தொடர்ந்து ஸிரியா செல்லும் வழியில், மைஸராவின் மனதில் நெஸ்டோரின் வாக்கு ஆழமாக பதியலாயது. என்றாலும் அவ்வார்த்தைகள் மைஸராவுக்குப் பெரும் ஆச்சரியங்களெதனையும் ஊட்டுவதாக இல்லை. ஏனெனில் தான் இதுவரை கண்டவர்கள் அனைவரிலும் முற்றும் வித்தியாசமான ஒருவருடனேயே பிரயாணம் செய்து வருவதனை முழு பிரயாணத்தின் போதும் மைஸராவால் உணர்ந்து கொள்ள முடிந்தது. திரும்பி வரும் வழியில் அவர் அவதானித்ததோர் அம்சம் இந்நம்பிக்கையை நன்கு வேரூன்றச் செய்தது. பல சந்தர்ப்பங்களில் பாலையின் வெம்மை, மிகவும் புதுமையானதொரு வகையில், துயருறுத்துவதாக அமையாமையை அனுபவித்து வந்த மைஸரா, ஒரு நாள் பகல் போது நெருங்குகையில் குறுகிய ஆனால் தெளிவானதொரு காட்சியைக் கண்டார். வானவர்களிருவர் சூரியனது கதிர்களினின்றும் முஹம்மதுக்கு நிழல் அளித்துக் கொண்டிருந்தனர்.

தமது பொருட்களின் விற்பனவு மூலம் கிடைத்த பணத்துக்கு ஸிரியாவின் சந்தையில் வாங்கிய பொருட்களோடு, மக்காவையடைந்ததும் கதீஜாவிடம் சென்றனர் இருவரும். தனது பிரயாணம் வர்த்தக விவகாரங்கள் என்பன குறித்து முஹம்மத் அளித்து வந்த விளக்கத்தை கதீஜா அமர்ந்திருந்து மிக அவதானமாகக் கேட்டு வந்தார். இந்த வர்த்தகப் பிரயாணம் கதீஜாவுக்கு அதிக லாபத்தை ஈட்டி தருவதாக இருந்தது. ஸிரியாவில் வாங்கப்பட்ட பொருட்களை மக்காவில் இரு மடங்கு விலைக்கு விற்றுக் கொள்ளக் கூடியதாயிருந்தது. எனினும் வர்த்தக லாப நஷ்டங்கள் ஏதும் அவரது சிந்தனையில் ஆழமாகப் பதியவில்லை. இளமையும், அழகும், கம்பீரமும், நேர்மையும் அருள் நிரம்பிய தோற்றமும் கொண்டவராயிருந்த தனது வர்த்தகப் பிரதிநிதியையே அவதானித்தவராக இருந்தார் அவர். முஹம்மத் இருபத்தைந்து வதுடையவராக இருந்தார். கதீஜாவின் சிந்தனையில் பல்வேறு எண்ணங்கள் எழலாயின. தான் இன்னமும் அழகு குன்றாதவராக இருப்பதனை அவர் உணர்ந்திருந்தார். ஆனால் தான் பதினைந்து வருடங்களால் மூத்தவர். இந்நிலையில் தன்னை மணந்து கொள்ள அவர் முன் வருவாரா?
முஹம்மத் சென்றதும் தனது தோழிகளுள் ஒருவரான நுபைஸாவைக் கலந்தாலோசித்தார் கதீஜா. அவர், கதீஜாவின் சார்பில் முஹம்மதை அண்மிப் பேசவும், இயலுமாயின் இருவரிடையேயும் திருமண பந்தம் ஒன்றனை ஏற்படுத்தவும் முயலுவதாகக் கூறினார். இந்நிலையில் மைஸரா கதீஜாவிடம் வந்து தனது அனுபவங்களைக் கூறலானார். வானவர் இருவரைத் தான் கண்டமை. போஸ்த்ரா மடத்து மதகுரு கூறியவை என்பனவற்றையும் எடுத்துரைத்தார். பின்னர் தனது ஒன்று விட்ட சகோதரர் வரகாஹ்விடம் சென்ற கதீஜா, மைஸரா கூறியவற்றை மீட்டுக் கூறினார். வரகாஹ் கூறினார்: “ இது உண்மையானால் கதீஜா! முஹம்மத் தான் எமது மக்களது இறைதூதர். ஓர் இறைதூதரின் வருகையை நீண்ட காலமாக நான் எதிப்பார்த்திருந்தேன். அவரது காலம் இப்போது நெருங்கி விட்டது ”. -(இ.இ 121)
இதே வேளை நுபைஸா முஹம்மதிடம் சென்று இன்னும் ஏன் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என வினவினார். “ திருமணம் செய்யப் போதிய வசதியுள்ளவனாக நான் இல்லை ” என்றார் அவர். “ உமக்குத் தேவையானவற்றைத் தந்து, செல்வம், மதிப்பு, கெளரவம் அனைத்தும் நிறைந்த ஒருவரையும் துணையாகத் தந்தால் மணஞ் செய்ய விரும்புவீரா? ” என்றார் நுபைஸா. “ அது யார்? ” என்றார் அவர். “ கதீஜா ” . “ அவ்வாறானதொரு திருமணம் எப்படி எனதாகலாம்? ” “ அதை என் பொறுப்பில் விட்டு விடும் ” என்றார் நுபைஸா. “ என்னைப் பொறுத்த அளவில் - நான் எனது சம்மதத்தை தெரிவிக்கின்றேன் ”. என்றார் முஹம்மத். ( இ.ஸா 1/1 : 84 )
பின்னர் கதீஜா, முஹம்மதைத் தனது இல்லத்துக்கு வரும்படி சேதியனுப்பினார். அவர் வந்ததும் கதீஜா கூறினார் : “ எனது மாமன் மகனே! உமது உறவின் காரணமாக, உமது நடுநிலைமைக்காக, மக்களிடையே இதற்கோ அதற்கோ என எதனையும் சாராதிருப்பதற்காக, நான் உம்மை விரும்புகின்றேன். உமது நேர்மை, நம்பிக்கை, குணங்களின் அழகு, வாக்கின் உண்மை என்பனவற்றுக்காக நான் உம்மை நேசிக்கின்றேன் ”. - ( இ.இ. 120 )
மணத்துக்கான சம்மதம் தெரிவிக்கப்பட்ட பின்னர், முஹம்மத் இது குறித்துத் தனது பெரிய தந்தையாரிடமும், கதீஜா தனது மாமனாரும் அஸத்தின் மகனுமான அம்ருடனும் கதைப்பதாக ஏற்பாடாயிற்று. கதீஜாவின் தந்தையார் குவைலித் ஏற்கனவே காலஞ்சென்றிருந்தார். இளையவராக இருந்தாலும் ஹம்ஸாவையே இச்சந்தர்ப்பத்தில் ஹாஷிமிகள் தமது பிரதிநிதியாக அனுப்பி வைத்தனர். அஸத் வம்சத்தவருடன் மிக நெருங்கிய தொடர்பு அவர்களிடையிலெல்லாம் ஹம்ஸாவுக்கே இருந்தது. அவரது உடன் பிறந்த சகோதரி ஸபிய்யா அண்மையில்தான் கதீஜாவின் சகோதரர் அவ்வாம் என்பவரை மணந்திருந்தார். எனவே ஹம்ஸா தனது சிறிய தந்தையார் மகனுடன் அம்ரிடம் சென்று கதீஜாவை மணஞ்செய்து கொள்ள வேண்டினார். அவர்களிடையே ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன்படி முஹம்மத், கதீஜாவுக்கு வரதட்சணையாக இருபது பெண் ஒட்டகங்களைக் கொடுக்க வேண்டும்.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
No comments:
Post a Comment