மணவாளர் தனது பெரிய தந்தையார் வீட்டை விட்டு மணாளியின் வீட்டுக்கே குடியிருக்கச் சென்றார். கதீஜா மனைவியாக மட்டுமன்றி, ஒரு நண்பராக, கணவரின் எண்ணங்கள் அபிலாஷைகள் என்பவற்றில் சிறந்ததொரு பங்கினை வகித்தவராக விளங்கினார். அவர்களது திருமண வாழ்வு ஆசீர்வதிக்கப்பட்டதாக, மிக்க மகிழ்ச்சி நிறைந்ததாக அமைந்தது. இழப்புகளினாலான துயரங்களும் இருக்கத்தான் செய்தன. கதீஜா மூலம் முஹம்மதுக்கு ஆறு குழந்தைகள் கிடைத்தனர். அவர்களுள் இருவர் ஆண்கள். மூத்த குழந்தை காஸிம் எனப் பெயரிடப்பட்ட மகன். முஹம்மத், ‘ அபுல் காஸிம் ’ - காஸிமின் தந்தை - என அழைக்கப்பட்டார். எனினும் காஸிம் இரண்டு வயதை அடையுமுன்னரே காலமாகிவிட்டார். இரண்டாவது குழந்தை ஸைனப் என்ற புதல்வி. அவருக்குப் பின்னால் வந்த மூவரும் பெண்கள். ருகையா, உம்ம் குல்தூம், பாத்திமா ஆகியோர். இறுதியாகப் பிறந்த மகனும் குறுகிய காலமே வாழ்ந்தார்.

தனது திருமண நாளின் போது தந்தையாரிடமிருந்து தான் பெற்றிருந்த அன்பு நிறைந்த பணிப்பெண்ணான அடிமை பரகாஹ்வை முஹம்மத் விடுதலை செய்து விட்டார். அதே தினம் கதீஜா தனது சொந்த அடிமைகளிலிருந்து ஒருவரைத் தனது கணவருக்கு அன்பளிப்புச் செய்தார். பதினைந்து வயது நிரம்பியவராயிருந்த ஸைத் அவர். பரகாஹ், யத்ரிப் நகர வாசி ஒருவருக்கு மணஞ் செய்து கொடுக்கப்பட்டார். அவர்களுக்கு ஒரு மகன் கிடைத்தார். அதன் பின்னர் பரகாஹ் ‘ உம்ம் அய்மன் ’ - அய்மனின் தாய் - என்றே வழங்கப்பட்டார். கதீஜாவின் சகோதரர் ஹிஸாம் என்பாரின் மகன் ஹகீம், அண்மையில் உக்காஸ் சந்தையில் வைத்து விலை கொடுத்து வாங்கியிருந்த சில இளைஞர்களுள் ஒருவரே ஸைத். மாமியார் தனது வீட்டுக்கு வருகை தந்தபோது, ஹகீம் தனது புதிய அடிமைகளை அழைத்து, விருப்பமான ஒருவரைத் தெரிந்து கொள்ளும்படி அவரை வேண்டினார். கதீஜா ஸைத்தைத் தேர்ந்து கொண்டார்.
ஸைத் தனது முன்னோர் குறித்துப் பெருமிதம் கொண்டவர். அவரது தந்தை ஹாரிதா வடக்குப் பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற கல்ப் கோத்திரத்தைச் சார்ந்தவர். ஸிரியாவுக்கும் ஈராக்குக்கும் இடையிலான சமவெளியில் இவர்களது பிரதேசம் அமைந்திருந்தது. அவரது தாயாரோ, தந்தையின் கோத்திரத்துக்குச் சமமான பெருமை வாய்ந்த தாயி கோத்திரத்தைச் சேர்ந்தவர். வீரத்துக்கும் கொடைக்கும் அறேபியா முழுவதும் புகழ் பெற்றிழங்கிய கவிஞனும் வள்ளலுமான ஹாதிம், இக்கோத்திரத்தாரின் தலைவர்களுள் ஒருவராக அப்போது இருந்து வந்தார். பல வருடங்களின் முன்னர் ஸைத் தனது தாயாருடன் தாயி கிராமத்துக்கு விருந்தினராகச் சென்றிருந்த போது பனீ - கைன் கோத்திரத்துக் குதிரை வீரர்கள் சிலரால் கிராமம் தாக்கப்பட்டது. அவர்களால் சிறைபிடிக்கப்பட்ட பலருள் ஸைதும் ஒருவர். பின்னர் அவர் ஓர் அடிமையாக விற்கப்பட்டார். தந்தை ஹாரிதா மகனைத் தேடி எவ்வளவு அலைந்தும் பயன் கிட்டவில்லை. கல்ப் கோத்திரப் பிரயாணிகள் எவரையும் எதிர்கொள்ளாததால் தந்தைக்குச் சேதியனுப்ப ஸைதுக்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை. கஃபாவோ அறேபியாவின் எல்லா பிரதேசங்களிலிருந்தும் யாத்திரிகர்களையும் பிரயாணிகளையும் கவரும் ஓர் இடமாக இருந்தது.
முஹம்மதின் அடிமையாக ஸைத் மாறி மாதங்கள் பல கழிய, புனித யாத்திரைக் காலம் ஆரம்பமாகியது. அப்போது தான் ஸைத் தனது கோத்திரத்தைச் சார்ந்த சிலரை மக்காவின் வீதிகளில் கண்டுக்கொள்ள முடிந்தது. முன்னைய வருடம் அவர்களைக் கண்டிருந்தால் அவருடைய உணர்வுகள் வேறு மாதிரியிருந்திருக்கும். இவ்வாறானதொரு சந்திப்புக்காக ஏங்கிக் கொண்டிருந்த காலம் அது. அச்சந்தர்ப்பம் கிட்டிய இப்போதோ அவர் தர்ம சங்கடமான நிலைக்குள்ளானார். தான் இருக்கும் இடம் குறித்துத் தனது பெற்றோருக்கு அறிவுறுத்தாமல் இருக்க முடியாது. ஆனால் என்ன சேதியைத்தான் அவர் அனுப்ப முடியும்? பாலை நிலத்து மகனென்ற வகையில் இவ்வாறானதொரு நிலையில் என்ன கருவைக் கொண்டிருந்தாலும் கவிதையொன்றே தக்க சாதனம் என அவர் உணர்ந்தார். சில அடிகளை யாத்த அவர், கல்ப் கோத்திர யாத்திரிகர்களை அண்மித் தன்னை அறிமுகம் செய்து, “ எனது குடும்பத்தார் எனக்காகத் துயருற்றுள்ளனர் என்பதை நான் நன்கறிவேன், நான் கூறும் செய்தியை அவர்களிடம் கொண்டு செல்லுங்கள் ” எனக் கூறி அக்கவிதையடிகளைப் பாடினார் :
“சேய்மையில் நான் இருந்தாலும் எனது வார்த்தைகள் என் மக்களைச் சேரட்டும். இறைவன் அருள் நிறை தலங்களின் மத்தியின் புனிதமானதோரில்லமென உறைவிடம்.
எனக்கென உழன்ற துயர்களை ஒதுக்குங்கள்.
என்னைத் தேடியலைந்து ஒட்டகங்களைச் களைப்புறச் செய்யாதீர்கள் நானோ, இறைவனுக்கே புகழனைத்தும், காலங்களனைத்தினும், உயர் குலக் குடும்பங்களனைத்தினும் உயர்ந்ததில் உறைகின்றேன்.” .
யாத்திரிகர்கள் வீடு திரும்பிய உடனேயே தனக்கு கிட்டிய நற்செய்தியுடன் ஹாரிதா தன் சகோதரர் கஅப்பைச் சென்று கண்டு இருவருமாக மக்காவுக்குப் புறப்பட்டனர்.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
No comments:
Post a Comment