யாத்திரிகர்கள் வீடு திரும்பிய உடனேயே தனக்கு கிட்டிய நற்செய்தியுடன் ஹாரிதா தன் சகோதரர் கஅப்பைச் சென்று கண்டு இருவருமாக மக்காவுக்குப் புறப்பட்டனர்.
முஹம்மதிடம் சென்ற அவர்கள் எந்த ஒரு விலைக்காயினும் ஈடாக ஸைதை விடுவிக்கும்படி மிகப் பணிவுடன் வேண்டி நின்றார்கள். “ அவரே தெரிவு செய்யட்டும் ” என்றார் முஹம்மத். “ அவர் உங்களைத் தேர்ந்தால் எவ்விதப் பணயமும் இன்றி அவரை நீங்கள் கூட்டிச் செல்லலாம்; அவ்வாறின்றி அவர் என்னைத் தேர்ந்தாலோ! - என்னைத் தேர்ந்து கொண்டவருக்கு மேலாக எவரையும் நிலை நிறுத்தும் மனிதனல்ல நான் ” எனக் கூறிய அவர், ஸைதை அழைத்து, இம்மனிதர்கள் இருவரையும் அவர் அறிவாரா எனக் கேட்டார். “ இவர் எனது தந்தை. மற்றவர் எனது சிறிய தந்தை ” என்றார் ஸைத். “ என்னை உமக்குத் தெரியும். உம்முடன் நான் கொண்டுள்ள உறவினையும் நீர் அறிவீர். என்னிலும் அவர்களிலும் விரும்பியவரை நீரே தேர்ந்து கொள்வீராக ” என்றார் முஹம்மத். ஸைத் ஏற்கெனவே தேர்ந்திருந்தார். “ உமக்குப் பிரதிநிதியாக நான் எந்தவொரு மனிதனையும் தேர்ந்து கொள்ள மாட்டேன். எனக்குத் தந்தையாகவும் தாயாகவும் விளங்குபவர் நீரே! ” என்றார் அவர். “ தொலைந்து போவாயாக ஓ ஸைத்! சுதந்திரம், தந்தை, சிறிய தந்தை, குடும்பம் அனைத்துக்கும் மேலாக அடிமைத்தனத்தைத்தான் நீ விரும்புவாயா? ” என்றனர் கல்ப் கோத்திரத்தார். “ அவ்வாறேதான். இந்த மனிதரிடம் நான் கண்டு கொண்டவைகளின் காரணமாக, இவருக்கு மேலாக என்னால் எவரையும் தேர்ந்து கொள்ள முடியாது. ” என்றார் ஸைத்.

மேற்கொண்டு வார்த்தைகள் வளராமல் முஹம்மத், மூவரையும் கஃபாவுக்கு அழைத்து சென்றார். ஹிஜ்ரின் மீது நின்றவராக உரத்த குரலில் அவர் கூறினார் : “ ஸைத் எனது மகன் என்பதற்கு இங்கு குழுமியிருக்கும் அனைவரும் சாட்சி பகர்வீர்களாக! அவரது வாரிசு நான் - அவர் என்னுடையவர் ” - ( இ.ஸா. 3/1:28 )
தந்தையும் சிறிய தந்தையும் தம் எண்ணங்கள் நிறைவேறாதவர்களாகவே திரும்பிச் சென்றனர். எனினும் தமது கோத்திரத்தாருக்கு அவர்கள் கூறவேண்டியிருந்த கதை மிகவும் மேன்மையானதொன்றாகவே இருந்தது. முஹம்மதுக்கும் தமது மகனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பந்தம் குறித்து அவர்கள் ஆறுதலடைந்தார்கள். சுதந்திரவானாக, கெளரவமானவராக, புனித ஆலயத்தின் மக்களிடையே உயர்வாக மதிக்கப்படுபவர்களுள் ஒருவராக ஸைதைக் கண்ட அவர்கள், திருப்தியுற்றவர்களாக, மனத்தில் சஞ்சலங்கள் அற்றவர்களாகத் திரும்பி செல்ல முடிந்தது. ஸைதின் அப்போதைய நிலையினால், பின்னைய காலங்களில் அவரது சகோதரர்களும் உறவினர்களும் பயன்பெறலாம் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது.
முஹம்மதின் வீட்டுக்கு அடிக்கடி வருபவர்களில் ஒருவர் ஸபிய்யா. அவர் இப்போது கதீஜாவின் சகோதரரின் மனைவி; முஹம்மதின் இளைய சிறிய தாயார். அவர் முஹம்மதிலும் இளையவராக இருந்தார். தனது சிறிய மகனான ஸுபைரையும் அழைத்து வருவார் அவர். தனது மூத்த சகோதரனது பெயரையே மகனுக்கும் சூட்டியிருந்தார் ஸபிய்யா. ஸுபைர் மிக இளம் வயதிலேயே முஹம்மதின் புதல்வியருடன் நன்கு பழகியிருந்தார். ஸபிய்யாவுடன் அவரது பணிப்பெண்ணாயிருந்த ஸல்மாவும் வருவார். கதீஜாவின் குழந்தைகள் அனைவருக்கும் பிரசவம் பார்த்தவர் ஸல்மா. எனவே குடும்பத்தில் ஒருவராகவே அவரும் கருதப்பட்டு வந்தார்.
வருடங்கள் பல கழிய, முஹம்மதின் செவிலித்தாயாரான ஹலீமா இடைக்கிடை வந்து செல்லலானார். அவரிடம் கதீஜா மிகத் தாராண்மையுடன் நடந்து கொண்டார். இந்த விஜயங்களில் ஒன்றின் போது, மிகக் கொடியதும் பரந்ததுமானதொரு வரட்சியின் காரணமாக ஹலீமாவின் மந்தைகள் அனைத்தும் மிக வேகமாக குறைந்து சென்று கொண்டிருந்தன. கதீஜா அவருக்கு நாற்பது செம்மறியாடுகளையும் ஒரு ஹவ்தா ஒட்டகத்தையும் அன்பளிப்புச் செய்தார். - ( இ.ஸா. 1/1 : 71 ) ஹிஜாஸ் பகுதியில் பஞ்ச நிலையொன்றனை உருவாக்குவதாயமைந்த இந்த வரட்சிக்காலம்தான், முஹம்மதின் குடும்பத்தில் மற்றுமொரு முக்கியமான அங்கத்தவரை இணைத்து விடுவதாக அமைந்தது.
தன்னால் பராமரிக்கக் கூடிய தொகையினருக்கும் கூடிய தொகையினரான குழந்தைகளைக் கொண்டிருந்தார் அபூதாலிப். பஞ்ச காலம் அவரை மேலும் கஷ்டத்துக்குள்ளாக்கியது. இந்நிலையில் தன்னாலியன்ற உதவியை அவருக்கு செய்ய வேண்டும் எனக் கருதினார் முஹம்மத். அவரது பெரிய தந்தையருள் ஒருவர் அபூலஹப், போதிய செல்வம் படைத்தவராக இருந்தார் அவர். எனினும் அவர் தன் குடும்பத்தவரிடமிருந்து விலகியவராகவே காணப்பட்டார். இதற்கொரு காரணம் அவருக்குக் கூடப் பிறந்த சகோதரர்கள் ஒருவரும் இல்லாதிருந்தமையாகும். தனது தாயாருக்கு ஒரே குழந்தையாக இருந்தார் அபூலஹப். இந்நிலையில் முஹம்மத், வெற்றிகரமான ஒரு வர்த்தகரும், தன்னுடன் ஒன்றாகவே வளர்ந்தவரும், தனக்கு மிகவும் நெருங்கியவருமான அப்பாஸோடு கலந்து கொள்ள விரும்பினார். அப்பாஸின் மனைவி உம்ம்-அல்-பத்ல் கூட முஹம்மதுடன் மிகவும் நெருங்கியவராகவும், அவர் தமதில்லத்துக்கு வரும்போதெல்லாம் மன நிறைவுடன் வரவேற்பவராகவும் விளங்கினார். அவர்களிடம் சென்று, இரு குடும்பத்தாரும் அபூதாலிபின் மக்களுள் இருவரை எடுத்து, அவரது நிலைமை திருப்திகரமானதாக ஆகும் வரை போஷித்து வளர்த்தாலென்ன என ஆலோசனை கேட்டார் முஹம்மத். அவர்கள் உடனே அதற்குச் சம்மதித்தனர். பின்னர் அவர்கள் அபூதாலிபிடம் சென்று தம் கருத்திலுள்ளதைத் தெரிவித்தார்கள். “ நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள், ஆனால் அகீலையும் தாலிபையும் என்னிடம் விட்டு விடுங்கள் ” என்றார் அவர். ஜஅபர் இப்போது பதினைந்து வயதினராகி இனிமேலும் குடும்பத்தின் இளையவராக இல்லாதிருந்தார். அவரது தாயார் பாத்திமா பின்னரும் மற்றுமொரு புதல்வரை அபூதாலிபுக்கு அளித்திருந்தார். சுமார் பத்து வருடங்கள் இளையவரான அவர் அலீ எனப் பெயரிடப்பட்டிருந்தார். அப்பாஸ் ஜஅபரைப் பொறுப்பேற்க, அலீயை முஹம்மத் பொறுப்பேற்றார். இந்த கால அளவிலேயே கதீஜா தனது கடைசிக் குழந்தையும் மகனுமான அப்த்-அல்லாஹ்வைப் பெற்றிருந்தார். ஆனால் அக்குழந்தையோ காஸிமைவிடக் குறைந்த வயதிலேயே மரணமாய் விட்டது. ஒரு வகையில் அக்குழந்தையின் இடத்தை அலீ நிரப்பினார். தனது உடன் பிறவாச் சகோதரியருக்கு ஒரு சகோதரனாகவே அலீ வளர்ந்து வந்தார். ருகையா, உம்ம் குல்தூம், ஆகியோரின் சம வயதினராகவும், ஸைனபை விடச் சிறிது இளையவராகவும், பாத்திமாவுக்குச் சிறிது மூத்தவராகவும் விளங்கினார் அலீ. இந்த ஐவரும் ஸைதுடன் இணைந்து, முஹம்மதின் குடும்ப அமைப்பின் நெருங்கிய அங்கத்தவர்களாயிருந்தனர்.
தன் உறவினர்களுள் மேலும் பலருடனும் கூட நெருக்கம் கொண்டிருந்தார் முஹம்மத். அவரது வாழ்க்கையின் நிகழ்வுகளில் அவர்களும் பெரிய அல்லது சிறிய பங்கினை வகித்தனர்.
இன்னும் வரும்…
இறைவன் நாடினால்,
No comments:
Post a Comment