Thursday, 15 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

பாலை…(தொடர்…)

குழந்தையின் தாய் ஆமினாவோ வறுமையில் வாழ்பவர். குழந்தையோ, செல்வமெதனையும் சேகரித்து வைக்கும் வயதை அடையுமுன்னமேயே இறந்து போன ஒரு தந்தையின் மகன்.

அப்த்-அல்லாஹ் தன் மகனுக்கு விட்டுச் சென்றவை ஐந்து ஒட்டகங்கள். சிறியதோர் ஆட்டுமந்தை. ஓர் அடிமைப் பெண். உண்மையிலேயே அப்த்-அல்லாஹ்வின் மகன் பெரியதொரு குடும்பத்தில் உதித்தவர்தான். ஆனால் அந்த வருடம் இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆக வறுமையான குழந்தையாகவே அவர் விளங்கினார்.

மறுபுறம், செவிலித்தாய் - தந்தையர் செல்வந்தர்களாகவே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படாவிடினும் அவர்கள் வறுமையில் வாடாதவர்களாக இருக்க வெண்டும் என்று நிச்சயம் எதிர்பார்க்கப்பட்டனர்.


ஹலிமாவும் கணவரும் ஏனையோரைப் பார்க்கிலும் வறியவர்களென்பது உறுதியாக இருந்தது. ஹலீமாவுக்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையில் தெரிவு நடந்தால், அடுத்தவளே எப்போதும் விரும்பப்பட்டாள். ஹலீமாவைத் தவிர்த்து, பனீ ஸஅத் பெண்கள் அனைவருமே ஒவ்வொரு குழந்தையைப் பெற்றுக்கொண்டனர். அதிக ஏழையாயிருந்த செவிலிக்கு மட்டுமே ஒரு குழந்தையில்லை; அதிக ஏழையாயிருந்த குழந்தைக்கு மட்டுமே ஒரு செவிலி இல்லை.

ஹலிமா கூறினார் : “ மக்காவை விட்டு நாம் நீங்க முடிவு செய்ததும் என் கணவரிடம் நான் கூறினேன். ‘ குழந்தை ஒன்றை பெற்றுக் கொள்ளாது எனது தோழியருடன் திரும்பிச் செல்ல நான் விரும்பவில்லை. அந்த அனாதைக் குழந்தையை நான் கொண்டு செல்வேன் ’. ‘ அப்படியே செய்யலாம். அக்குழந்தை மூலம் இறைவன் எங்களுக்கு அருள் செய்யலாம் ’ - என்றார் அவர். 

வேறு ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியாமற் போன காரணத்துக்காகவே நான் சென்று அக்குழந்தையை எடுத்தேன். எங்களது கழுதையும் ஒட்டகமும் விடப்பட்டிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தோம். எனது நெஞ்ஞோடு அக்குழந்தையை அணைத்துக் கொண்டதுதான் தாமதம். அதன் பசியைப் போக்க எனது மார்பகத்தில் பால் நிரம்பச் சுரக்கத் தொடங்கியது. குழந்தை வயிறு நிரம்பக் குடித்ததும், எனது மகனும் கூட பசிதீரப் பால் அருந்தினார். பின்னர் இருவரும் கண்ணுறங்கினார்கள். என் கணவர் எமது முதிய ஒட்டகையிடம் சென்றார். அங்கோ! அதன் பால் மடிகள் நிரம்பியிருந்தன. அதன் பாலைக் கறந்து அவர் குடித்து எனக்கும் தந்தார். இனிமேலும் குடிக்க முடியாது என்ற நிலைவரை நாம் இருவரும் ஒட்டகப்பால் அருந்தினோம். பசியும் முற்றாக நீங்கியது. மிகச்சிறந்ததோர் இரவினை நாம் கழித்தோம். காலையில் என் கணவர் ‘ ஓ ஹலீமா! இறைவன் ஆணையாக நீர் கொண்டு வந்திருப்பது ஆசீர்வதிக்கப்பட்ட ஓர் உயிரே! ’ என்றார். ‘ அவ்வாறே நானும் நம்புகிறேன் ’ என்றேன். பின்னர் எமது பிரயாணத்தைத் தொடங்கினோம். எனது கழுதையின் மீது நானும் அக்குழந்தையும் அமர்ந்து சென்றோம். எமது கழுதை எல்லோரையும் முந்திச் சென்றது. உடன் வந்திருந்தோரது கழுதைகளில் எதுவும் எமது கழுதையோடு சமமாகச் செல்ல முடியவில்லை. என் தோழியர், ‘ ஓ நிறுத்தும்! நாம் வரும் வரை நில்லும்! நீர் வந்த அதே கழுதைதானே இது? ’ என்றார்கள். ‘ நிச்சயமாக அதே கழுதைதான் ’ என்றேன். ‘ அதற்கு ஏதோ ஓர் அற்புதம் நடந்திருக்கிறது ’ என்றார்கள் அவர்கள். 


