Friday, 30 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


தொழுகை…( தொடர்… )



வானலோகத்திருந்தெழுந்த திடீர் அமைதி குறித்து ஆழ்ந்தகவலை கொண்டனர் நபிகளார். எனினும் இறைவசனங்களைப் பெற்றுக் கொள்ளும் பாரிய தாக்கத்தின் காரணமாக அன்னாரின் இதயம் இன்னமும் நடுங்குறுவதாயிருந்தது. இதன் தாக்கத்தை அல்லாஹ்வே இன்னும் இறக்கப்படாத குர்ஆன் வாசகத்தில் கூறுகின்றான்:

“ யாதொரு மலையின் மீதும் நாம் இந்தக் குர்ஆனை இறக்கி வைத்தால், அது

அல்லாஹ்வின் பயத்தால் நடுங்கி வெடித்துப் பிளந்துப் போவதை நிச்சயமாக நீர் கண்டிருப்பீர். ”

அல்குர்ஆன் : 59:21
( தன்மையிலிருந்து படர்க்கைகான சடுதியான மாற்றம் நாம்.......அல்லாஹ், குர்ஆனில் பரவலாக வருவது.)


என்னைப் போர்த்தும்! என்னைப் போர்த்தும்! என வேண்டிக் கொண்ட அன்னாரது நிலைமையின் உணர்வுகள் அடிக்கடி எழலாயின. ஒரு நாள் இரவு, தாம் போர்த்தியவராக இருந்த போது, அன்னாரின் தபிமையில், ஓர் இறைவசனம் அருளப்பட்டது. இது வரை அருளப்பட்டனவற்றுள் அவசரமானதாகவும் கடுமையானதாகவும், நியாயத் தீர்ப்பு நாள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கும் படியாகவும் அது வந்தது.

“ போர்த்தியிருப்பவரே! நீர் எழும்! (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்!

உமதிறைவனைப் பெருமைப்படுத்தும்! உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்துக்

கொள்ளும்! அசுத்தங்களை வெறுத்துவிடும்...

எக்காளம் ஊதப்படும் பட்சத்தில், அந்நாள் மிகக் கஷ்டமான நாளாகும். (அந்நாள்)

நிராகரிப்போர்க்கு எளிதானதன்று. ”. - அல்குர்ஆன் : 74 : 1-10

மற்றுமொரு நாள் இரவு, நபிகளாரதும், அன்னாரைப் பின்பற்றியோரதும் தொழுகைகளின் அவசியத்தைப் பற்றிய கட்டளைகள் வெளியிடப்பட்டன. தாம் சுமக்கவேண்டிய பொறுப்புகளின் தாக்கம், கடமைப்பாடுகளின் பளு என்பன குறித்த நபிகளாரின் எண்ணங்கள் அனைத்தையும் உறுதிப்படுத்துவனவாகவும் இவை அமைந்தன.

“ போர்வையைப் போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் நீர் (தொழுகைக்காக எழுந்து)

நில்லும். (முழு இரவிலுமல்ல; அதிலொரு) சொற்ப பாகம். (அதாவது) அதில் பாதி (நேரம்)

அதில் நீர் சிறிது குறைத்துக் கொள்ளலாம். அல்லது அதில் சிறிது கூட்டியுங் கொள்ளலாம்.

(அதில்) இந்தக் குர்ஆனை நன்கு திருத்தமாக ஓதும். நிச்சயமாக நாம் அதி சீக்கிரத்தில், மிக்க

உறுதியான ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம். ” - அல்குர்ஆன் : 73 : 1-5


அதே தொடரிலேயே கட்டளைகளும் பிறப்பிக்கப்பட்டன.

“ நீர் அவனளவில் முற்றிலும் திரும்பி அவனுடைய திரு நாமத்தைத் துதி செய்து

கொண்டிருப்பீராக! அவனே கீழ்த்திசைக்கும் மேல் திசைக்கும் இறைவன். அவனைத் தவிர

வேறு நாயன் இல்லை. ஆகவே நீர் ( உமது ) பாதுகாவலான எடுத்துக் கொள்ளும். ”

- குர்ஆன் : 73 : 8 - 9

பின்னரும் பல இறைவசனங்கள் அருளப்பட்டன. தொனியில் அவை சாதுவானவையாயிருந்தன. அவை ஏற்கெனவே நபிகளாருக்கு கொடுக்கப்பட்ட உறுதி மொழிகளை மேலும் வலுப்படுத்துவனவாயமைந்தன.

ஒரு முறை, எப்போதும் போல நபிகளாருக்கு மட்டுமே தோற்று வகையில் ஜிப்ரீல் வந்து, “ கதீஜாவுக்கு அல்லாஹ்வின் சாந்தியை அளிப்பீராக ” என்றார். நபிகளார் கதீஜாவை நோக்கி “ ஓ கதீஜா! இதோ ஜிப்ரீல் அல்லாஹ்வின் சாந்தியை உமக்கு எடுத்து வந்தவராக இருக்கின்றார் ” என்றார்கள். திகைத்திருந்த கதீஜா பேச நாவெழுந்த போது கூறினார் :
“ அல்லாஹ்வே சாந்தி. அவனிடமிருந்தே சாந்தி வருகின்றது. ஜிப்ரீல் மீது சாந்தி உண்டாவதாக. ” - ( இ.ஹி. 156 )


புதிய மதத்தினை ஆரம்பத்திலேயே பின்பற்றியவர்கள், நபிகளாருக்கிடப்பட்ட கட்டளைகள் அனைத்தையும் தமக்கிடப்பட்டனவாகவே கொண்டனர். எனவே அன்னாரைப் போலவே அவர்களும் இரவுகளில் நீண்டநேரம் விழித்திருந்து அல்லாஹ்வை வழிபட்டார்கள்.

வழக்கமான தொழுகைகளைப் பொறுத்தமட்டில், இப்போது தம்மை சுத்திகரிப்புச் செய்து கொள்வதுமட்டுமன்றி, தமது உடைகள் கூட எவ்விதமான அசுத்தங்களுமற்றனவாக இருக்க வேண்டுமென்பதில் மிக்க கவனம் செலுத்தலாயினர். அத்தோடு இதுவரை அருளப்பட்டிருந்த இறை வசனங்களை மனனம் செய்து கொள்வதில் தீவிர ஈடுபாடு காட்டினர். தமது தொழுகைகளின் போது அவற்றை அவர்கள் ஓத முடிந்தது. இறைவசனங்கள் இப்போது பெருமளவில் அருளப்படலாயின. நபிகளார் அவற்றை உடனுக்குடன் தம்மோடு இருந்தவர்களுக்குக் கூறினார்கள். அவை ஒவ்வொருவரையும் அடைந்து மனனம் செய்யப்படவும் ஓதப்படவுமாயின. நீண்ட, துரிதமாக வளர்ந்து செல்லும் பிரார்த்தனா வாசகங்களாயமைந்த அவை, இவ்வுலகியல் அம்சங்களின் நிலையிலாத் தன்மையைத் தெளிவுற விளக்கின. மரணம், மீள உயிர்ப்பித்தல், இறுதித் தீர்ப்பு நாள், சுவர்க்கம், நரகம் என்பனவெல்லாம் விளக்கப்பட்டன. அனைத்துக்கும் மேலாக, அல்லாஹ்வின் மகத்துவத்தை, பிரித்துக்காண முடியாத அவனது ஏகத்துவத்தை, சத்தியத்தை, ஞானத்தை, குணவிசேடங்களை, அன்பை, அருளை, அதிகாரத்தை எல்லாம் விளக்கி நின்றன. தொடர்ந்து அல்லாஹ்வின் அடையாளங்களை - இயற்கையின் அற்புதங்களை - அவை ஒன்றுக்கொன்று முரன்படாமல் சிறந்ததோர் ஒழுங்கின் கீழ் இயங்கி வரும் முறைமையையெல்லாம் காட்டித் தனியொருவனது படைப்புகளாக அவை அமைந்துள்ளமைக்குத் தக்க சான்றுகளாக அமைந்தன. பல் தரப்பட்டவற்றிடை காணப்படும் ஓர்மை பற்றிய அடையாளமே, அமைதியை, ஒற்றுமையைச் சுட்டுவது, குர்ஆன், அவ்வொற்றுமையையே மனிதனது தியானத்துக்குரிய ஓர் அம்சமாகக் காட்டுகின்றது.


விசுவாசிகளல்லாதோரின் பகைமைத்துவ சமுகமில்லாத இடங்களில் விசுவாசிகள் தத்தமக்கிடையே சோபனம் கூறுபவர்களாக, சுவர்க்கவாசிகளின் சோபனம் என ஜீப்ரீல், நபிகளாருக்குக் கூறிய வசனங்களைப் பிரயோகித்தனர். ‘ அஸ்ஸலாமு அலைக்கும் ’ ( உங்கள் மீது சாந்தி உண்டாவதாக ) எனும் சோபனத்துக்கு மறுமொழியாயமைந்தது, ‘ வ அலைக்கும் ஸலாம் ’ ( அவ்வாறே உங்கள் மீதும் சாந்தியுண்டாவதாக ). சோபன வாசகத்தில் காணப்படும் பன்மைப் பிரயோகம், சோபனம் கூறப்பட்டவரது பாதுகாவலரான இரு வானவர்களையும் உள்ளடக்குவதாயமைந்தது. அர்ப்பணம் செய்தல், நன்றி கூறல் முதலியவற்றுக்கான புனித வாசகங்கள். அவர்களது வாழ்விலும் வாக்கிலும் சிறப்பிடம் வசிக்கத் தொடங்கின. குர்ஆன் நன்றி பாராட்டுதலின் அவசியத்தை வற்புறுத்தி வந்துள்ளது. நன்றி கூறும் போது, சர்வலோகங்களுக்கும் நாயனான அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் எனக் கூறினர். அர்ப்பணம் செய்தலின் மூலவசனமாக அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகின்றேன் எனக் கூறலாயினர். குர்ஆனின் ஒவ்வொரு ஸூறாவினதும் ( ஒரேயொரு ஸூறா - கு. 9 - அர்ப்பண வசனங்களின்றி ஆரம்பமாகின்றது. எனினும் அந்த ஸூறா இன்னும் அருளப்படவில்லை ) முதல் வசனம் இதுவாகவே இருந்தது. நபிகளாரின் முன்மாதிரியைப் பின்பற்றிக் குர்ஆனின் எந்தவொரு பாகத்தைத் தொடங்கும் போதும் இவ்வசனத்தைக் கொண்டே ஆரம்பித்தனர். எந்தவொரு புனித கருமத்தையும், எந்த ஒரு நடவடிக்கையையும், முயற்சியையும் கூட அவ்வாறே ஆரம்பித்தனர். புதிய மதம், இழிவான, இறைதூஷணையான எந்த ஓர் அம்சத்தையும் தன்னுள் கொள்ளவில்லை.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment