Friday, 16 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

சிறப்பு மிக்கதோர் ஒப்பந்தம்



ஸிரியாவில் தனது வர்த்தக நடவடிக்கைகளை முடித்துக் கொண்ட அபூதாலிப், தனது தம்பி மகனுடன் மக்கா வந்து சேர்ந்தார். முன்னர் போலவே சிறுவரும் தனது தனிமை வாழ்வைத் தொடரலானார். அப்பாஸ், ஹம்ஸா ஆகியோரைப் போல, இவரையும் யுத்த ஆயுதங்களை உபயோகிக்கப் பழக்கினர் பெரிய தந்தையர். ஹம்ஸா இயல்பாகவே பெரிய உருவத்தினராக, மிக்க உடல் வலிமை வாய்ந்தவராக விளங்கினார். வாள் வீச்சிலும் மல்யுத்தத்திலும் சிறந்திருந்தார் அவர். சாதாரண உயரத்தினராகவும், சாதாரண பலம் வாய்ந்தராகவும் விளங்கிய முஹம்மத், வில் வித்தையில் கைதேர்ந்தவராயிருந்தார். தமது முன்னோர் இப்றாஹீம், இஸ்மாயீல் போல சிறந்த வில் வீரனாக வரும் தகைமைகள் அனைத்தும் கொண்டிருந்தார் அவர். அவருடைய பார்வைத் திறன் இதற்குத் தக்கதொரு துணையாக நின்றது. ப்ளயாடெஸ்ஸின் உடுத்தொகுதியில் பன்னிரண்டுக்குக் குறையாத நட்சத்திரங்களை எண்ணக் கூடியவர் எனப் பெயர் பெற்றிருந்தார் அவர்.

இந்த வருடங்களில் குறைஷிகள் எந்தவொரு பெரிய யுத்தங்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை. ‘ புனிதமிக்க யுத்தம் ’ என்ற பெயரில் சிறிய கலவரங்களும், தாக்குதல்களுமே தொடர்ந்து வந்தன. புனித மாதங்களின் போது ஆரம்பித்தமையாலேயே இந்த யுத்தத்துக்கு அப்பெயர் வழங்கியது. கினானா கொத்திரத்தைச் சார்ந்த துன்மார்க்கனான ஒருவன், கபடமான முறையில், நஜ்தின் ஹவாஸின்களது ஆமிர் கோத்திரத்தவர் ஒருவரைக் கொலை செய்து விட்டான். பின்னர், அவன் கைபர் பிரதேசத்தில் இலகுவில் ஊடுருவ முடியாததொரு கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்து கொண்டான். தொடர்ந்து நடந்த சம்பவங்கள் வழக்கமான பாலை நில மரபுகளையே கொண்டிருந்தன.
கெளரவம் பழிவாங்குதலை வேண்டி நின்றது. எனவே மரணமுற்றவனது கோத்திரத்தார் கொலைகாரனைக் கொண்ட கினானாவைத் தாக்கினர். ஓரளவு மதிப்பிறங்கிய வகையில், குறைஷியரும் கினானாவின் சார்பாக இதில் கலந்து கொண்டனர். 

இந்தப் பிரச்சினை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்தது. எனினும் உண்மையான யுத்தம் நடந்தது மொத்தம் ஐந்து நாட்கள் மாத்திரமே. ஹாஷிம் கோத்திரத் தலைவராக அப்போதிருந்தவர் ஸுபைர். அபூதாலிபைப் போல இவரும் முஹம்மதின் தந்தை அப்த்-அல்லாஹ்வின் ஒரு தாய் வயிற்றுச் சகோதரர். ஸுபைரும் அபூதாலிபும் தமது தம்பி மகனை இந்த யுத்த ஆரம்பத்தின்போது கூட்டிச் சென்றனர். எனினும் அவர் மிகவும் இளையவராக இருந்தமையினால் யுத்தத்திலீடுபடுத்தப்படவில்லை. எதிரிகளின் அம்புகளில் குறி தவறியனவற்றினைப் பொறுக்கி மீண்டும் எறியவென தமது பெரிய தந்தையரிடம் எடுத்துக் கொடுக்கும் பணியில் மட்டும் அவர் ஈடுபடுத்தப்பட்டார். - (இ.ஹி 119) 

பின்னைய யுத்தங்களில் ஒன்றன்போது குறைஷியரும் அவர்களைச் சார்ந்தோரும் தோல்வியுறக்கூடியதொரு நிலையில் இருந்தபோது அவர் வில்லெறிய அனுமதிக்கப்பட்டார்: அவரது திறமையும் வீரமும் பெரிதும் புகழப்பட்டன - ( இ.ஸா 1/1:81)


நிலையான குடியமைப்பைக் கொண்டிருந்தவர்கள், பாலை நில மரபுகள் மதிப்பீடொன்றனை மேற்கொள்ளவும், அதன் வழி வந்த தமது எண்ணங்களை பிறரிடையே பரப்பவும் இந்த யுத்தம் துணை செய்தது. குறைஷிகளின் தலைவர்களில் பலர், ஸிரியா சென்று, ரோம சாம்ராச்சியத்தின் நீதி முறைகள் பற்றித் தெரிந்திருந்தனர். அபிஸீனியாவிலும் யுத்தங்களின்றியே நீதி பெறக் கூடுமாயிருந்தது. ஆனால் அறேபியாவில், பாதிப்புக்குள்ளானவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ நீதி பெற எந்தவிதமான சட்ட விதிமுறைகளும் இல்லை. எனவே இப்புனிதமிழந்த யுத்தமும், முன்னைய பல போராட்டங்களில் போலவே, இவ்வாறானதொரு நிலைமை மீண்டும் மீண்டும் ஏற்படாதிருக்க ஆவன செய்ய வேண்டுமென்ற எண்ணத்தைப் பலரிடையேயும் வலுப்படுத்துவதாய் அமைந்தது. ஆனால் இம்முறை, முடிவுகள் வெறுமனே சிந்தனைகளுடனும் வார்த்தைகளுடனும் நின்று விடவில்லை. குறைஷிகளைப் பொறுத்தமட்டில் இவ்வாறான பிரச்சினைகட்கு நிலையான தீர்வொன்றனைக் காணும் எண்ணம் உறுதியாயிற்று.


நீதி பற்றிய அவர்களது உணர்வினைப் பரிசீலிக்கும் நிகழ்ச்சியொன்று இந்த யுத்தம் முடிந்த ஒரு சில வாரங்களுக்குள் நடந்தது.

யெமன் துறைமுகமான ஸாபித்திலிருந்து வந்த ஒரு வர்த்தகர், சில பெறுமதி வாய்ந்த பொருட்களை ஸஹ்ம் கோத்திரத்தவர் ஒருவருக்கு விற்பனை செய்தார். இவற்றைப் பெற்றுக் கொண்ட அந்த ஸஹ்மி பின்னர் தான் ஒப்புக் கொண்ட தொகையைக் கொடுக்காது மறுத்து விட்டார். ஏமாற்றப்பட்ட அந்த வர்த்தகர் மக்காவுக்குப் புதியவர். தான் உதவிக் கோரிச் செல்ல யாரையும் அறியாதவர். அவர் தொடர்பு கொண்டிருந்த எந்த ஒரு கோத்திரமும் அங்கில்லை. இவையனைத்தையும் அந்த ஸஹ்மீ நன்கறிந்திருந்தார். எனினும் அந்த யெமன் வாசி தளர்ந்து விடுவதாக இல்லை. அபூ குபைஸ் குன்றின் மீதேறி, குறைஷிகள் அனைவரையும்விளித்து, மிகவும் உக்கிரமமான முறையில் அவர் நீதி கோரி நின்றார். ஸஹ்ம் கோத்திரத்தவரோடு மரபு ரீதியாக ஒப்பந்தங்கள் ஏதும் செய்திராத கோத்திரங்கள் பலவும் உடனடியாகவே இப்பிரச்சினைக்கு முடிவு காண முன் வந்தன. 
கோத்திரப் பிரிவினைகள் எவ்வாறிருந்தாலும் குறைஷிகள் அனைவரும் ஒற்றுமைப்பட்டிருப்பதில் கூடிய கவனம் செலுத்தினர்.என்றாலும் அவர்களை முன்னர் பிரித்து வைத்திருந்த சம்பவம் இன்னும் அடிமனத்தில் இருக்கத்தான் செய்தது. குஸையின் பின்னர், குறைஷிக் குலத்தார் வாசனையாளர்கள், கூட்டுறவாளர்கள் எனப் பிரிந்திருந்த சம்பவமே அது. ஸஹ்ம் கோத்திரத்தார் கூட்டுறவாளர்களைச் சார்ந்தோராயிருந்தனர். வாசனையாளர்களது குழுவின் அப்போதைய தலைவர்களுள் ஒருவர், தையிம் கோத்திரத்து தலைவராயிருந்த அப்த்-அல்லாஹ்-இப்ன்-ஜூத்ஆன். நீதியை விரும்பும் அனைவரும் கலந்துரையாடக் கூடியதொரு சபா மண்டபமாகத் தனது வீட்டையளிக்க முன்வந்தார் அவர். வாசனையாளர்களுள் அப்த்-ஷம்ஸ், நவ்பல் கோத்திரத்தவர்கள் மாத்திரமே அதில் கலந்து கொள்ளாதிருந்தனர். ஹாஷிம், முத்தலிப், ஸுஹ்ரா, அஸத், தையிம் ஆகிய கோத்திரங்கள் நன்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருந்தன. கூட்டுறவாளர் பிரிவிலிருந்து அதீ கோத்திரத்தாரும் கலந்து கொண்டனர். 
நல்லதொரு கலந்துரையாடலின் பின்னர், பலமிழந்தவர்களைப் பாதுகாக்கவும், நீதியை நிலை நிறுத்தவும் வீரியம் பொருந்தியதோர் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அனைவருமாக கஃபாவுக்குச் சென்றனர். கருநிறப் பாறையின் மீது நீரை ஊற்றி, வடியும் நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து, அதனை புனித நீர் எனக் கொண்டு ஒவ்வொருவரும் சிறிது சிறிதாக அருந்தினர். பின்னர் தமது வலக்கரத்தை தலையின் மீது உயர்த்தியவர்களாகச் சபதமொன்று செய்தனர். அன்று முதல், மக்கா நகரில் எந்த ஓர் அநீதியிழைக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்டவருக்குச் சார்பாக தாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நீதி நிலைபெறும் வரை பாதித்தவருக்கெதிராக நிற்பர் என்பதே அது. பாதிக்கப்பட்டவர் குறைஷிக் குலத்தவராயினும் சரி, வெளியே இருந்து வந்தவராயினும் சரியே. 

பின்னர் ஸஹ்மீ தனது கடனைச் செலுத்தப் பலவந்தப்படுத்தப்பட்டார். இவ்வொப்பந்தத்தில் கலந்து கொள்ளாத கோத்திரங்கள் கூட ஸஹ்மிக்கு ஆதரவாக முன் வரவில்லை.

தையிம் தலைவரோடு, ஹாஷிம் கோத்திரத்து ஸுபைர் இவ்வேற்பாட்டின் கர்த்தாக்களில் ஒருவராயிருந்தார். அவர், தமது தம்பியின் மகன் முஹம்மதையும் இவ் ஒப்பந்தத்திற்கு அழைத்து வந்திருந்தார். இச்சபதத்தின் போது பங்கு பெற்ற முஹம்மத் பின்னர் ஒரு காலத்தில் கூறினார்: “ அப்த்-அல்லாஹ்-இப்ன்-ஜுத்ஆனுடைய இல்லத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த உன்னதமான ஒப்பந்தத்தின்போது நானும் பிரசன்னமாயிருந்தேன். செந்நிற ஒட்டகக் கூட்டம் ஒன்றைப் பிரதியாக தருவதாயிருப்பினும் நான் அதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டேன். இப்போது இஸ்லாத்தில் இருக்கும் நான் அதில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டாலும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொள்வேன் ” -(இ.இ. 86)

அங்கு வந்திருந்தவர்களில் ஒருவர், ஜுத்ஆனின் ஒன்றுவிட்ட சகோதரர், தையிம் வம்சத்தவரேயான அபூ-குஹாபா, அவர் தன்னுடன், முஹம்மதிலும் இரண்டு வயது இளையவராயிருந்த தனது மகனையும் அழைத்து வந்திருந்தார். முஹம்மதின் மிக நெருங்கிய நண்பராக அமையவிருந்தார், அபூ-குஹாபா கூட்டி வந்த மகன் அபூபக்ர்.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

No comments:

Post a Comment