Thursday, 15 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

யானை வருடம்…(தொடர்…)

கஃபாவை அழிக்கவென மக்காவில் புகுவதும், கருமம் முடிய, வந்த வழியே ஸன்ஆவை நோக்கித் திரும்பி புறப்படுவதுமே அடுத்த நாள் காலைக்குறிய அப்ரஹாவின் திட்டமாக இருந்தது.

யானை பூரண அலங்காரங்களுடன் படையினரின் முன்னால் கொண்டு செல்லப்பட்டு மக்காவை நோக்கி நிறுத்தப்பட்டது.

ஆரம்பத்திலிருந்தே தயக்கம் நிறைந்தவராக இருந்த நுபைல், படையினரின் முன்னால் உனைஸுடனேயே பெரிதும் வந்து கொண்டிருந்தார். அதனால் யானையைக் கட்டுப்படுத்தும் சொற்கள் பலவற்றையும் அவரால் கிரகித்துக் கொள்ள முடிந்தது. படை முன்னேறிச் செல்வதற்கான கட்டளையை எதிர் நோக்கி உனைஸ் திரும்பியிருந்த சந்தர்ப்பத்தில் நுபைல், யானையின் காதொன்றைப் பிடித்து, அதனை முழந்தாலிட்டுத் தாழ்ந்து நிற்கும்படி அமைதியான, தீர்க்கமான கட்டளையொன்றனை இட்டார். 

யானை மெதுவாக நிலத்தில் அமர்ந்து கொண்டமை அப்ரஹாவையும் படையினரையும் வியப்புக்குள்ளாக்கியது. உனைஸ் எழுந்து நிற்கும்படி யானையைப் பணித்தார். ஆனால் எவ்வாறோ நுபைலின் ஆணை ஆணித்தரமாகப் பதிந்து போனதால் யானையை எவ்விதத்திலும் அசைக்க முடியவில்லை. அதனை எழுப்ப எடுத்துக் கொண்ட முயற்சிகளெல்லாம் வீணாயின. இரும்புப் பாளங்களினால் அதன் தலையில் அடித்தனர். இரும்புக் கொக்கிகளால் வயிற்றில் தாக்கினர். யானை அசைவதாக இல்லை; மலைபோல் அமர்ந்திருந்தது.

பின்னர் முழுப் படையினரும் யெமன் நோக்கித் திரும்பிச் சில அடிகள் முன் வைத்துப் பார்த்தனர். உடனே யானை எழுந்து நின்று அவர்களைப் பின் தொடர்ந்தது. நம்பிக்கையுடன் படையினர் மீண்டும் திரும்பினர்; யானையும் திரும்பியது. எனினும் மக்காவை நோக்கியவுடன் மீண்டும் அமர்ந்து கொண்டது.

மேலும் ஓர் அடியேனும் முன் செல்லக் கூடாது என்பதற்கு இது நல்லதொரு முன்னறிவிப்பாக இருந்தது. எனினும் தான் கட்டியெழுப்பிய புதிய ஆலயத்தின் மூலம் தன் உள்ளத்தில் வளர்த்துக் கொண்டிருந்த சுய நம்பிக்கையும், அதன் பகையாலயத்தை அழிப்பதில் கொண்டிருந்த தீவிரமும் இணைந்து அப்ரஹாவை மதி மழுங்கச் செய்திருந்தன. 

அத்துடன் திரும்பியிருந்தால் அவர்கள் பெரும் அழிவிலிருந்து தப்பியிருக்கலாம். எனினும் காலம் கடந்து விட்டது.

சடுதியாக சில சம்பவங்கள் நிகழ்ந்தன…

மேற்கு வானம் கருமையாகியது. புதுமையானதோர் ஒலியெழுந்தது. கடல் மார்க்கத்திலிருந்து வந்து தம்மைச் சூழ்ந்து கொண்ட இருளில் அவர்கள் மூழ்கியிருக்க, அவ்வொலியும் அதிகரித்துச் செல்லலாயிற்று. படையினரின் பார்வைக்கெட்டிய தூரம் வரையில் ஆகாயம் பறவைகளால் நிரம்பியிருந்தது. அப்பறவைகள் மிக வேகமாகப் பறந்து வந்தன எனப் பிழைத்தவர்கள் கூறினார்கள். சொண்டிலும் இரு பாதங்களிலுமாக மூன்று சிறு கூழாங்கற்களை அவை எடுத்து வந்தன. படையினருக்கு மேலாக அவை அங்குமிங்குமாகப் பறந்து திரிந்து கற்களை எறியலாயின. 

அதி வேகமாக வந்து வீழ்ந்த அக்கற்களின் தாக்கத்தினால் யுத்த மேலங்கிகள் கூட ஊடறுக்கப்படலாயின. ஒவ்வொரு கல்லும் யாரையேனும் தாக்கிக் கொல்லவே செய்தது. எந்தவோர் உடம்பிலும் ஒரு கல் பட்டதும் சதை அழுகத் தொடங்கியது. சிலர் உடனடியாகவும், சிலர் படிப்படியாகவும் அழுகின உடம்பினராயினர். அனைவருமே தாக்குதலுக்குள்ளாக வில்லை. தப்பிக் கொண்டவர்களுள் உனைஸும் ஒருவர். யானையும் தப்பியது. ஆனால் எல்லோருமே அச்சத்தின் பாற்பட்டனர். படையில் பெரும்பகுதி சீர் குலைந்த நிலையில் ஸன்ஆவுக்கு திரும்பியது. பலர் திரும்பிச் செல்லும் வழியில் மாண்டனர். அப்ரஹா உட்பட மேலும் பலர் ஸன்ஆவைச் சென்றடைந்ததும் இறந்து பட்டனர். சிலர் ஹிஜாஸிலேயே தங்கி இருந்து ஆடு மேய்த்தல் முதலான தொழில்களைச் செய்யலாயினர்.

படையினர் யானையின் பிரச்சினையோடு ஈடுபட்டிருந்த சமயம் பார்த்து, நுபைல், யாருமறியாமல் தப்பிச் சென்று மக்காவைச் சூழவுள்ள மலைகளைத் தானும் அடைந்துக் கொண்டார்.

அன்று முதல், அறாபியர்கள், குறைஷியரை ‘இறைவனின் மக்கள்’ என்றே வழங்கலாயினர். முன்னைவிட கெளரவமாகவும் மதிக்கப் பட்டனர். ஏனெனில் அவர்களது பிரார்த்தனையை அங்கீகரித்து இறைவன் கஃபாவை அழிவிலிருந்தும் காப்பாற்றிவிட்டன். அவர்களது கெளரவம் மேலும் உயர, இதனோடு ஓரளவு தொடர்பு கொண்ட மற்றுமொரு சம்பவமும் இதே யானை வருடத்தின் போது நிகழ்ந்தது.


பறவைகள் மூலமான அற்புதம் நிகழ்ந்த போது அப்த்-அல்-முத்தலிபின் மகன் அப்த்-அல்லாஹ் மக்காவில் இருக்கவில்லை. வர்த்தகக் குழுவொன்றுடன் ஸிரிய, பலஸ்தீன் பிரதேசங்களுக்குச் சென்றிருந்தார். வரும் வழியில் யத்ரிபை அடைந்ததும் தனது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் சுகவீனமுற்றார். வர்த்தகக் கூட்டம் அப்த்-அல்லாஹ் இல்லாமலேயே மக்காவையடைந்தது. அவரது சுகவீனம் குறித்து அறிந்து கொண்டதும் அப்த்-அல்-முத்தலிப் தனது மூத்த மகன் ஹாரிதை, யத்ரிப் நோக்கி அனுப்பி அப்த்-அல்லாஹ் பிரயாணம் செய்யத் தகுதியானவரானவுடனேயே அவரை அழைத்து வரும்படி கூறினார். யத்ரிபில் தனது ஒன்றுவிட்ட சகோதரர்களது வீட்டையடைந்ததும் ஹாரித் கூறிய வந்தனோபசார வார்த்தைக்குப் பதிலாகக் கிட்டியது ஆறுதல் வார்த்தைகளே. உடனே தன் சகோதரர் மரணமடைந்து விட்டாரென்பதை ஹாரித் உணர்ந்து கொண்டார்.

ஹாரித் திரும்பி வந்ததும் மக்கா நகரம் முழுவதுமே துயரில் மூழ்கியது. ஆமினாவுக்கு இருந்த ஒரே ஆறுதல், தனது இறந்து போன கணவரின் இன்னும் பிறக்காத குழந்தை மட்டுமே. பிரசவம் சமீபித்து வந்த நிலையில் அவரது ஆறுதல் மிகுந்து வந்தது. தன்னுள் ஏதோ ஓர் ஒளியிருப்பதை அவர் உணர்ந்தார். ஒரு முறை தன்னின்றெழுந்த அவ்வொளிப் பிரவாகத்தில் ஸிரியாவின் போஸ்த்ரா மாளிகைகளையெல்லம் காண முடிந்தது. 

அத்தோடு ஓர் அசரீரியும் கேட்டது: “தன் மக்களது எஜமானனை நீர் உமது கர்ப்பத்தில் சுமந்திருக்கின்றீர். குழந்தைப் பிறந்ததும் கூறுவீராக; ‘தீங்கிழைப்போர் அனைவரினதும் தீங்கிழிருந்தும் பாதுகாப்பாக ஒரே இறைவனது பொறுப்பிலேயே இவரை விடுகின்றேன். அத்தோடு குழந்தைக்கு முஹம்மத் எனப் பெயர் சூட்டுவீராக’- (இப்னு இஸ்ஹாக் 102)

வாரங்கள் சில கழிய, குழந்தை பிறந்தது. தனது சிறிய தந்தையார் வீட்டிலிருந்த ஆமினா, அவரது பேரனை வந்து பார்க்கும்படி அப்த்-அல்-முத்தலிபுக்குச் சேதியனுப்பினார்.
குழந்தையைத் தனது கரங்களில் ஏந்தியவராகப் புனிதஸ்தலத்தையடைந்து, கஃபாவினுள் நுழைந்து, இறைவனுக்கு நன்றிக் கூறித் துதி செய்தார் அப்த்-அல்-முத்தலிப். பின்னர் குழந்தையைத் தாயாரிடம் கொண்டு போகும் வழியில் தனது சொந்த வீட்டுக்குச் சென்றார். 

ஆமினாவின் ஒன்று விட்ட சகோதரி ஹாலா மூலமாக அவருக்கும் விரைவிலேயே ஒரு குழந்தை கிடைக்கவிருந்தது. 
அப்போதைய நிலையில் அவரது இளைய மகனாக இருந்தவர் மூன்றே வயதான அப்பாஸ். வீட்டு வாசலில் அப்பாஸ் நின்றிருந்தார். “உமது சகோதரன் இவர்; அவரை முத்தமிடும்" எனக் கூறிக் குழந்தையை நீட்டினார் அப்த்-அல்-முத்தலிப். அப்பாஸ் குழந்தையை முத்தமிட்டார்.

இன்னும் வரும்…

- இறைவன் நாடினால்

No comments:

Post a Comment