“ பனீஸஅத் பகுதியில் எமது கூடாரத்தை நாம் அடைந்தோம். அப்பிரதேசத்தின் அப்போதைய வரட்சி இறைவனின் முழு உலகினது எந்தப் பிரதேசத்திலும் இருந்திருக்காது. புதிய வளர்ப்பு மகனை நாங்கள் கொண்டு வந்ததன் பின்னர், எனது மந்தைகள் ஒவ்வொரு மாலையிலும் நன்கு மேய்ந்தனவாக, பால் நிரம்பப்பெற்று வருவனவாயிருந்தன. நாம் நன்றாகப் பால் குடித்தோம். எம் அயலாருக்கோ ஒரு சொட்டுப் பால் கூட கிடைப்பதாக இல்லை. எனது இடையனைக் குறிப்பிட்டு அவர்கள் தம் இடையர்களுக்குக் கூறுவார்கள்: ‘ நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அவன் மேய்க்கும் இடங்களில் நீங்களும் மந்தைகளை மேய விடுங்கள் ’ . 
இருந்தும் கூட அவர்களது மந்தைகள் பசியோடே திரும்பின. பால் கரப்பனவாக அவை இல்லை. எனது மந்தையோ நன்கு மேய்ந்து கூடியளவு பாலைத்தந்தன. இறைவன் தந்த இந்த அருட்கொடைகளை அக்குழந்தை இரண்டு வயதாகும் வரை நாம் நன்கு அனுபவித்தோம். பின்னர் அக்குழந்தையை பால் குடி மறக்கச் செய்தேன் ”.- (இப்னு இஸ்ஹாக் 105)


“ அவர் நன்கு வளர்ச்சியுற்றார். ஏனைய குழந்தைகள் எவரும் அவரது வளர்ச்சியோடு ஒப்பிட முடியாதவர்களாயிருந்தனர். இரண்டு வயதை அடைந்து நல்லதொரு சிறுவனாக அவர் அமைந்ததன் பின்னர் அவரது தாயாரிடம் அவரைக் கொண்டு சென்றோம். என்றாலும் அவர் எமதில்லத்துக்குக் கொண்டு வந்த அருளின் காரணமாக அவர் தொடர்ந்தும் எம்மிடம் இருப்பதையே நாம் விரும்பினோம். எனவே நான் அவரது தாயாரிடம் ‘ எனது இச்சிறிய மகன் நன்கு வளரும் வரை என்னிடமே இருக்கட்டும், மக்காவின் தொற்று நோய்களால் அவர் பாதிக்கப் படலாமல்லவா? ’ என்றேன்.
குழந்தையை எம்மிடம் தரும் வரை வற்புறுத்தி நின்று, மீண்டும் எமது வீட்டுக்கே அவரைக் கொணர்ந்தோம். ”


“ திரும்ப வந்து பல மாதங்கள் கழிந்த பின்னர், ஒரு நாள் எமது கூடாரங்களின் பின்னால் அவரும், அவரது சகோதரரும் சில செம்மறியாடுகளோடு இருந்த போது, அவரது சகோதரர் எம்மிடம் ஓடி வந்து ‘ அந்தோ எனது குறைஷிய சகோதரன்! அவரை வெள்ளையாடை உடுத்திய இருவர் வந்து, கீழே படுக்கச் செய்து, நெஞ்சைப் பிளந்து தமது கைகளால் அதனை அசைத்துக் கொண்டிருக்கிறார்கள் ’ என்றார். உடனே நானும் கணவரும் ஓடிச்சென்று பார்த்தோம். அவர் முகம் சோர்ந்து காணப்பட்டது. அவரை எம்மோடணைத்து ‘ மகனே உனக்கு என்ன நடந்தது? ’வெள்ளையாடை உடுத்திய இருவர் என்னிடம் வந்தார்கள். என்னைத் தரையில் படுக்கச் செய்து, நெஞ்சைப் பிளந்து, அதனுள் எதனையோ தேடினார்கள். என்னவென்று நான் அறியேன் ’ என்றார் அவர். ”


ஹலிமாவும் ஹாரிதும் சுற்று முற்றும் தேடிப்பார்த்தார்கள். அம்மனிதர்கள் வந்து சென்ற அடையாளம் ஏதும் இல்லை. இரு குழந்தைகளும் கூறியவற்றுக்கு ஆதாரமாக இரத்தமோ காயங்களோ கூட காணப்படவில்லை. எவ்வளவுதான் சிறுவர்களை விசாரித்தபோதும் அவர்கள் கூறியவற்றில் மாற்றங்களில்லை. தமது அன்புக்குரிய வளர்ப்பு மகனின் மார்பில் கீறல் அடையாளமெதுவுமோ, அழகான அவரது உடம்பில் எந்த ஒரு குறையுமோ தென்படவில்லை. 

அவரது உடம்பில் காணப்பட்ட விசேட அம்சம் ஒன்றே ஒன்றுதான். அவரது முதுகில், இரண்டு தோள்களுக்குமிடையில் காணப்பட்ட ஒரு அடையாளமே அது. தசை சிறிதே உயர்ந்து, முட்டை வடிவினதாகக் காணப்பட்டது. எனினும் அது அவரது பிறப்பிலிருந்தே காணப்பட்ட ஓர் அடையாளமே.


பின்னைய காலங்களில் அதே சிறுவரால் அச்சம்பவத்தை விபரித்து கூற முடிந்தது : “ இரண்டு மனிதர்கள் வெள்ளையாடை அணிந்தவர்களாக என்னிடம் வந்தார்கள். அவர்களிடம் தங்கத்தாலான ஒரு பாத்திரம் வெண்பனி நிறைந்து காணப்பட்டது. என்னை கீழே சாய்த்துப் பிடித்து, நெஞ்சைப்பிளந்து எனது இதயத்தை வெளியே எடுத்தார்கள், அதனையும் அவர்கள் பிளந்து, அதிலிருந்து கருப்பு நிறக்கட்டியொன்றனை எடுத்து வெளியே எறிந்தார்கள். பின்னர் எனது இதயத்தையும் நெஞ்சையும் பனியினால் கழுவினார்கள். ” - (முஹம்மத்-இப்ன்-ஸஅத், அத் தபகாத் அல்-கபீர் 1/1 96, லெய்டன் பதிப்பு)
அவர் மேலும் கூறினார் : “ ஆதமுடைய மக்கள் அனைவரையும், அவர்கள் தாய்மார் ஈன்றவுடன் ஷைத்தான் தொடுகின்றான் - மரியத்தையும் அவரது மகனையும் தவிர ” . - (முஹம்மத் இப்ன் இஸ்மாயீல் அல் - புகாரி 60:54)


இன்னும் வரும்…

- இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment