Monday, 26 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


திருமண எண்ணங்கள்


முஹம்மத் தனது இருபதாவது வயதைக் கடந்திருந்தார். காலஞ் செல்ல செல்ல, வர்த்தகத்துக்கென வெளிப் பிரதேசங்கட்குச் சென்று வந்த அவரது உறவினர் பலரும் அவரையும் உடன் அழைத்துச் செல்லலாயினர்.

ஒரு முறை பிரயாணம் செய்து கொள்ள இயலாவதாயிருந்த ஒரு வர்த்தகரது பொருட்கள் அனைத்தையும் இவரே பொறுப்பெடுத்துச் செல்ல வேண்டியேற்பட்டது. வெற்றிகரமானதொன்றாக அமைந்த அவ்வர்த்தகப் பிரயாணத்தின் பின்னர் அது போன்ற பொறுப்புகள் பல அவரை நாடி வரலாயின. இவற்றால் வாழ்க்கை வசதிகளும் கூடவே, திருமணம் செய்து கொள்ளக்கூடுய சாதகமும் உருவாகியது.




அப்போதைய நிலையில் அவரது பெரிய தந்தையாரும் பாதுகாவலருமான அபூதாலிபுக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். மூத்தவர் தாலிப், முஹம்மதின் வயதினராகவும். அகீல் பதின்மூன்று அல்லது பதினான்கு வயதுடையவராகவும் இருந்தனர். ஜஅபர் நான்கே வயதான சிறுவர். அழகும் புத்தி சாதுரியமும் மிக்க ஜஅபருடன் முஹம்மத் கொண்டிருந்த உறவு நெருங்கியதாயிருந்தது. தனது ஒன்று விட்ட சகோதரனது அன்புக்கு ஜஅபர் எப்போதும் பக்தி சிரத்தையுடனான மாறா மதிப்பை அளித்து வந்தார்.
அபூதாலிபுக்குப் புதல்வியரும் இருந்தனர். அவர்களுள் ஒருவர் திருமண வயதை எட்டியிருந்த பாசிதா. பின்னைய காலங்களில் உம்முஹானி என வழங்கப் பெற்றார் அவர். பாசிதாவுக்கும் தனக்குமிடையில் வளர்ந்து வந்த நெருங்கிய உறவின் காரணமாக, அவரை மணந்து கொள்ள அபூதாலிபிடம் அனுமதி வேண்டி நின்றார் முஹம்மத். ஆனால் தமது மகள் குறித்து அபூதாலிப் வேறு திட்டங்களிட்டிருந்தார். அவரது தாயின் சகோதரனது மகனும், மக்ஸூம் வம்சத்தவருமான ஹுபைரா, ஏற்கெனவே உம்முஹானியை மணக்க விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஹுபைரா போதிய செல்வம் படைத்தவராயிருந்ததோடு அபூதாலிபைப் போல ஒரு சிறந்த கவிஞராகவும் விளங்கினார். அத்தோடு மக்காவின் மக்ஸூம்களின் செல்வாக்கு உயர்ந்து செல்ல, ஹாஷிமிகளின் பலம் குன்றிச் சென்று கொண்டிருந்தது. அபூதாலிப் உம்முஹானியை ஹுபைராவுக்கே கொடுத்தார்.

தம்பி மகன் தன் உணர்வுகளை அபூதாலிபிடம் வெளியிட்டபோது அவர் வெறுமனே “ அவர்களது புத்திரிகளை எங்களுக்கு அளித்திருக்கிறார்கள் ” என்றார். சந்தேகமற, முஹம்மதின் தாயார் ஆமினாவையே அவர் நினைவு கூர்ந்தார். தொடர்ந்தும் அபூதாலிப் கூறினார்: “ பெருந்தன்மை வாய்ந்த மனிதனது கைம்மாறு பெருந்தன்மை பொருந்தியதாக இருக்க வேண்டும். ” எவ்வாறாயினும் அவரது பதில் திருப்தியளிப்பதாக இல்லை. முன்னமேயே அப்த்-அல்-முத்தலிப் மேலதிகமாகவே மக்ஸும்களுக்குக் கைம்மாறு செய்துள்ளார். அவரது இரு புதல்வியர் ஆதிகாவும் பர்ராவும் மக்ஸும் வம்சத்தில் மணஞ் செய்யப்பட்டிருந்தனர்.

என்றாலும் முஹம்மத் தான் இன்னும் மணஞ் செய்யத் தகுதி பெற்றவரல்லர் என்பதையே பெரிய தந்தையார் மிக அன்பாகவும் தாழ்மையாகவும் இவ்வாறு உணர்த்துவதாகக் கொண்டார். தன்னைப் பொறுத்த அளவில் அவ்வாறானதோர் முடிவுக்கே முஹம்மத் வரமுடிந்தது. எனினும் எதிர்ப்பார்த்திராத சில சம்பவங்களின் நிகழ்வு, அவருள் மனமாற்றத்தை ஏற்படுத்துவதாயது.


மக்காவின் மிகப் பிரபல்யம் வாய்ந்த வர்த்தகர்களுள் ஒருவர் ஒரு மாது. அஸத் கோத்திரத்து குவைலித் என்பாரின் மகளான அவரது பெயர் கதீஜா. கிறிஸ்தவரான வரகாஹ்வுக்கும், அவரது சகோதரி குதைலாவுக்கும் ஒன்று விட்ட சகோதரி இவர். அவர்களைப் போலவே ஹாஷிமின் மக்களது தூரத்துச் சோதரியாகவும் விளங்கினார். ஏற்கெனவே இரு முறை விவாகம் செய்திருந்த அவர், தனது இரண்டாம் கணவரதும் மரணத்தின் பின்னால், தனது சார்பில் வர்த்தகம் செய்ய யாரையேனும் அமர்த்திக் கொள்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இவ்வேளை மக்க நகர் முழுவதும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர், நேர்மையானவர் எனப் பிரபல்யம் பெற்றிருந்தார் முஹம்மத். பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தமது வர்த்தகப் பொருட்களை இவரது பொறுப்பில் விட்டவர்களது அனுபவங்களின் வார்த்தை வடிவமே அது. தனது குடும்பத்தவர்கள் மூலமாக முஹம்மத் குறித்து கதீஜாவும் நிறையக் கேள்விப்பட்டிருந்தார். தனது வர்த்தகப் பொருட்களை ஸிரியாவுக்குக் கொண்டு செல்லவென ஒரு நாள் அவருக்குச் செய்தியனுப்பினார் கதீஜா. இதுகாலவரை குறைஷிகளுள் எவருக்கும் கொடுத்துள்ள கொடுப்பனவுகளை விட இரு மடங்கு தருவதாகவும், பிரயாணத் துணையாகத் தன்னிடமிருந்த மைஸரா எனும் வாலிபரைத் தருவதாகவும் கூறினார் அவர்.
மைஸராவைத் துணையாகக் கொண்டு பொருட்களை எடுத்து வடக்கு நோக்கிச் சென்றார் முஹம்மத்.

ஸிரியாவின் தெற்கே போஸ்த்ராவை அடைந்ததும் நெஸ்டோர் எனும் மதகுருவின் மடத்துக்கண்மையில் இருந்த ஒரு மரத்தின் நிழலில் சிறிது ஓய்வு பெறத் தங்கினார்கள். பொதுவாகப் பிரயாணிகள் தங்கிச் செல்லும் இடங்கள் இலகுவில் மாற்றம் பெறுவதில்லையாதலால் சுமார் பதினைந்து வருடங்களின் முன்னர் போஸ்த்தராவினூடாகச் செல்லும்போது முஹம்மத் தனது பெரிய தந்தையாருடன் தங்கிச் சென்ற அதே மர நிழலாகவும் இது இருந்திருக்கலாம். பஹீரா இறந்து அவரது இடத்தை நெஸ்டோர் நிரப்பியிருந்திருக்கலாம்.

அது எவ்வாறாயினும் மைஸரா கூறியவை மட்டுமே எமக்குக் கிட்டியுள்ளன. மடத்திலிருந்து வெளியே வந்த அந்த மதகுரு மைஸராவிடம் கேட்டார் : “ அம்மர நிழலில் இருக்கும் மனிதர் யார்? ” அவர் குறைஷிக் குலத்திலுள்ளவர் ” என்ற மைஸரா “ புனிதத் தலத்தின் காவலர்கள் அவர்கள் ” என சிறிது விளக்கமும் அளித்தார். நெஸ்டோர் கூறினார் : “ அம்மர நிழலில் அமர்ந்திருப்பவர் ஓர் இறைதூதரேயன்றி வேறல்ல ” - (இ.ஸா 1/1 1:83)


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்
 

No comments:

Post a Comment