைத்தனர். சபதம் செய்தபோது எப்போதோ வெகுகாலத் தொலைவில் நிகழக் கூடியதொரு சம்பவமாகவே அது அவருக்குப் பட்டது. ஆக இளைய மகனான அப்த்-அல்லாஹ்வைத் தவிர ஏனைய அனைவரும் வாலிபர்களாக மாறிவிடுமளவு காலம் மிக வேகமாகக் கடந்து விட்டது.

செய்து விட்ட சபதம் அவரது சிந்தனையை ஆட்கொள்ளத் தொடங்கியது. தன் மக்கள் அனைவர் குறித்தும் அவர் பெருமிதம் கொண்டிருந்தார். ஆனால் அனைவர் மீதும் ஒரேமாதிரியான அன்பு அவரது உள்ளத்திலில்லை. இளையவரான அப்த்-அல்லாஹ் மீதே தன்னுடைய அன்புணர்வு மிகைத்திருப்பதை அவரது உள்ளம் அவருக்கு உணர்த்தியிருந்தது. இறைவனும் இந்த மகனையே தேர்ந்திருக்கலாம். மிக்க அழகு வாய்ந்தவராக விளங்கினார் அப்த்-அல்லாஹ். அவரையே பலியிட வேண்டியும் இறைவன் விரும்பியிருக்கலாம். அவை எவ்வாறாதாயிருப்பினும் அப்த்-அல்-முத்தலிப் வாக்குறுதி மாறாதவர். சபதத்தை முறித்து விடும் எண்ணம் ஏதும் அவரது சிந்தைதில் எழவில்லை. பொறுப்புணர்ச்சியும் நீதியுணர்வும் மிக்கவர் அவர். எவ்வாறான பொறுப்புகளைத் தவிர்க்கலாம் என்ற தெளிவான சிந்தனை அவரிடமிருந்தது.
எந்த மகன் பலியிடப்பட வேண்டும் என்ற முடிவெடுப்பதைத் தன் மீது சுமத்திக் கொள்ள அவர் தயாராக இல்லை. எனவே, இனியும் ஒரு பாலகன் எனக்கருதமுடியாத அளவு அப்த்-அல்லாஹ் வளர்ந்ததும், அவர் தம் மக்கள் பத்துப் பேரையும் கூட்டித் தான் இறைவனுக்கு அளித்திருக்கும் வாக்குறுதியை விவரித்து, தன் வாக்கைக் காப்பாற்ற தனக்குத் துணை செய்யும்படி அவர்களை வேண்டி நின்றார்.
தந்தையின் வாக்கு தனயரதும் வாக்கே. ஆக, அவர்கள் எவரும் மறுத்துரைக்கவில்லை. தம்மல் ஆக வேண்டியதென்ன என்றே அவர்கள் வினவினர்.

ஒவ்வொருவரும் தனித்தனி அம்புகளில் தத்தமது அடையாளங்களை இடும்படி வேண்டப்பட்டனர்.
அதே வேளை குறைஷியருக்கு அதிகாரப் பூர்வமாகக் குறி பார்ப்பவரைக் கஃபாவுக்கு வந்து சேரும்படி செய்தி அனுப்பினார் அப்த்-அல்-முத்தலிப்.

பின்னர் தன் மக்கள் அனைவரையும் புனிதத் தலத்தினுள் கூட்டிச் சென்று, அங்கு குறி பார்ப்பவரிடம் தனது சபதம் குறித்து விளக்கினார். மக்கள் ஒவ்வொருவராகத் தத்தம் அம்பபைக் கொடுத்தனர். ஹூபல் சிலையின் அருகில், கத்தி ஒன்றனைக் கையில் ஏந்தியவராக அப்த்-அல்-முத்தலிப் இறைவனைப் பிரார்த்தித்தவராக இருந்தார்.
அம்பு இழுக்கப்பட்டது…
அப்த்-அல்லாஹ்வின் அம்பே வெளிவந்தது. அவரது தந்தையார் ஒருக் கையில் அப்த்-அல்லாஹ்வைப் பிடித்து மறு கையில் கத்தியை ஏந்தியவராகக் கதவினருகில் சென்றார். வேறு சிந்தனைகள் மனதில் எழுவதன் முன்னர், உடனடியாகப் பலி பீடத்துக்கு மகனைக் கொண்டு செல்லும் அவசரம் அவரிடம் காணப்பட்டது.

இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,
 

No comments:

Post a Comment