Thursday, 29 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

தொழுகை

இறுதி வாக்கியத்துக்கொப்ப வானவர், இறைவசனம் என்பன குறித்துத் தமது மனைவியின் பின்னர், தம்மோடு மிக நெருங்கியவர்களாகவும் அன்புடையவர்களாகவும் இருந்தோருக்குக் கூறலாயினர் நபிகளார். இந்த இரகசியத்தை வெளியிட்டு விடக்கூடாது என்பது தவிர வேறு எதனையும் அன்னார் அவர்களிடம் வேண்டவில்லை. எனினும் இந்நிலைமை அதிக காலம் நீடிக்கவில்லை.

ஜிப்ரீல் ஒரு நாள் மக்காவின் மேலுள்ள மேட்டு நிலத்தில் தோற்றமளித்து தனது குதிகாலை நிலத்தில் அமிழ்த்தினார். அவ்விடத்தேற்பட்ட குழியிலிருந்து நீர் பிரவேசிக்கத் தொடங்கியது. அதன் பின்னர், தொழுகையின் முன்னர் ஒருவர் அங்க சுத்தி செய்வதெப்படி என்பதனை ஜீப்ரீல் தானே செய்து காட்டினார். நபிகளார், அவரது முன்மாதிரியைப் பின்பற்றித் தாமும் அவ்வாறே செய்தார்கள். அதன் பின்னர் ஜிப்ரீல் தொழுகையின் வெவ்வேறு நிலைகளை - நிற்றள், குனிதல், கீழே விழுந்து வணங்குதல் என்பனவற்றை அல்லாஹு அக்பர் - அல்லாஹ்வே மிகப்பெரியவன் எனும் இறைபோற்றலுடன் செய்து காட்டி, இறுதியில் அஸ்ஸலாமு அலைக்கும்- உங்கள் மீது சாந்தியுண்டாவதாக எனும் சோபனத்துடன் முடித்தார். இவற்றையும் நபிகளார் பின்பற்றிச் செய்தார்கள். ஜிப்ரீல் அன்னாரை விட்டுச் செல்ல, நபிகளார் வீடு திருப்பித் தம் மனைவி கதீஜாவுக்குத் தாம் கற்றனவற்றைக் கற்பித்தார்கள். இருவரும் ஒன்றாகத் தொழுதனர். இப்போது நபிகளாரின் மதம் ஆசார முறையிலான சுத்திகரிப்பும் தொழுகையுமாக அமைந்தது. கதீஜாவின் பின்னர், புதிய மதத்தைத் தழுவியோர் அலீ, ஸைத், தையிம் கோத்திரத்தைச் சார்ந்தவரும் நபிகளாரின் நண்பருமான அபூ பக்ர் ஆகியோராவார். அலி பத்து வயதினராயிருந்தார். ஸைதுக்கு மக்காவில் எவ்வித செல்வாக்கும் இல்லை. ஆனால் அபூ பக்ர் மக்களால் விரும்பப்பட்டவராகவும் மதிக்கப்பட்டவராகவும் விளங்கினார். பரந்த அறிவும், எளிமையான குண நலன்களும், எவருடனும் ஒத்துச் செல்லும் போக்கும் உடையவராயிருந்தார் அவர். பல் வேறு விடயங்கள் குறித்தும் ஆலோசனை பெறவென அவரை நாடிப் பலரும் வருவர். தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களிடம் அவர், இரகசியமாக நபிகளாரைப் பின்பற்றும்படி கூறி வந்தார். இவ்வாறு ஆரம்பத்தில் அபூபக்கருக்குச் செவி மடுத்தோரில் இருவர் அப்த்-அம்ர், அபூ உபைதா ஆகியோர். ஸுஹ்ரா கோத்திரத்தவரான அப்த்-அம்ர், நபிகளாரின் தாயாரது தூரத்து உறவினரான அவ்ப் என்பவரின் மகன். பனீ-அல்-ஹாரித் கோத்திரத்து அல்-ஜர்ராவின் மகன்-அபூ-உபைதா.

இவர்களுள் முன்னவரான அப்த்-அம்ரோடு இணைத்து, முக்கியதுவம் வாய்ந்ததோர் அம்சம் முன்னோடியாக அமைக்கப்பட்டது. இறைவசனங்களின் சிறப்பானதோரம்சமாக விளங்கியது, இரு தெய்வீக நாமங்கள். அர்-ரஹ்மான், அர்-ரஹீம் என்பன அவை, ராஹிம் - அருளாளன் எனும் சொல்லின் அழுத்தமாக அமைந்த ரஹீம் எனும் சொல் மிக்க அருளாளன் அல்லது எல்லையற்ற அருளாளன் என்பதைக் குறித்து நின்றது. அதனிலும் அழுத்தமான் கருத்தைக் கொண்டது ரஹ்மான் எனும் சொல். தான் குறிக்க வந்த பொருளின் அருமை காரணமாக அச்சொல் வழக்கிழந்து போயிருந்தது.

புதிய மதத்தினது தெய்வீக மேன்மையின் தாத்பரியங்களை விளக்க வேண்டிய அவசியத் தேவையின் காரணமாக இந்த ரஹ்மான் எனும் சொல்லை இறைவசனங்கள் மீட்டு நிலை நிறுத்தலாயின. அனைத்து அருளாளன் எனும் அர்-ரஹீம் என்பதற்கும் கூடிய ஆழமான கருத்தையுணர்த்தும் அர்-ரஹ்மான். அருளின் அடிப்படை மூலத்தையே குறிப்பதாக, இறைவனின் எல்லையற்ற தனிப்பெரும் அருட்குண நலன்களைக் குறிப்பதாக அமைந்தது. அல்லாஹ் எனும் இறை நாமத்தின் சமகருத்தைச் சுட்டுவதாகவே இச்சொல் வழங்கலாயது. 


“ நீங்கள் அல்லாஹ் என்றழையுங்கள்: அல்லது ரஹ்மான் என்றழையுங்கள். 

( இவ்விரண்டில் ) எப்பெயர் கொண்டு நீங்கள் அவனை அழைத்த போதிலும் 

அவனுக்கு அழகான (இன்னும்) பல திருநாமங்கள் இருக்கின்றன ” 

அல் குர்ஆன் 17:110


அல்லாஹ்வின் இவ்வழகிய திருநாமம், நபிகளாருக்கு மிக்க விருப்பமானதொன்றாக இருந்தது. அப்த்-அம்ர் - அம்ரின் அடிமை - என்ற பெயர் மிக அநாகரிகமானதொன்றாக இருந்ததால் இப்புதிய விசுவாசியின் பெயரை அப்த்-அர்-ரஹ்மான் - அளவற்ற அருளாளனின் அடிமை - என நபிகளார் மாற்றம் செய்தார்கள். அப்த்-அர்-ரஹ்மான் எனப் பெயர் மாற்றம் பெற்றவர் அவ்பின் மகன் மட்டுமல்ல.


ஆரம்ப நிலையில் ஏற்பட்ட மதமாற்றங்களில் சில, மனித முயற்சியின் காரணமாகவே நிகழ்ந்தனவெனக் கூறுவற்கில்லை. அபூ பக்ர், மக்கா நகர் முழுவதும் கனவுகளின் பலன் கூறுவதில் திறமை வாய்ந்தவராகக் கருதப்பட்டிருந்தார். ஒரு நாள் காலை, பலம் வாய்ந்த ஷம்ஸ் கோத்திரத்தவரான ஸாத்- இப்ன்-அல்-ஆஸ் என்பாரின் மகன் காலித் எதிர்பாராத விதமாக அபூபக்ர்ரைக் காண வந்தார். அச்சம் நிறைந்ததோர் அனுபவத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் மீண்டு கொள்ளாத கலவர நிலையை அவரது முகம் உணர்த்தி நின்றது. அன்றைய இரவு தான் கண்டதொரு கனவு தன்னால் விளங்கிக் கொள்ள முடியாததொன்றானாலும் கூட முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக இருக்கவேண்டும் எனக் கருதி அதனை விளக்கத் தொடங்கினார் காலித்.

அபூ பக்ர்ரால் அந்தளவுக்கு விளக்கம் அளிக்க முடியுமா? எல்லை கண்டு கொள்ள முடியாத தீயால் நிரம்பியதொரு பெருங்குழியின் ஓரத்தில் அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது தந்தையார் வந்து அவரை அக்குழியினுள் தள்ளி விட முனைந்தார். இருவரும் தடுமாறிக் கொண்டிருந்த பயங்கரமான அச்சூழ்நிலையில் தமது தந்தையாரின் முயற்சிக்கு எதிராகத் தனது இடுப்பை இரு கரங்கள் உறுதியாகப் பற்றி நின்றமையைக் கண்டார் காலித். திரும்பிப் பார்த்த பொழுது, அவரைக் காக்க வந்திருந்தவர் ‘அல் அமீன்’ - அப்த்- அல்லாஹ்வின் மகன் முஹம்மத் என்பதைக் கண்டார் அவர். அத்தோடு விழித்தெழுந்தார் காலித். 

அபூபக்ர் கூறினார் : “ உமக்கு நன்மையே உண்டாகுக, உம்மைக் காப்பாற்றிய அவர் அல்லாஹ்வின் தூதராவார். அவரைப் பின்பற்றுவீராக, அவரைப் பின் தொடர்ந்து இஸ்லாத்தில் இணைந்து கொடிய தீயில் விழுவதினின்றும் உம்மைக் காத்துக் கொள்வீராக! ”. காலித் நேரே நபிகளாரிடம் சென்றார். தனது கனவை அன்னாரிடம் கூறி, அன்னாரின் மார்க்கம் என்ன, தான் செய்ய வேண்டுவதென்ன என்பனவற்றை வினவினார். நபிகளார் கற்பித்தவற்றை ஏற்று இஸ்லாத்தில் நுழைந்து கொண்ட காலித் தம் குடும்பத்தாரிடமிருந்தும் அதனை இரகசியமாகவே வைத்திருந்தார். - ( இ.ஸா. 1/1 : 68 )


இதே கால அளவில் தான் அப்த்- ஷம்ஸ் கோத்திரத்தின் வணிகர் ஒருவர் ஸிரியாவிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கையில் பாலை நிலத்தின் ஒரு குரலினால் உறக்கத்திலிருந்தும் விழித்தெழச் செய்யப்பட்டார் : 

“ உறங்குபவர்களே விழித்தெழுங்கள்! உறுதியாக மக்காவில் அஹ்மத் தோற்றம் பெற்றுள்ளார் ” - இ.ஸா 3/1:37

இவ்வணிகர் உமையாவின் அப்பான் என்பாரின் மகனான உத்மான். அத்தோடு தாய் வழியில் அவர் அப்த்-அல்-முத்தலிபின் புதல்வியருள் ஒருவரும், நபிகளாரின் மாமியாருமான உம்ம் ஹகீம்-அல் பய்தாவின் பேரனுமாவார். இவ்வார்த்தைகள் அவரது மனதில் ஆழமாகப் பதிந்தன. எனினும் ‘ தோற்றம் பெற்றுள்ளார் ’ என்பதனையோ, ‘அஹ்மத் ’ ( மிக்க போற்றுதலுக்குரியவர் ) என்ற நாமம் , ‘முஹம்மத்’ ( போற்றுதலுக்குறியவர் ) என்பாரைக் குறிப்பது என்பதையோ அவர் அறியாதிருந்தார். 
மக்காவை அடையுமுன்னர் தையிம் கோத்திரத்து தல்ஹா என்பவர் உத்மானை முந்திச் சென்றார், தல்ஹா அபூபக்ரின் ஒன்று விட்ட சகோதரருள் ஒருவர். அவர் போஸ்த்ராவினூடாக வந்து கொண்டிருக்கும் போது அங்கு எதிர்பட்ட ஒரு மதகுரு “ புனிதத்தலத்தின் மக்களிடையே அஹ்மத் தோற்றம் பெற்று விட்டாரா? ” என வினவினார். “யார் அந்த அஹ்மத்? ” என்றார் தல்ஹா. “ அப்த்-அல்-முத்தலிபின் மகனான அப்த்-அல்லாஹ்வின் மகனாவார் அவர். இதுவே அவர் தோற்றம் பெறும் மாதமுமாகும். அவரே இறைதூதர்களில் இறுதியானவராகவும் இருப்பார். ” என்றார் அந்த மதகுரு. தல்ஹா இந்த வார்த்தைகளை உத்மானிடம் கூறினார். உத்மானும் தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். 

மக்காவையடைந்ததும், தனது உடன் பிறந்த சகோதரரும், தமது சிந்தையைத் தற்போது கவர்ந்துள்ளவரின் நெருங்கிய நண்பரெனக் கருதப்பட்டவருமான அபூபக்ரைச் சந்திக்கலாம் என தல்ஹா தெரிவித்தார்.

அபூபக்ரிடம் சென்ற அவர்கள் விவரங்களை விளக்கிக் கூறினர். உடனே அவர், இவர்களை நபிகளாரிடம் அழைத்துச் செல்ல, அங்கு ஸிரிய மதகுருவின் வார்த்தைகளையும், பாலை நில அசரீரி ஒலியினையும் மீண்டும் விவரித்துப் பின்னர் இருவரும் தம் விசுவாசத்தைப் பிரகடனம் செய்தனர்.


நான்காவது மதமாற்றமும், அது ஏற்பட்ட விதத்தில் முக்கியத்துவமற்றதொன்றாக இருக்கவில்லை. ஸுஹ்ராக் குழுவினரின் அப்த்-அல்லாஹ்-இப்ன்-மஸ்ஊத்என்பாரைக் குறித்தது அது. அவரே கூறினார் :

“ அப்போது தான் நான் வாலிப பிராயத்தை எட்டியிருந்தேன். உக்பா-இப்ன்-அபீமுஅய்த் என்பாரின் மந்தைகளை நான் மேய்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் நபிகளாரும் அபூபக்ரும் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தார்கள். ‘ அருந்துவதற்கு பால் ஏதும் கிடைக்குமா? ’ என வினவினர் நபிகளார். இம்மந்தைகள் என்னுடையனவல்லவென்றும் எனது பொறுப்பில் விடப்பட்டனவேயென்றும் அதனால் அருந்துவதற்குப் பால் ஏதும் தர என்னால் முடியாது என்றும் கூறினேன். நபிகளார் ‘ ஆண் செம்மறியேதும் அண்டாத பெண் செம்மறியேதும் உம்மிடம் உள்ளதா? ’ என வினவினார்கள். ‘ இருக்கிறது ’ எனக் கூறி அதனை அவர்களிடம் கொண்டு வந்தேன். அதைக் கட்டி வைத்து, அதன் பால் மடியில் கைவிட்டுப் பிரார்த்தனை செய்தார்கள். உடனே அதன் பால்மடி நிரம்பியது. பாத்திரமொன்றனைப் போல உள்நோக்கி வளைந்திருந்த சிறு கற்பாறை ஒன்றனை அபூபக்ர் கொண்டு வந்தார். நபிகளார் அதில் பால் கறந்தார்கள். நாம் அனைவரும் அருந்தினோம். பின்னர் அவர் பால்மடியை நோக்கி ‘ வரண்டு போ என்றார்கள் ’ அது வரண்டு போயிற்று. " - ( இ.ஸா 3/1 107 ) 

சில நாள் கழித்து அப்த்-அல்லாஹ் நபிகளாரிடம் சென்று இஸ்லாத்தினுள் நுழைந்தார். மிகவும் குறுகிய காலத்துக்குள்ளேயே அவர் நபிகளாரிடமிருந்து எழுபது ஸுறாக்கள் ( குர்ஆன் சம அளவினல்லாத 114 ஸுறாக்களைக் கொண்டுள்ளது. மிக நீளமான ஸூறா 285 வசங்களையும், மிகக் குறுகியது 3 வசனங்களையும் கொண்டுள்ளன. ) வரை மனனம் செய்து கொண்டார். மனனம் செய்வதில் தனித்திறன் பெற்றவராக பின்னைய காலங்களில் குர்ஆனை ஓதுவதில் மிக்க திறம் படைத்த, அதிகார பூர்வமானோரில் ஒருவராக விளங்கினார் அப்த்-அல்லாஹ்-இப்ன்-மஸ்ஊத்.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment