Wednesday, 28 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

கஃபாவின் புனரமைப்பு

கடைசியாகக் கண்ட நிகழ்ச்சிகளுக்குச் சிறிது முன்னர், அலீ குடும்பத்தவருள் ஒருவராக அமைந்த காலத்தின் போது, முஹம்மத் முப்பத்தைந்து வயதுடையவராக இருந்த நிலையில் குறைஷிகள் கஃபாவைப் புனர் நிர்மாணம் செய்ய முடிவு செய்தனர். 

கஃபா இருந்த நிலையில் அதன் சுவர்கள் ஒரு சாதாரண மனிதனது உயரத்தினவாகவே இருந்தன. கூரையேதும் இல்லை. அதனால் கதவுகள் மூடப்பட்ட நிலையிலும் அதன் உள்ளே செல்ல இயலுமாயிருந்தது. கட்டடத்தினுள் பெறுமதிவாய்ந்த பொருட்களைப் பாதுகாக்கவெனத் தோண்டப்பட்டிருந்த நிலவறையினின்றும் பல பொருட்கள் களவாடப்பட்டிருந்தன. கூரைக்கு வேண்டிய மரக்குற்றிகள் ஏற்கெனவே அவர்களிடம் இருந்தன. ஜெத்தாவுக்கு அண்மையில் கிரேக்க வர்த்தகரொருவரது கப்பலொன்று திருத்த முடியாத நிலையில் கரை தட்டியிருந்தது. அதன் பலகைகளைக் கூரை முகடுகளுக்குப் பயன் படுத்தவெனக் கொண்டு வந்திருந்தனர். இவ்வேளையில் நல்லதொரு தச்சரும் மக்காவில் இருந்தார். அவர் கொப்டிக் மதத்தவர். 
கஃபா குறித்துக் குறைஷியரிடையே இருந்த வியப்பும் அச்சமும் காரணமாக அதில் கைவைப்பதற்கு அனைவருமே தயங்கினர். அவர்களது திட்டம், வெறுமனே கற்களை அடுக்கி எழுப்பப்பட்ட சுவர்களை இடித்துப் புதிதாக உறுதியான சுவர்களை எழுப்புவதாகும். என்றாலும் இது இறைவிரோதச் செயலாயமைந்து விடுமென அவர்கள் அஞ்சினர். இவ்வாறான எண்ணத்தை உறுதிப்படுத்துவதாயமைந்தது கஃபாவின் உட்புறத்தில் வாழ்ந்துவந்ததொரு பெரும் பாம்பின் செய்கைகளாகும். தினமும் அது வெளியே வந்து கஃபாவின் சுவர்களிலிருந்து வெய்யிலில் காய்ந்து செல்லும். யாரேனும் அருகில் சென்றால் பயங்கரமாக படமெடுத்துச் சீறும். இது அனைவரையும் அச்சுறுத்தியது. எனினும் ஒரு நாள் அது வெளியே வந்து வெய்யில் காயும் போது இறைவன் ஒரு கழுகை அனுப்பி வைத்தான். அது பாம்பைப் பிடித்து பறந்து சென்றது. பின்னர் குறைஷியர் தமக்குள்ளே கூறிக் கொண்டனர் : 
“ இறைவன் எமது நோக்கங்களினால் நிச்சயமாகத் திருப்தியுற்றுள்ளான் என நாம் நம்பலாம். எங்களது எண்ணத்துக்கியைபவனாக ஒரு தச்சன் எம்மிடம் உள்ளான். பலகைகளும் எம்மிடம் இருக்கின்றன. இறைவன் எம்மைப் பாம்பிலிருந்தும் காப்பாற்றி விட்டான். ” 
சுவர்களில் ஒன்றிலிருந்து முதலாவதாக ஒரு கல்லை எடுத்து அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கியவர் மக்ஸும் கோத்திரத்தவரான அபூவஹ்ப். இவர் முஹம்மதின் பாட்டியார் பாத்திமாவின் சகோதரர். ஆனால் கையில் எடுத்ததுமே அக்கல் மீண்டும் தனது முன்னைய நிலைக்குத் தாவித் திரும்பியது. இதனால் அனைவரும் அஞ்சியவர்களாக வேலைகளைத் தொடராது திரும்பினர். உடனே மக்ஸும் தலைவரும் இறந்து போன முகீராவின் மகனுமான வலீத் கடப்பாறை ஒன்றனை எடுத்து “ உங்களுக்காக நான் இந்த வேலையைத் தொடங்குகின்றேன் ” எனக் கூறி கஃபாவை அண்மி “ இறைவா, நன்மையே தவிர வேறேதும் எம் உள்ளத்தில் இல்லை ” என்றவராக கரும்பாறைக்கும் யெமனிய முனைக்கும் இடையிலான சுவர்ப்பகுதியை இடித்தார். இது தென்கிழக்குப் பகுதி சுவராகும். எனினும் ஏனையவர்கள் பின்வாங்கியே நின்றனர். “ நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். இவருக்கு ஏதும் தீங்கு நேர்ந்தால் இதற்குமேல் நாங்கள் இடிக்காது விடுவோம். முன்னர் இருந்தபடியே அமைத்து வைப்போம். தீங்கேதும் நேராது விட்டாலோ, அது இறைவன் எமது முயற்சியை அங்கீகரிப்பதாக இருக்கும். நாம் முழுக்கட்டடத்தையும் இடித்து விடுவோம் ” என்றனர் அவர்கள். 

இரவு, எவ்வித துர்நிகழ்ச்சிகளுமின்றிக் கழிந்தது. வலீத் அடுத்த நாள் காலை மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தார். ஏனையோரும் அவருடன் இணைந்து கொண்டனர். சுவர்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு, இப்றாஹீமின் அத்திவாரம் வரை வந்ததும் இரண்டு பச்சை நிற மூடுகற்களைக் கண்டனர். அடுத்தடுத்தனவாக இவ்விரு கற்களும் ஒட்டக முதுகின் உருவில் இருந்தன. இவ்விரண்டனுக்கும் இடையில் ஒரு கடப்பாறையை இட்டு அவற்றை அகற்ற முனைந்த போது முழு மக்காவிலும் ஓர் அதிர்வொலி கேட்டது. இதற்கு மேலும் இந்த அத்திவாரத்தை அகற்ற முனைவது தகாது என்ற கருத்தை உணர்த்துவதாகவே இதனை அனைவரும் கொண்டனர்.

கரும்பாறை வைக்கப்பட்டிருந்த மூலையின் உட்புறத்தில் ஸிரிய மொழியில் பொறிக்கப்பட்டிருந்ததொரு வாசகத்தை அவர்கள் கண்டனர். அது என்னவென்று அறியாமல் அவர்கள் வைத்திருந்தனர். பின்னர் ஒரு யூதர் அதனை வாசித்து விளக்கினார் : 

“ நானே இறைவன்; பக்காவின் அதிபதி. வான லோகத்தையும் பூமியையும் நான் உருவாக்கிய நாளில், சூரியனையும் சந்திரனையும் நான் உருவாக்கிய அதே நாளில், பக்காவை நான் உருவாக்கினேன். அதனைச் சுற்றியும் அசைக்க முடியாத ஏழு வானவர்களை நான் நிலை நிறுத்தியுள்ளேன். அதன் இரண்டு குன்றுகளும் இருக்கும் வரை அது நிலைத்து நிற்கும். அதன் மக்களுப் பாலும் நீரும் அருட்கொடையாக அமையும். ”

இப்றாஹீமின் அமைவிடத்தில் மற்றுமொரு வாசகம் காணக்கிடந்தது. இது கஃபாவின் வாசலை அண்மி, அற்புதமான முறையில் அவரது பாத அடையாளத்தைக் கொண்டுள்ள ஒரு பாறையின் மீதாகும் ; “ மக்கா இறைவனின் புனித இல்லமாகும். அதன் பதார்த்தங்கள் மூன்று திசைகளினின்று வருவன. அதன் புனிதத் தன்மையைக் களங்கப்படுத்துபவர்களில் அதன் மக்கள் முதல்வர்களாக இருக்க வேண்டாம் ”


தங்களிடம் ஏற்கெனவே இருந்தன போக குறைஷிகள் மேலும் கற்களைச் சேகரிக்கலாயினர். கஃபாவின் உயரத்தை மேலும் கூட்டுவது அவர்களது நோக்கமாயிருந்தது. தனித்தனியாகவும், கோத்திரம் கோத்திரமாகவும் அவர்கள் கருமமாற்றினர். கருநிறப்பாறையை அதன் மூலையில் நிலை நிறுத்தும் அளவுக்கு சுவர்கள் உயர்த்தப்பட்டு விட்டன. இதன் பின்னர் மிகவும் பயங்கரமானதொரு பிரச்சினை தலையெடுக்கலாயது. ஒவ்வொரு கோத்திரத்தாரும் தாமே அப்பாறையை அதற்குறிய இடத்தில் நிறுவவேண்டுமென உரிமை பாராட்டலாயினர். இப்பிரச்சினை நான்கு அல்லது ஐந்து நாட்களாகத் தொடர்ந்தது. கோத்திரங்கள் பலவும் வெவ்வேறு குழுக்களை அமைக்கவும், யுத்தமொன்றனை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் தொடங்கின. இந்நிலையில் மிகவும் முதியவராயிருந்த ஒருவர் ஓர் ஆலோசனையைத் தெரிவிக்கலானார் ; 
“ ஓ குறைஷி மக்களே! உங்களைப் பிளவு படுத்தி வைத்திருக்கும் இப்பிரச்சினையைத் தீர்க்க ஒரு மத்தியஸ்த்தரைத் தெரிந்து கொள்ளுங்கள். அவர் இப்பள்ளி வாசலின் வாயில் வழியாக உள் நுழையும் முதலாமவராகட்டும் ”. கஃபாவைச் சூழவுள்ள பிரதேசம் பள்ளிவாசல் என வழங்கப்பட்டது. அறபியில் மஸ்ஜித் வீழ்ந்து வணங்கும் ஓரிடமாகக் கொள்ளப்பட்டது. கீழே வீழ்ந்து, புனித இல்லத்தை நோக்கியவர்களாக, இறைவனை வணங்கி வழிபாடு செய்யும் வழக்கம், இப்றாஹீம் இஸ்மாயீல் ஆகியோரின் காலந்தொட்டே வழங்கி வந்தது.

அம்முதியவரின் ஆலோசனையை ஏற்று நடக்க அனைவரும் சம்மதித்தனர். பள்ளி வாசலுள் நுழையும் முதல் மனிதராக இருந்தவர் முஹம்மத். சில நாட்களாக வெளிச்சென்றிருந்த அவர் அப்போதுதான் திரும்பி வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டதுமே இக்கருமத்துக்குத் தகுதியானவர் வந்து விட்டாரென்ற சடுதியான உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டது. 

அவரது வருகை கோஷங்களினாலும் திருப்திகர எண்ணங்களினாலும் உவப்புடன் ஏற்கப்பட்டது. “ அல் அமீன் ” என்றனர் சிலர். “ அவரது முடிவினை நாம் ஏற்போம் - அவர் முஹம்மத் ” என்றனர் மற்றும் சிலர். பிரச்சினை அவர் முன் வைக்கப்பட்டதும் “ சால்வை ஒன்றனைக் கொண்டு வாருங்கள் ” என்றார் அவர். பின் அதனை நிலத்தில் விரித்து கரும்பாறையை அதன் மத்தியில் வைத்து, “ ஒவ்வொரு கோத்திரத்தாரும் சால்வையின் ஓரங்களைப் பிடித்துக் கொள்ளுங்கள் ” என்றார். பின் அதனை உயர்த்திப் பிடிக்கக் கூறிய அவர், சரியான உயரத்துக்கு வந்ததும், கல்லை எடுத்து உரிய இடத்தில் தனது கைகளினாலேயே பொருத்தினார். நிர்மாண வேலைகள் தொடர்ந்து, மேற்புறமும் கட்டி முடிக்கப்பட்டது.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment